Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நல்லாயனின் வழியில் நல்லாயர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு
இன்றையவாசகங்கள் (05.12.2020)திருவருகைக் காலத்தின் 1 ஆம் சனி
I: எசா: 30:19-21,23-26
II: 147:1-2,3-4,5-6
III: மத்9:35-10:1,6-8
ஒரு கிராமத்தில் பெண்களுக்கான சுயஉதவிக்குழு ஒன்றின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக உருவான சலசலப்பில் பிரச்சனையும் மூண்டது. அதுவரை ஒற்றுமையாக இருந்த கூட்ட உறுப்பினர்கள் தங்களிடையே வேறுபட்டு பிரிந்தனர். ஒற்றுமையாக செயல்பட மறுத்தனர். நாளுக்கு நாள் அவர்களின் செயல்பாடுகள் குறைந்தது. உறவு விரிசல் அதிகரித்தது. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய அக்குழுவின் தலைவி பல முயற்சிகள் எடுத்து, குழு உறுப்பினர்களிடம் தனிப்பட்ட விதத்தில் பேசிப் புரியவைத்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். குழுவிற்கு நல்ல தலைவியாக இருந்து செயல்பட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொணர்ந்தார். சிறந்த வழிகாட்டியானார்.
தலைமைப் பண்புகள் நம் அனைவருக்குள்ளும் இருந்தாலும் அதைக் கண்டறிந்து தகுதிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய கையில்தான் இருக்கிறது. ஏனெனில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய குழுக்களுக்கு தலைவராகவோ அல்லது வழிகாட்டியாகவோ அமர்த்தப்பட்டுள்ளோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட இப்பணியை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதை என்றாவது ஆய்வு செய்துள்ளோமா? இன்றைய இறைவார்த்தை இக்காரியத்தைச் செய்ய நம்மை அழைக்கிறது. ஒரு நல்ல ஆயனாக அல்லது வழிகாட்டியாக நாம் மாற இவ்வுலகைச் சார்ந்த எத்தனையோ பேர் நமக்கு மாதிரியாக இருந்தாலும் நம் ஆண்டவர் இயேசு நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் தனது போதனையை கேட்கத் திரண்டிருந்த மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்ட நிலையைக் கண்டு வருந்துகிறார் இயேசு. உரோமை அரசின் ஆதிக்கம் ஒருபுறம்.மக்களின் வாழ்வைப் பற்றி கவலை கொள்ளாமல் சட்டங்களையும் விதிமுறைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சமத்தின் பெயரால் மக்களைத் தவறாக வழிநடத்திய பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் மறுபுறம். இவற்றை எல்லாம் தகர்த்தெறிய மெசியா வருவார் என்று நம்பிய மக்களை பொய்யான போதனைகளால் திசைதிருப்பியவர்கள் மற்றொருபுறம்.நல்ல வழிகாட்டிகள் இல்லாமல், எவ்வழி செல்வது என்ற அறியாமல் இருந்த அம்மக்களின் நிலையை அறிந்து அவர்களின் மனத்தைத் திடப்படுத்தும் நல்லாயனாக விளங்கினார் இயேசு. அதுமட்டுமல்லாது தன்னுடைய மேய்ப்புப் பணியை தொடர்ந்து செய்ய தன் சீடர்களையும் சிறப்பாக வழிநடத்தினார் என்பதையும் நாம் இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
ஒரு நல்ல வழிகாட்டி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார். அவர்களை வழிநடத்துவார். பாதுகாப்பார். வழிதவறும் நாளில் தேடிச்சென்று கண்டுபிடித்து கண்டித்துத் திருத்துவார்.இயேசு இவை அனைத்தையும் செய்தார். நல்லாயனாக விளங்கினார்.நம்மையும் அதற்காகவே அழைத்துள்ளார்.
இன்றைய முதல் வாசகத்திலும் இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை நமக்கு வலியுறுத்துகிறார்."நீங்கள் வலப்புறமோ இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும்,இதுதான் வழி இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னாலிருந்து உங்கள் செவிகளில் கேட்கும்" என்ற வார்த்தைகள் கடவுள் தான் தேர்ந்தெடுத்த மக்களை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது.தந்தைக் கடவுளின் சாயலாக இருந்து இயேசு வழிகாட்டினார். இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்து பிறருக்கு வழிகாட்ட நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.
குழு,வகுப்பறை,சங்கம்,கட்சி,அரசியல்,திருச்சபை போன்றவற்றில் ஏதாவது ஒரு தளத்தில் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நாம் பணிசெய்யலாம். தலைவராக இருந்தால் இயேசுவைப்போல நல்ல வழிகாட்டியாக நாம் திகழவேண்டும்.உறுப்பினராக இருந்தால் வழிகாட்டுபவரின் வழியில் நடந்து சிறந்த வழிகாட்டியாக வாழ நம்மைத் தாயாரிக்க வேண்டும். நல்லாயன் தருகின்ற உள்ளுணர்வைப் பின்பற்றி எது நல்வழி என்பதை அறியவும் அவ்வழி நோக்கி மற்றவரை நடத்தவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
இறைவேண்டல்
நல்லாயனே இறைவா நீரே எங்கள் வாழ்வின் வழிகாட்டி என்பதை நாங்கள் அறிவோம். ஆயினும் வழிதவறுகிறோம். எம்மை நேர்வழி நடத்தும். உம்மைப் போல, உம்மைத் தன்னிலே பிரதிபலித்த இயேசுவைப் போல நாங்களும் நல்லாயர்களாய், நல் வழிகாட்டிகளாய்த் திகழ்ந்து எம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை நல்வழி நடத்த வரம் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment