நேர்மறையான சிந்தனையில் வாழ்வதா! | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின் 25 ஆம் வெள்ளி - I. சபை: 3:1-11; II. திபா: 144:1,2,3-4; III. லூக்:  9:18-22

நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கும்.  நேர்மறைச் சிந்தனை தான் நம் வாழ்வில் நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும். நேர்மறைச் சிந்தனைகளின் சக்தி, நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான நலன்களைத் தரும் நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பலவிதமான பிரச்சனைகளும், குழப்பங்களும் நிகழ்வதற்கு காரணம் நம்முடைய எதிர்மறை எண்ணங்களே ஆகும். இன்பங்களையும், வெற்றிகளையும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம்.  துன்பங்களையும், தோல்விகளையும்  ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. எனவேதான் பல்வேறு மன அழுத்தங்களுக்கு நாம் உள்ளாகிறோம். எனவே இவற்றை எல்லாம் களைந்துவிட்டு நேர்மறை  எண்ணத்தோடு வாழ முயற்சி செய்யும்பொழுது நம்முடைய வாழ்வு மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக மாறும்.

நம்முடைய மனித வாழ்வு என்பது நாணயத்திற்கு இணையானது. காரணம், ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, நம்முடைய வாழ்வும் இன்பம், துன்பம் என்ற இரு பக்கங்களைக் கொண்டதாகும். நம் வாழ்வில் இன்பங்களும் வெற்றிகளும்  வரும் பொழுது பரவசத்திற்கு சென்றுவிடாமல் அதை அடுத்த படிநிலைக்கு செல்லக்கூடிய படிக்கற்களாக மாற்றி பயணிக்கும் மனப்பக்குவத்தைப் பெறவேண்டும். அதேபோல, துன்பங்களும் தோல்விகளும் வரும்பொழுது அவற்றைக்  கண்டு துவண்டுவிடாமல் வெற்றிக்கான ஒரு அனுபவமாக ஏற்றுக்கொண்டு நேர்மறை எண்ணத்தோடு பயணிக்கும் பொழுது நம் வாழ்வில் மிகப்பெரிய சாதனையாளர்களாக மாறமுடியும்.

"நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே" என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென். எனவே நம்முடைய எண்ணங்களை நேர்மறையான சிந்தனையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பின்னணியில் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. சபை உரையாளர் மூன்றாம் அதிகாரத்தில், 'இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் நம்முடைய அன்றாட வாழ்க்கை' என்பதை உணர்த்தியுள்ளார். நம்முடைய வாழ்க்கையிலே ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் இருக்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்டி, அதைத் தடுக்கவும் முடியாது அதிலிருந்து  தப்பிக்கவும் முடியாது, ஆனால் நிச்சயமாக அதைக் கடந்து செல்லவேண்டும் என்ற ஆழமான சிந்தனையை சபை உரையாளர் நமக்கு வழங்கியுள்ளார்.  

