Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விளக்கம் கேட்க தயங்குபவர்களா நாம்! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 25 ஆம் சனி - I. சபை: 11:9-12:8; II. திபா: 90:3-4,5-6,12-13,14,17; III. லூக்: 9:43b-45
ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். ஒரு மாணவர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறுபவர். மற்றொரு மாணவர் தேர்ச்சி பெறவே கடினப்படுபவர். நன்றாக படிக்க முடியாத மாணவர் நன்றாக தேர்ச்சி பெறக்கூடிய மாணவரிடம் "எப்படி உன்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடிகின்றது?" என்ற கேள்வியை கேட்டான். அதற்கு அவன் "எனக்கு வகுப்பிலே ஆசிரியர் பாடம் நடத்தும்போது புரிந்ததை மட்டும்தான் நோட்டில் எழுதுவேன். புரியாத பகுதிகளை எழுதாமல் ஆசிரியரிடம் தனியாகச் சென்று தெளிவு பெற்ற பிறகுதான் எழுதுவேன்" என்று கூறினான்.
நாம் யாரையும் இயலாதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. படிக்க முயலாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்வில் வருகின்ற மனநிலையைத் தான் இயேசுவின் சீடர்களும் கொண்டிருந்தனர். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையாட்சி பணியிலே உடனிருந்து இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்ணால் கண்டும் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளச் சீடர்களால் இயலவில்லை. இதற்கு காரணம் இயேசுவை வெற்றியின் அரசராக பார்த்த மனநிலையே ஆகும். இயேசு தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி தங்களை அடிமைப்படுத்துகின்ற உரோமை அரசை வென்று ஆட்சியைப் கைப்பற்றுவார் என்று நம்பினர். அவர் ஆட்சியை கைப்பற்றியப் பிறகு தாங்கள் அமைச்சரவையில் அமரலாம் என்றும் பகல் கனவு கண்டனர். இயேசுவை மக்கள் புகழ்ந்ததைக் கண்டு மகிழ்ந்த சீடர்களால் இயேசு துன்பப்படுவதில் தான் மாட்சி இருக்கின்றது என்று பலமுறை முன்னறிவித்த போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்றைய நற்செய்தியில் இத்தகையச் சூழ்நிலையைத் தான் நாம் காணமுடிகின்றது. இயேசு வல்ல செயல்களை செய்ததை பலரும் பார்த்து வியப்படைந்தனர் . இயேசுவின் சீடர்களும் வியப்படைந்தனர். ஆனால் அதன்பிறகு இயேசு சொன்னதை கேட்டு அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இயேசு தம் சீடர்களிடம் "நான் சொல்வதைக் கேட்டு மனதில் வைத்துக் கொள்ளுங்கள் . மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். இவ்வாறு இயேசு சொன்ன பிறகு சீடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என வாசிக்கின்றோம். மேலும் "சீடர்கள் அதை உணர்ந்து கொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாய் இருந்தது" என்ற வார்த்தையின் பொருள் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைவிட சீடர்கள் அவர் சொன்னதை புரிந்து கொள்ள மறுத்தனர் என்பதுதான் பொருள். இது அவர்களுடைய மேலோட்டமான பார்வையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இயேசு துன்பத்தைப் பற்றி பேசியதால் தாங்களும் துன்பப்பட்டு விடுவோம் என்ற அச்சமும் அப்போது இருந்தது. எனவேதான் இயேசு சொன்னதை பற்றி அவரிடம் விளக்கம் கேட்க சீடர்கள் அஞ்சினார்கள்.
இதற்கு முக்கிய காரணம் இயேசுவின் போதனைகளை மேலோட்டமாக புரிந்து கொண்டதே ஆகும். இயேசுவின் வார்த்தைகள் வெறுமனே கேட்டு, காற்றில் விடுவதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை உள்ளத்தில் ஆழமாகப் பதித்து தியானிக்கப் படவேண்டிய வார்த்தைகள். வார்த்தைகளை முழுமையாக தியானிக்கும் பொழுது நம் வாழ்விலேயே புது மாற்றத்தையும் புது வாழ்வையும் பெற முடியும்.
இம்மண்ணுலகில் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் மிகச் சிறந்த இடத்தை நாம் பெற முடியும். நாம் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் நம்முடைய வார்த்தைகளும் செயல்பாடுகளும் உயிரோடு இருக்கும். அதற்கு அன்னை மரியாவை போல ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதை வெறுமனே விட்டுவிடாமல் சிந்திக்க வேண்டும். அதனை முழுவதுமாக தியானித்து நம் வாழ்விலேயே வாழ முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின் உண்மையான சீடத்துவத்துவ வாழ்வுக்குச் சான்றுப் பகர முடியும். அன்னை மரியாவைப் போல இறை திருவுளத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள "இது எப்படி நிகழும் நான் கன்னி ஆயிற்றே?" என்ற கேள்வி எழுப்பி தெளிவு பெற்றது போல நாமும் நம்முடைய ஜெபத்தின் வழியாக இறை திருவுளத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். அதேபோல நம்முடைய அன்றாட வாழ்வில் அறிவுபூர்வமான மக்களாக மாற கேள்விகளை எழுப்பி சமூக அளவிலும் ஆன்மீக அளவிலும் முதிர்ச்சிப் பெற முயற்சி செய்வோம். துன்பத்தின் வழியாக இறைமாட்சி காணும் மனப்பக்குவத்தைப் பெற்றுக்கொள்வோம். இறைவார்த்தையை ஆழமாகச் சிந்திக்கும் ஞானத்தைப் பெற்றுக் கொள்வோம். இந்தச் சமூகத்தில் மனிதமும் மனிதநேயமும் வளர நாமும் ஒரு கருவியாக மாற இயேசுவின் பாதையை பின்பற்றுவோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் எங்களிடம் இருக்கின்ற ஐயங்களை கேள்வி எழுப்பி தெளிவுபடுத்தி முதிர்ச்சியடைந்த மனித வாழ்வை வாழ்ந்திட அருளைத் தாரும். நற்செய்தியின் பொருட்டு எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் இடையூறுகளையும் துணிவோடு எதிர் கொள்ளும் ஆற்றலை தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment