கடவுளால் அனுப்பப் பட்டவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின் 26 ஆம் செவ்வாய் - I. தானி: 7:9-10,13-14; II. திபா: 138:1-2; III. திவெ: 12:7-12; IV. யோ: 1:47-51

படிப்பறிவற்ற ஒரு முதியவர், அரசு அலுவலகத்திற்கு தன்னுடைய மாற்றுத்திறனாளி மகனுடன் அரசு தரும் சில சலுகைகளைப் பெறுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவருக்கு சரியான வழிமுறைகள் தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்று அறியாமல் திகைத்துப்போய் நின்றார். அன்று குறை தீர்க்கும் நாள் என்பதால் கூட்டமும் அதிகம். நாம் இன்று வந்தது வீண் தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு நடக்க இயலாத தன் மகனைப் பார்த்து அழுத வண்ணம், 'என்ன செய்வதென்று தெரியவில்லை வா வீட்டிற்குப் போகலாம்' என்று தன் மகனைத் தோளிலே தூக்கிக் கொண்டுச் சென்றார். இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், தாமாக முன் வந்து அவர்களுடைய தேவையைக் கேட்டறிந்தார். பின் தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றி அலுவலர்களை அணுகி அன்றே ஒரு மூன்று சக்கர வண்டியைப் பெற்றுக்கொடுத்தார். இறுதியில் அந்த வயது முதிர்ந்த மனிதரும் மாற்றுத்திறனாளி மகனும் கைகூப்பி "கடவுள் தான் எங்களுக்கு உதவி செய்ய உங்களை அனுப்பினார்" என்று கூறி வணங்கிவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

இன்று நாம் அதிதூதர்களாகிய கபிரியேல், மிக்கேல் மற்றும் ரபேல் ஆகியோருடைய விழாவினைக் கொண்டாடுகிறோம். இந்த மூன்று அதிதூதர்கள் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

புனித கபிரியேல் தூதர் இறைவனின் செய்தியை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார்.புனித யோவானின் பிறப்புச் செய்தியை சக்கரியாவுக்கும்,இயேசுவின் பிறப்பை மரியாவுக்கும் அறிவித்தவர் இவரே.இவருடைய விழாவை கொண்டாடும் நாளில் நாம் பிறருக்கு எடுத்துச்செல்லும் செய்தி எத்தகையது என்பதைச் சற்றே சிந்திப்போம். நமது வார்த்தைகள் பிறருக்கு மனமகிழ்வையும், நம்பிக்கையையும் தருவனவாக இருக்க வேண்டும் என்பதே கபிரியேல் தூதர் நமக்கு அளிக்கும் செய்தி.

புனித ரபேல் கடவுளின் குணமளிக்கும் அருளை  கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார். 'ரபேல்' என்ற பெயருக்கு "ஆண்டவர் குணமளிக்கிறார்" என்பது பொருள். உடலாலும் மனதாலும் நோயுற்றிருக்கும் நம் அயலாருக்கு கடவுளின் நலம் நல்கும் அருளை, நம் பரிந்துரை ஜெபங்கள், உடனிருப்பு, நம்பிக்கை தரும் வார்த்தைகள் இவற்றை வழங்கும் கருவிகளாக இருக்கிறோமா என்று சிந்திப்போம்.

புனித மிக்கேல் தீயவைக்கு எதிராகப் போராடி நமக்கு கடவுளின் பாதுகாப்பைப் பெற்றுத்தருபராக இருக்கிறார். 'மிக்கேல்' என்ற பெயருக்கு, "ஆண்டவருக்கு நிகர் யார்" என்பது பொருள். அன்றாடம் கடவுளின் பாதுகாப்பை உணரும் நாம் பாதுகாப்பின்றி ஆபத்தில் வாழும் மனிதர்களுக்கு கடவுளின் பாதுகாவலை உணர்த்தவும், தீமைக்கு எதிராகப் போராடவும் புனித மிக்கேல் வழியாக இன்று அழைக்கப்படுகிறோம். ஆகவே, நம்மைப் பார்த்து நம்மோடு வாழ்கின்ற ஒவ்வொருவரும், 'கடளால் அனுப்பப்பட்டவர் இவர்' என்று கூறும் அளவிற்கு நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே இன்றைய நாள் விழா நமக்கு விடுக்கும் அழைப்பு.

இன்றைய நற்செய்தியில் தன்னைப் பார்க்க வந்த நத்தனியேலைப் பார்த்து, "இவர் கபடற்றவர்" என்று இயேசு கூறுவதையும், இயேசுவைப் பார்த்து "நீரே மெசியா" என்று நத்தனியேல் கூறுவதையும் நாம் வாசிக்கிறோம். இது இறை வெளிப்பாடு. இதைப்போல நம்மைக் காண்கின்றவர்கள், நம்மோடு வாழ்பவர்கள் இவர் கடவுளின் மகன், மகள் என்றும்,நன்மை செய்பவர் என்றும் கூறும்படி இதுவரை நாம் வாழ்ந்திருக்கிறோமா?. இல்லையெனில், அதற்கான வரத்தை இன்று விழாக்காணும் அதிதூததர்கள் வழியாக இறைவனிடம் கேட்போம்.

இறைவேண்டல்

எங்களைப் படைத்து பராமரித்துப் பாதுகாக்கும் எம் அன்பு இறைவா, அதிதூதர்களாகிய புனித கபிரியேல், புனித ரபேல் மற்றும் புனித மிக்கேல் ஆகியோருக்காக உமக்கு நன்றி செலுத்தும் இவ்வேளையில், நாங்களும் அவர்களைப் போல நற்செய்தியைப் பறைசாற்றி, உமது குணமளிக்கும் தொடுதலுக்குச் சான்றாக வாழ்ந்து, தீமையை எதிர்த்துப் போரிட்டு நாங்கள் உம்மால் அனுப்பப் பட்டவர்கள் என்பதை நாங்கள் உணரவும், உலகிற்கு உணர்த்தவும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 11 =