Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திறந்த மனநிலையில் | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 26 ஆம் வியாழன் - குழந்தை இயேசுவின் புனித தெரசா திருவிழா - I. எசா: 66:10-14; II. திபா: 131:1-3; III. மத்: 18:1-5
குழந்தைகள் இறைவனின் கொடைகள் . மனிதர்களாகிய நாம் நம் வாழ்வை முழுமையான வாழ்வாக மாற்ற வேண்டுமெனில் குழந்தை உள்ளத்தோடு வாழவேண்டும். குழந்தை உள்ளம் கொண்டிருக்கும் மனிதர்கள் மட்டுமே உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர முடியும். இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போல ஆக வேண்டும்" எனச் சுட்டிக் காட்டுகின்றார். இன்றைய நாளில் நம் தாய்த்திருஅவையோடு புனித குழந்தைத் தெரசாள் திருவிழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம். இப்புனிதை மறைபரப்பு பணியின் பாதுகாவலராக இருக்கின்றார். புனித சவேரியாரையும் நம் தாய் திருஅவையானது மறைபரப்பு பணியின் பாதுகாவலராக அழைக்கின்றது.
புனித சவேரியார் உலகின் பல இடங்களுக்கு சென்று நற்செய்திப் பணி செய்து வந்தார். நம்முடைய கிறிஸ்தவ மறையை எங்கும் பரப்பி வந்தார். எனவே அவரை மறைபரப்பு பணியின் பாதுகாவலராக அழைப்பது சற்று பொருத்தமானதாகும். ஆனால் புனித குழந்தை தெரசாவை மறைபரப்பு பணியின் பாதுகாவலராக அழைப்பது எப்படி என்ற ஒரு கேள்வி நமக்கு எழலாம். அதற்கு பதில் "புனித குழந்தைத் தெரசாள் மறைபரப்பு பணியினை வெளியில் செய்யாவிட்டாலும் தான் வாழ்ந்த நான்கு சுவற்றுக்குள் ஜெபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் தியாகத்தின் வழியாகவும் மறைவாய் இருந்து நற்செயல்களை செய்வதன் வழியாகவும் பல மக்களை மனம் திருப்பினார். இயேசுவை அறிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வழிகாட்டினார். எனவேதான் திருஅவையானது புனித குழந்தை தெரசாளின் புனித வாழ்வினை அங்கீகரிக்கும் விதமாக ஒரு புனிதையாக உயர்த்தியது.
இவர் மிகச் சிறந்த ஒரு புனிதையாக உயர்ந்ததற்கு காரணம் அவர் கொண்டிருந்த குழந்தை உள்ளம். இந்த குழந்தை உள்ளத்தை நம் வாழ்வாகும் பொழுது நாமும் ஒரு தூய்மையான வாழ்வு வாழ முடியும். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியில் "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்ற சீடரின் கேள்விக்கு மிகச்சிறந்த பதிலைக் கொடுக்கிறார். இயேசு சீடரின் கேள்விக்கு "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்" என்று பதிலளித்துள்ளார். இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் இயேசுவை பின்பற்றுவதால் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என நம்பினர். மேலும் சீடர்களுக்குள் "யார் பெரியவர்?" என்ற போட்டியும் இருந்தது. இப்படிப்பட்ட மனநிலை விண்ணரசுக்குள் புகத்தடையாய் தடையாய் உள்ளதாக ஆண்டவர் இயேசு வலியுறுத்துகின்றார்.
திருமுழுக்கின் வழியாக இயேசுவின் பிள்ளைகளாகவும் அவரின் சீடர்களாகவும் மாறியுள்ள நாம் குழந்தை உள்ளத்தோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். குழந்தைகளிடத்தில் மூன்று முக்கியமான பண்புகளை நாம் கற்றுக் கொள்ள முடியும்.
முதலாவதாக சார்ந்திருத்தல்.குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை என்றும் சார்ந்திருப்பார்கள். அதனால் அவர்களின் தேவைகள் விருப்பங்கள் தக்க நேரத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் குறையாமல் காணப்படும். கலக்கம் கவலைகளை மறந்து இருப்பார்கள். இம்மனநிலை நம்மையும் இன்று நம்மைப் படைத்த இறைவனை சார்ந்து வாழ அழைக்கிறது. கடவுளை சார்ந்து வாழும் போது நம்பிக்கை வளரும். கவலைகள் நீங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரண்டாவதாக திறந்த மனநிலை. குழந்தைகள் பொதுவாக திறந்த மனநிலையுடன் பாகு பாடின்றி அனைத்தையும் அனைவரையும் ஏற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு தாங்களாகவே யாரையும் ஒதுக்கி வைக்கும் எண்ணம் இல்லை. இம்மனநிலை நம்மில் உள்ளதா? திறந்த மனநிலையுடன் நம் வாழ்வின் நிகழ்வுகளையும் சக மனிதர்களையும் ஏற்றுக்கொள்கிறோமா? சிந்திப்போம்.
மூன்றாவதாக வியந்து பாராட்டுதல். குழந்தைகளின் மிகச்சிறந்த பண்பு இது.இயற்கையை அழகுள்ளவற்றை தமக்கு விருப்பமானவற்றை காணும் போதோ பெற்றுக்கொள்ளும் போதோ வியந்து பாராட்டி மகிழ்வார்கள். இன்றைய அவசர உலகில் நாம் இழந்த முக்கியமான பண்பு இது. அழகை ரசிக்க நேரமில்லை என்கிறோம். இறைவன் நம் வாழ்வில் நிறைவேற்றிய அதிசயங்களை எண்ணி வியக்கத் தவறுகிறோம். இந்தப்பண்பை மீண்டும் வளர்க்க முயல்வோமா? எனவே குழந்தை இயேசுவின் புனித தெரசா வழியாக குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.
இறைவேண்டல்
எங்கள் அன்புத் தந்தையே உங்கள் பிள்ளைகள் நாங்கள் புனித குழந்தை தெரசா வழியாக உம்மை புகழ்கிறோம். குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் உம்மை சார்ந்து வாழவும், திறந்த மனநிலையோடு வாழ்வின் அனுபவங்களையும் சக மனிதர்களையும் ஏற்றுக்கொள்ளவும், எம் வாழ்வில் உம் அருளால் நடக்கும் நல்லவற்றை வியந்து பாராட்டி உமக்கு நன்றி கூறவும் வரம் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment