கடவுளின் பணியை நிறைவேற்றக் கருத்தாய் இருப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஏழாம்  செவ்வாய்; I: திப: 19: 20: 17-27; II: தி.பா: 68: 9-10. 19-20; III : யோ: 17: 1-11a

ஒரே வகுப்புத் தோழர்கள் விடுமுறையன்று ஒன்றாகச் சந்தித்து சிறிது நேரம் மகிழ்ச்சியாகச் செலவிடலாம் எனத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அவ்வகுப்பைச் சார்ந்த ஒரே ஒரு மாணவர் மட்டும் தன் நண்பர்களுடைய திட்டத்திற்கு
ஒத்துவரவில்லை. ஏனெனில் அவர்கள் திட்டம் தீட்டிய
அதே நாளில் அம்மாணவருக்கு முக்கியமான வேலையை அவனுடைய அப்பா கொடுத்திருந்தார். எனவே தன்னால் வரமுடியாது என அம்மாணவர் கூறினார். மற்றவர்கள் எவ்வளவோ அவரை கட்டாயப்படுத்தினர். இதைவிட வேறு சந்தர்ப்பம் இல்லை, இதனால் மகிழ்ச்சியான தருணங்களை இழந்து மனவருத்தம் அடைய நேரிடும் எனக் கூறினர். தன் தந்தை தனக்குக் கொடுத்த வேலையின் முக்கியத்துவத்தை அறிந்ததால் திட்டவட்டமாக தனது மறுப்பைத் தெரிவித்து அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார் அம்மாணவர்.

ஒருவர் நம்மிடம் ஒரு வேலையைச் செய்து முடிக்குமாறு நம்மிடம் ஒப்படைத்தார் என்றால் அவ்வேலையை நாம் சிறப்பாகச் செய்து முடிப்போம் என நம்புகிறார் என்பது பொருள். எனவே அக்கடமையைச் செய்து முடிக்க நம்மிடம் முழுப் பொறுமை, ஆர்வம், சவால்களைத் தாங்கும் மனநிலை, மற்றவைகளைத் தள்ளிவைத்துவிட்டு கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்வதற்கான ஞானம் போன்வை தேவைப்படுகிறது. அவ்வாறு செய்தால் தான் அப்பணிக்கான நிறைவை நாம் அனுபவிக்க முடியும்.
அத்தகைய மனநிலையோடு பணி செய்த இருநபர்களை நாம் இன்றைய வாசகங்களில் காண்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியாரின் துணையோடு தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட நற்செய்திப் பணியை, பலவித துன்பங்களுக்கு மத்தியிலும் செய்து முடிக்கப் பாடுபடும் புனித பவுலடியாரைப் பற்றி வாசிக்கிறோம்.
நற்செய்தியில் தனக்கான நேரத்தை உணர்ந்த இயேசு  தன்னை அனுப்பிய தந்தை கொடுத்தப் பணி நிறைவேறுவதைக் குறித்து மன நிறைவுடன் தந்தையோடு உரையாடுவதை நாம் வாசிக்கிறோம்.
இயேசுவும், இயேசுவின் வழியில் பவுலும் நமக்கு மிகச்சிறந்த முன்மாதிரிகளாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா. 

திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவரும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பது தந்தையின் திருஉளம். அப்பணியை நாம் இருக்கின்ற இடங்களில் நாம் ஈடுபட்டிருக்கின்ற பணிகள் வாயிலாக நம்மால் சிறப்பாகச் செய்ய இயலும். ஆனால் நாம் அப்பணியை முதன்படுத்தத் தவறுகிறோம். அவ்வாறே செய்தாலும் சவால்களால் சோர்ந்து விடுகிறோம். இவ்வாசகங்களைத் தியானிக்கும் இவ்வேளையில் நம் வாழ்வை அலசிப்பார்த்து நம்முடைய பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து தந்தையை மாட்சிப் படுத்த வரம் கேட்போம்.

இறைவேண்டல்

தந்தையே இறைவா! நீர் எங்களுக்கென குறித்தப் பணிகளை நிறைவேற்றி உம்மை மாட்சிப்படுத்த உமதருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 4 =