மனஉறுதியைத் தருபவர் இறைவன்! | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (25.11.2020)பொதுக்காலத்தின்  34 ஆம் புதன்
I: தி.வெ:  15:1-4
II: திபா: 98: 1,2-3,7-8,9
III: லூக்: 21:12-19

 

"நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுங்கள்"

சமீப காலமாக  நாம் அனைவருமே தந்தை ஸ்டேன்சாமி அவர்களைப்பற்றிய செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலே பிறந்து வடமாநிலத்திற்குச் சென்று ஆதிவாசி மக்களுடைய நல்வாழ்வுக்காய் உழைத்துக் கொண்டிருந்த இயேசு சபை குரு அவர். மதவாத அரசு அமைப்புகளால் அவதூறான பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொரோனா நோய் காலத்தில் வயது முதிர்ந்தவர் என்ற கரிசனை கூட இல்லாமல் சிறையில் அவர் அடைபட்டிருந்தாலும் அவர் மனந்தளராமல் இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.எங்கிருந்து வந்தது இந்த மனத்துணிவு அவருக்கு? நிச்சயமாக அவர் பின்பற்றும் தலைவன் இயேசுவிடமிருந்து அல்லவா?

மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவிலே "நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" (5:6) எனவும்"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் .ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது "(5:10) என்று இறைமகன் இயேசு கூறியதை நாம் வாசித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். இவ்வார்த்தைகள் மூலம் நமக்கு உறுதியூட்டும் இறைவன் இன்னும் அவ்வுறுதிக்கு உரமூட்டும் விதமாக தன்னைப் பின்பற்றுவதால் துன்பத்துக்குள்ளாகும் தன் சீடருக்கு அதிகாரிகள் முன் பேச நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் என வாக்குக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் தலைமுடி கூட கீழே விழாது என்று கூறி நம்பிக்கை ஊட்டுவதை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

கடவுள் அளித்த வாழ்வு அனைவருக்கும் சமம். அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார். ஏற்றுக்கொள்கிறார். ஏற்றத்தாழ்வுகள் நம்மிடம் இருக்கக்கூடாது என்ற நற்செய்தியை தன் நல்வாழ்வால் போதித்து நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் குரல் கொடுத்த இயேசுவின் மனஉறுதி சிலுவையில் நிலைநிறுத்தப்பட்டது.
இயேசுவின் இறப்புக்குப்பின் துவண்டு கிடந்த சீடர்களுக்கு மன உறுதியைத் தந்த இயேசு அவர்கள் அதிகாரிகள் முன் பேசுவதற்கு நாவன்மையைத்தந்தார். தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த பின்னும் அவர்கள் பின்வாங்கவில்லை.தலைவனுக்கே இக்கதியா என்று தொடக்கத்தில் அஞ்சினாலும், தலைவனின் வழியைத் துணிவுடன் தழுவினர் திருத்தூததர்கள். புனிதர்களான பேதுரு,பவுல் மற்ற திருத்தூதர்கள் அனைவரும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இன்னும் நம் கண்முன்னால் இயேசுவின் பொருட்டும் அவர் விட்டுச்சென்ற நீதி, உண்மை,அன்பு,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற விழுமியங்களின் பொருட்டும் மனஉறுதி காப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா?
என சிந்திக்க வேண்டியது நம் கடமை.

பல வேளைகளில் நாம் மன உறுதி இழந்தவர்களாய் இருக்கிறோம். இதனாலேயே சவால்களைச் சந்திப்பதற்குப் பதிலாக விட்டு விலகிச்செல்லும் மனிதர்களாய் நாம் மாறுகிறோம். அதிகாரிகள் அல்லது பதவியில் இருப்பவர்கள் முன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒத்திகை எடுப்பவர்களாய் இருக்கிறோம். மற்றவருடைய அல்லது சமூக தேவைகளுக்காக அல்லாவிட்டாலும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காக,நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக கூட நம்மால் மனஉறுதியுடன் நின்று போராட இயலவில்லை. இது நாம் இயேசுவை பின்பற்றாத நிலையைத் தான் குறிக்கிறது. மனஉறுதியுடன் வாழாததால் நம் வாழ்வில் பலவற்றை நாம் இழக்கிறோம். இத்தகைய மனநிலையை அகற்றி இயேசு தரும் மனஉறுதியுடன் வாழமுயற்சிப்போம்.அவ்வாறு வாழும்போது துன்பங்கள் ஏற்படினும் நம்மால் துணிந்து நின்று வெல்லமுடியும். ஏனெனில் நமக்குள் இருந்து கிறிஸ்து செயல்படுவார். அதற்கான இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

உறுதிதரும் தெய்வமே!
மன உறுதியை இழந்த மனிதர்களாய் வாழாமல், சவால்களின் சமயங்களில் நீர் தரும் ஞானத்தோடும் நாவன்மையோடும் தீமையை வென்றிட அருள் தாரும். ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 3 =