கடவுளை அறிவோமா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் புதன்; I: திப: 17:15,22-18:1; II: தி.பா: 148:1-2,11-14; III : யோவான்: 16:12-15

நம்மிலே பலர் கடவுளைப் பல இடங்களில் தேடித் திரிகிறோம். நாம் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்தால் கடவுளை நமக்குத் தெரியும். அவர் என்னோடு இருக்கிறார், எனக்கு உதவிகள் செய்கிறார் என பக்திப் பரவசம் பொங்க பெருமையாகப் பேசுவோம். அதே வேளையில் நாம் துன்பங்கள் படும் போது கடவுள் எங்கே இருக்கிறார்?அவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்விகளை எழுப்புவோம். 

இவற்றையெல்லாம் தாண்டி இன்றைய முதல் வாசகத்தில் "அறியாத கடவுளுக்கு" பலிபீடம் கட்டி வழிபடும் ஏதேன்சு நகர மக்கள் போலவும் பல சமயங்களில் நாம் நடந்து கொள்வது வேதனைக்குரிய நிலை.

ஆண்டவர் மோசேயை அழைத்து இஸ்ரயேல் மக்களை மீட்க அனுப்பிய போது "நீர் யாரென்று நான் சொல்ல வேண்டும்" என்ற மோசேயின் கேள்விக்கு "இருக்கின்றவர் நானே " எனப் பதிலளித்தார் கடவுள். தமஸ்கு நகரை நோக்கி வந்த சவுலைக் குறிக்கிட்டபோது " ஆண்டவரே நீர் யார்? "என்று வினவ " நீர் துன்புறுத்தும் இயேசு நான்" என பதிலளித்தார் இறைவன்.இந்நிகழ்வுகள் கடவுளை அறியவும் அவரை அறிவிக்கவும் முன்னோரிடமிருந்த ஆர்வத்தை எடுத்துரைக்கிறது.

இக்காலத்தில் நாம் கடவுளை அறியப்  பல வாய்ப்புக்கள் உள்ளன. ஆயினும் நாம் அவரை அனுபவப்பூர்வமாக எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்பது கேள்விக்குறிதான். நாம் சோதித்துப் பார்க்க வேண்டியது இதுதான். நான் என் முழு மனதுடன் கடவுளை அறிந்து வணங்குகிறேனா? அல்லது எல்லாரும் வழிபடுவதால் அனுபவப் பூர்வமாக அறியாத கடவுள் ஒருவரை வணங்குகிறேனா?

இந்த நாட்களில் நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைப் பற்றி நமக்குக் கூறுகிறார். அவர் உண்மையை எடுத்துரைப்பவர். சான்று பகர்பவர். நமக்குத் தெளிவான ஞானம் தருபவர். அத்தகைய தூய ஆவியாரின் துணையோடு கடவுளை அறிந்து வழிபட அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா உம்மை அனுபவப்பூர்வமாக அறிந்து அன்போடு வழிபட அருள் தாரும். தூய ஆவியால் எம்மை நிரப்பும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 14 =