விழிப்பாயிருங்கள் | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (29.11.2020) திருவருகைக் காலத்தின் 1 ஞாயிறு 
I: எசா: 63: 16-17; 64: 1,3-8
II: திபா:  80: 1,2. 14-15. 17-18 
III: 1கொரி:  1: 3-9
IV: மாற்: 13: 33-37

"விழிப்பாயிருங்கள்'' 

திருவருகைக்காலம் என்பது 'Advent' என்னும் இலத்தீன் மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள் பெறுகின்றது. திருவருகைக்காலம் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க காலம் ஆகும். இன்றைய நாளில் திருவழிபாட்டில் புத்தாண்டை கொண்டாடுகிறோம். எனவே இன்றைய நாள் நம்முடைய ஆன்மீக வாழ்வை புதுப்பித்து விழிப்போடு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருவருகைக்காலம் இரண்டு வகையான இயல்பைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஆண்டவர் இயேசுனுடைய பிறப்பு பெருவிழாவைத் தகுதியான உள்ளத்தோடு கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இரண்டாவதாக ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்தி அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

நம்முடைய அன்றாட வாழ்வில் விழிப்பாய் இருந்து ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சிந்திக்கின்ற பொழுது பல நேரங்களில் நாம் விழிப்போடு இல்லாததால்தான் வாழ்வில் பல துன்பங்களையும் தோல்விகளையும் சந்திக்கின்றோம். எனவேதான்  ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே ''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35) என்று இன்றைய நற்செய்தியில் விழிப்போடு இருத்தலின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு வீட்டு தலைவர் என்பவர் இந்த உலகம் என்னும் வீட்டை படைத்த கடவுள். நம்மைப் படைத்த கடவுள் நாம்  தூயோர்களாக வாழ்ந்து மீட்பின் கனிகளைச் சுவைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கு அடிப்படையாக இருப்பது விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்துவதாகும். தாய்த்திருஅவையால் இதற்காகக் கொடுக்கப்பட்ட உன்னதமான காலம்தான் இந்த திருவருகைக்காலம்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார். 

நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். மிகுதியாக கொடுக்கப்பட்டவர்களிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என்ற கூற்று நாமறிந்ததே. கடவுள் எண்ணற்ற கொடைகளை நமக்கு கொடுத்துள்ளார். நாம் அவற்றை சிறப்பாக பயன்படுத்தி நமக்கும் பிறருக்கும் பலன் கொடுக்கும் வகையில் நம் வாழ்வை வாழும் பொழுது கடவுளின் வருகையின்போது மிகுந்த கைமாறு பெறுவோம். ஆனால் கொடுக்கப்பட்ட கொடைகளைச் சரியாக பயன்படுத்தாமல் பொறுப்பற்ற நிலையில் வாழும் பொழுது நீதித் தீர்ப்பின் போது தண்டனைக்கு உள்ளாக நேரிடும். ஆண்டவரின் வருகையின்போது தண்டனை பெறுவதும் மீட்பின் கனிகளைச் சுவைப்பதும்  நமது கையில் தான் உள்ளது. அவற்றை சிந்தித்து நம் வாழ்வை சீர்தூக்கி பார்க்கவும் விழிப்போடு இருக்கவும் நம் ஆண்டவர் இயேசு நற்செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

விழிப்பாக இருத்தல் என்பது எந்த நேரத்திலும் மனம் தளராது, எதிர்பார்ப்புடன் வாழ்தலே ஆகும்.  நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் நாம் நம் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற நற்செய்தி மதிப்பீடுகளின் படி வாழ்ந்து இறையாட்சிக்கு சான்று பகர்ந்து நம்மையே ஆயத்தப்படுத்தும் பொழுது மண்ணுலகில் நாம் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் மிகுந்த கைமாறு பெற்று புனிதரின் கூட்டத்தில் இணைந்து கடவுளை நேருக்கு நேராக கண்டு நிறைவான வாழ்வு பெற முடியும். இத்தகைய நிலையை அடைந்து மீட்பின் கனியை சுவைக்க கடவுள் கொடுத்த வாய்ப்புதான் இந்த உலக வாழ்வு. எனவே இந்த உலக வாழ்வு ஒரு நிலையற்ற வாழ்வு. இந்த நிலையற்ற வாழ்விலே நாம் இவ்வுலகம் சார்ந்த பணம் பட்டம் பதவி ஜாதி இன வேறுபாடு போன்றவற்றிற்கு மதிப்பளிக்காமல் இறையாட்சியின் மதிப்பீடான மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நாம் மீட்பின் கனியைச் சுவைக்க முடியும். இதன் வழியாக கடவுளுக்கு உகந்த வகையிலேயே வாழ்ந்து விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 

