உண்மையான சீடத்துவ வாழ்வு எது | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் எட்டாம் புதன்
I: சீஞா: 36: 1-2, 4-5,9-17
II: தி.பா: 79: 8, 9, 11,13
III : மாற்: 10: 32- 45

ஒரு ஊரில் கிறிஸ்தவர் ஒருவர் பங்குத்தந்தையிடம் "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும்தான் இருக்கவேண்டும். துன்பம் என்பதே இருக்கக்கூடாது " என்று கூறினார். அதற்கு அந்தப் பங்குதந்தை "துன்பம் வேண்டாம் என்று கூறினால், நீ உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது " என்று கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது இன்பத்தை மட்டும் மையப்படுத்தியது அல்ல; இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் கிறிஸ்தவ வாழ்வு. கிறிஸ்தவத்தின் மாட்சி இயேசு பட்ட சிலுவையின் துன்பத்தில் தான் உதயமானது. நாம்  எப்படிப்பட்டச் சூழலிலும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல்,இயேசுவைப் போல மன உறுதியோடு வாழ வேண்டும்.

துன்பத்தைக் கண்டு  தாய் பிள்ளை வேண்டாமென நினைத்திருந்தால், ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்காது. வாழ்க்கையில் சாதித்த மாமனிதர்கள் , துன்பத்தைக் கண்டு பயந்திருந்தால் வாழ்க்கையில் சாதனைகள் செய்ய முடிந்திருக்காது.  இயேசுவும் கொடுமையான சிலுவை எனும் துன்பத்தை ஏற்றதால் தான்,  இன்று நமக்கு மீட்பு கிடைத்துள்ளது.

இந்த கொரோனா தொற்றுநோய் மக்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,  இன்றைய நற்செய்தி நமக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது.
 இருந்தபோதிலும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் கூட கடவுள் நம்மை பாதுகாத்து வருகின்றார். நமக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வருகின்றார் . சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் எண்ணற்ற நபர்களைக் குணப்படுத்தி வருகிறார். இது கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் அருளையும் சுட்டிக்காட்டுகின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தார். எந்த ஒரு மனிதரும் தன் சாவை துணிச்சலோடு முன்னறிவிப்பதில்லை. இயேசு இலட்சியத்திற்காகத் தன் உயிரைக் கூட இழக்கத் துணிந்தார்.  இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினால், தங்களுக்கு பெயரும் பதவியும் கிடைக்கும் என்று தவறாக புரிந்து கொண்டனர். அதன் வெளிப்பாடுதான் செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இருவரும் இயேசுவிடம் வலப்புறமும் இடப்புறமும் இருக்கைகள் கேட்ட நிகழ்வு.  இயேசு ஆட்சி உரிமை பெறும் பொழுது, தாங்கள் இருவரும் வலப்புறமும் இடப்புறமும் அமர வைக்கப்பட்ட  வேண்டும் என்று மேலோட்டமான பார்வை கொண்டவராக அவர்கள் இருந்தனர். ஆனால் ஆண்டவர் இயேசு அவர்களின் புரிதலற்ற கேள்வியை புரிந்துகொண்டு "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை " என்று கூறியுள்ளார்.

இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்றால் நாம் துன்பப்பட வேண்டும். துன்பத்தின் வழியாகத்தான் இறைமாட்சியையும் மாண்பையும் பெறமுடியும். புனித அல்போன்ஸ் அவர்கள் தன் வாழ்வில் துன்பப்படும் பொழுது "எனக்கு துன்பத்தை தாரும். மேலும் அதை எதிர்கொள்ள கூடிய ஆற்றலையும் தாரும் " என்று இறைவனிடம் வேண்டுவது வழக்கம்.

நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் கிறிஸ்துவின் நற்செய்தி மதிப்பீடுகளின் பொருட்டு நாம் பற்பலத் துன்பங்களைச் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்டச் சூழல்களில் துன்பத்தைக் கண்டு பயப்படாமல், அதை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை இறைவனிடம் கேட்போம். அப்பொழுது    நாம் உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர முடியும்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

இறைவேண்டல் :
துன்பத்தின் வழி இறைமாட்சி கண்ட இயேசுவே! எங்கள் அன்றாட வாழ்வில் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் துணிவோடு உமது  நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

1 + 9 =