Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு; சூடானுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஐநா சபை பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கர்த்தூமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் வெடித்தது. இந்த தர்ணா போராட்டம் சுமார் ஒரு வார காலம் நீடித்த நிலையில் ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குழந்தை உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரகளை அடக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதே போல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன. (Thinaboomi)
Add new comment