இயேசுவின் இரண்டாம் வருகை எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. எவ்வாறு ஒரு முதலாளி தன் பணியாளர்களிடம் தன்னுடைய உடைமைகளை விட்டுவிட்டு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் திரும்பி வந்து கணக்குகளைக் கேட்டு அவர்களுக்கு கைமாறு கொடுப்பாரோ, அதைப்போலவே நம்மைப் படைத்த கடவுளும் நமக்கு கொடுத்த கொடைகளை  நாம் சரியாக பயன்படுத்தி உள்ளோமா என்பதை அவர் எதிர்பாராத நேரத்தில் வந்து நம்மிடம் கணக்கு கேட்பார். அவரு கணக்கு கேட்கும்போது சரியான கணக்கை கொடுக்காமல் இருந்தால் தண்டனைக்குள்ளாக நேரிடும். ஆனால் சரியான கணக்கை விழிப்போடு வாழ்தலின் வழியாக கொடுக்கின்ற பொழுது , நிறைவான அருளையும் இரக்கத்தையும் ஆசீரையும் பெறமுடியும். இத்தகைய நிலையை அடைய தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

எனவே விழிப்போடு எவ்வாறு ஆயத்தப்படுத்துவது? என்பது பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமைகளை செய்வது வழியாக நான் விழிப்போடு இருக்க முடியும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கடமைகளை செய்வதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் மாணவராக  இருந்தபொழுது போதிய பணம் இல்லாததால் படிக்கக் கூட வசதி இல்லாமல் இருந்தார். ஆனால் அவற்றை தடையாக கருதாமல் எப்படியாவது படித்து வாழ்வில் முன்னேறுவேன் என்ற ஆழமான நம்பிக்கையோடு தன்னுடைய கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்தார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினார். இதன் வழியாக மிகச் சிறந்த வெற்றியாளராக மாறினார். இதுதான் மனித வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய கிறிஸ்தவ வாழ்விலும் நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் உண்மையோடும் நேர்மையோடும் செயல்படுகின்ற பொழுது, நிச்சயமாக வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 

இரண்டாவதாக நம் குறைகளை அறிந்து விழிப்போடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம்,  நம்முடைய பாவங்களை ஏற்று மனம் வருந்த முயற்சி செய்வோம். தொடக்கத்தில் காயின் தான் செய்த பாவத்தை கடவுளுக்கு முன்பாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எனவே கடவுளின் ஆசியை இழந்தார். காயீனைப் போல இன்றைய காலக்கட்டத்தில் நம்மோடு வாழக்கூடிய எத்தனையோ மனிதர்கள் தன்னுடைய குற்றங்களை ஏற்காமல் தங்களையே நேர்மையாளராக நியாயப்படுத்தி வருகின்றனர்.நாமும் கூட பல வேளைகளில் இம்மனநிலையைப் பெற்றிருக்கிறோம். இத்தகைய நிலையை அகற்றும் பொழுது தான் நாம் கடவுளுக்கு உகந்த வகையில் நம்மை ஆயத்தப்படுத்த முடியும். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக கடவுள் முன் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். இதற்கு காரணம் இஸ்ரயேல்  மக்கள்  கடவுளுக்கு எதிராகப் பல பாவங்கள் செய்தனர். குறிப்பாக கடவுள் மீது கொண்ட நம்பிக்கை இழந்தனர். நேர்மையாளர்களாக வாழத் தவறி கடவுளின் திட்டத்திற்கு எதிராக நடந்தனர். கடவுளின் திருப்பெயரை மறந்தனர். கடவுளைப் பற்றிக் கொள்ளாமல் இந்த உலகம் சார்ந்த தீய செயல்களில் தங்களை உட்படுத்தினர். எனவே இதன் பொருட்டு அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கும் அடிமைத்தனங்களுக்கும் உள்ளாகினர். எனவேதான் இஸ்ரயேல் மக்கள் மன்னிப்பு கேட்டு கடவுளின் இரக்கத்தைப் பெற முயற்சி செய்தனர். இதுதான் முதல் வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். எனவே திருவருகைக் காலத்தில் இருக்கின்ற நாம்,  இந்த காலத்தை கடவுள் கொடுத்த வாய்ப்பாக பயன்படுத்தி நம்முடைய குற்றங்களை ஏற்று மன்னிப்பு வேண்டி இறையருளைப் பெற முன்வருவோம். குறிப்பாக நம்முடைய தாய் திருஅவையானது ஒப்புரவு அருள்சாதனம் என்ற மாபெரும் கொடையயை நமக்கு வழங்கியுள்ளது. இந்த கொடையை பயன்படுத்தி கடவுளிடம் மன்னிப்பு பெற்று கடவுளுக்கு உகந்த வகையிலேயே நம்மையே ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம். அப்பொழுது மீட்பின் கனியை நம்மால் சுவைக்க முடியும்.