நான் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்த பொழுது, பல விதிமுறைகள் எங்களுக்கு விதிக்கப்படுவது உண்டு. பல்வேறு வகையான பயிற்சிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டன. அறிவுசார்ந்த பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி, அருட்பணி பயிற்சி, உளவியல் பயிற்சி மற்றும் மனிதம் சார்ந்த பயிற்சி போன்ற பயிற்சிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டன. அந்நாட்களில், பயிற்சிகளையும், அதன்  விதிமுறைகளையும்  துன்பமாக, சுமையாகக் கருதி, ஒருசில நேரங்களில் மகிழ்ச்சியையும் இழந்திருக்கின்றேன். அப்பொழுது எங்களுக்குப் பயிற்சி கொடுத்த ஒரு அருட்தந்தையிடம் ஆலோசனைக்கு சென்று, அவரிடம் என்னுடைய எண்ணங்களையும், மனக் குழப்பங்களையும் பகிர்ந்து கொண்டேன். அப்பொழுது அந்த அருட்தந்தை "உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு" என்ற சபை உரையாளரின் வார்த்தையை எனக்குக் கூறினார். அப்பொழுது எனக்கு அது புரியவில்லை. ஆனால் அதன்பின்பு என்னுடைய அறைக்குச் சென்று அதை ஆழமாக தியானித்தேன். அப்பொழுதான், "என் வாழ்வில் பயிற்சிகளுக்கானத் தருணம் இதுவென்று உணர்ந்தேன்". மேலும் துன்பம் என்ற ஒன்று இல்லை என்றால் இன்பம் என்ற உன்னதமான உணர்வை உணரவோ, அனுபவிக்கவோ முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன். அதன் பிறகு, நான் சுமையாக நினைத்த அந்தப் பயிற்சிகளை எல்லாம் என்னுடைய வாழ்வின் சுகமாக நினைத்து முழு ஈடுபாட்டோடு செய்தேன். அன்று முதல் இன்று வரை எத்தனை இன்னல்கள், இடையூறுகள், விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை நேர்மறை எண்ணத்தோடு பார்க்கவும், ஏற்கவும் பழகிக் கொண்டேன். 

இன்றைய முதல் வாசகத்தில் இப்படிப்பட்ட மனநிலையை நாம் பெற்றுக்கொள்ளவே, சபை உரையாளர் உலகில் நடக்கும் "ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு" என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லை; ஆனால் நாம் வாழும் வாழ்க்கை நமது கையில் தான் உள்ளது. அதை நேர்த்தியாகவும், நேர்மறை எண்ணத்தோடும் வாழும் பொழுது நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நேர்மறை எண்ணத்திற்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கின்றார். நாம் நேர்மறை எண்ணத்தோடு வாழ வேண்டுமெனில் இறைவனின் உடனிருப்பு நமக்கு மிகவும் தேவை. இறைவேண்டலின்  வழியாக  இறைவனோடு இணைந்து இருக்கும் பொழுது இறைவனைப் போல நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக மாறமுடியும். இயேசு இறைமகனாக இருந்த பொழுதும் அவர் தனித்து இறைவேண்டல் செய்ததன் காரணம் நேர்மறை எண்ணத்தோடு இறையாட்சிப் பணியை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆகும். மேலும் இன்றைய  நற்செய்தியில் "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று சீடர்களிடம்  கேட்டார். காரணம், இறைமகன்  தன்னைத்தானே சுய ஆய்வு செய்ய விரும்பினார். ஆம், நாம் நம்மைப்பற்றிய சுய ஆய்வைப் பிறரின்  வழியாக செய்யும்பொழுது, நம்முடைய எண்ணங்களையும் இலக்கினையும்  கூர்மையாக்க முடியும். எனவேதான் இயேசு இவற்றைச் செய்து காட்டி நேர்மறை எண்ணத்தோடு  இறையாட்சிப் பணி செய்து நம் வாழ்வை வாழ வழிகாட்டியுள்ளார். எனவே நேர்மறை எண்ணத்தை நம் வாழ்வில் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வோம். அப்பொழுது நம் வாழ்வு ஆசீர்வாதத்தின் வாழ்வாக, வெற்றியின் வாழ்வாக, மகிழ்ச்சியின் வாழ்வாக மாறும். அத்தகைய மனநிலையைப் பெற்றுக்கொள்ள தேவையான அருளையும் ஞானத்தையும் வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! என்னுடைய அன்றாட வாழ்விலே நேர்மறை எண்ணங்களோடு  வாழத் தடையாக உள்ள எதிர்மறை எண்ணங்களை எங்கள் உள்ளத்தில் இருந்து அகற்றத் தேவையான ஞானத்தைத் தாரும். இன்பங்களையும், வெற்றிகளையும் முயற்சிக்கான அங்கீகாரமாகவும், துன்பங்களையும் தோல்விகளையும் அனுபவங்களாகவும் ஏற்று, நேர்மறை எண்ணத்தோடு வாழவும், சாதிக்கவும் தேவையான வழிகாட்டுதலைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 2 =