மூன்றாவதாக கடவுளோடு இணைந்திருத்தல் வழியாக நாம் விழிப்போடு வாழ முடியும். "கிளைகள், திராட்சைச் செடியோடு இணைந்திராவிடில் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தால் அன்றி கனி தர இயலாது " (யோ: 15: 4) என்ற இறைவசனம் கடவுளோடு இணைந்திருப்பது வழியாக நாம் நம்மையே அவரின்  வருகைக்காக ஆயத்தப்படுத்த முடியும் என்ற சிந்தனையை வழங்குகின்றது.  நம்முடைய செபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து அவருக்கு வந்த பிள்ளைகளாக நாம் வாழ முடியும். எனவே திருவருகைக் காலத்தில் நம்முடைய செப வாழ்வை அதிகப்படுத்துவோம். நம்முடைய அன்பை வெளிப்படுத்தி நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பாலன் இயேசுவை கண்டு அகமகிழ முயற்சி செய்வோம்.  தவ வாழ்வின் வழியாக கடவுளின் உடனிருப்பை உணர்வோம் . இவ்வாறாக கடவுளோடு இணைந்திருப்பதன்  வழியாக கடவுளின் வருகைக்காக விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்த முடியும். 

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கின்ற நாம், விழிப்போடு நம்மை தேடி  மீட்க வருகின்ற ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மையே ஆயத்தப்படுத்த முன்வருவோம். "கடந்தது கடந்துவிட்டது, எதிர்காலம் நமது கையில் இல்லை, நிகழ்காலம் நம்முடையது" என்ற வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நாம் பிறருக்குப் பலன் கொடுக்கும் வகையில் அன்போடு நன்மைகள் பல செய்வோம். அப்பொழுது நம்மை மீட்க வருகைதரும் இயேசுவின்   மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்க முடியும். அதற்கு நம்முடைய சிந்தனை, சொல், செயல், உடல், ஆவி அனைத்தையும் தூய்மையாக வைத்திருந்து விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்துவோம். இத்தகைய மனநிலையோடு வாழும் பொழுது ஆண்டவர் இயேசுவின் வருகை எப்பொழுது வந்தாலும் நமக்கு பயம் இல்லை. வாழுகின்ற சான்று பகரக்கூடிய வாழ்வுக்கு நிச்சயமாக இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கைமாறு உண்டு. எனவே விழிப்போடு நம்மையே கடவுளுக்கு உகந்த வகையில் ஆயத்தப்படுத்த தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : 
எங்களை மீட்க வந்த பாலன் இயேசுவே! எங்களுடைய மனித பலவீனத்தை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் அவற்றை வெற்றி கொண்டு உமக்கு உகந்த வகையில் எங்களையே விழிப்போடு ஆயத்தப்படுத்த தேவையான இறையருளை தாரும். உமது  வருகையின் வழியாக இந்த உலகிற்கு நீர் கொண்டு வந்த அன்பு,   நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, மீட்பு போன்றவற்றை நாங்களும் பெற்று பிறரும் பெற்று நிறைவான மகிழ்வைப் பெற்றிடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 13 =