Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சாதனை படைத்த 17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவனின் நம்பிக்கை!
பிறந்ததிலிருந்தே அரிதான நோயோடு போராடிய நிலையிலும், விசுவாசத்தில் மிகவும் உறுதியாயிருந்த, 17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவன் டார்வின் ராமோஸ் (Darwin Ramos) அவர்களை, திருப்பீட புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயம், இறைஊழியர் என அங்கீகரித்துள்ளது என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் அறிவித்தார்.
திருப்பீட புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்களால் வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை கடந்த வாரத்தில் பிலிப்பீன்சில் அறிவித்த, Cubao ஆயர் Honesto Ongtioco அவர்கள், இந்த அங்கீகாரம், இச்சிறுவன், தனது விசுவாச வாழ்வை எவ்வாறு வாழ்ந்தார் மற்றும் இயேசுவுக்கு எவ்வாறு சாட்சியாக விளங்கினார் என்பதை, மேலும் ஆழமாக ஆய்வுசெய்யத் தூண்டியுள்ளது என்று கூறினார்.
கத்தோலிக்கர், தங்களின் விசுவாசத்திற்குத் தெளிவான வழிகளில் சான்று பகர வேண்டுமென, இந்த அங்கீகாரம் நினைவுபடுத்துகின்றது என்றும், ஆயர் Ongtioco அவர்கள் கூறியுள்ளார்.
அருளாளர் மற்றும் புனிதர் நிலைகளுக்கு உயர்த்துவதன் முதல் நிலையாகிய இறைஊழியர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள சிறுவன் டார்வின் ராமோஸ் அவர்கள், 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி, தனது 17வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
சிறுவன் டார்வின் அவர்களின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், ஆயர் Ongtioco அவர்கள், டார்வின் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் நடைமுறைகளைத் துவங்கினார் என, யூக்கா செய்தி கூறுகின்றது.
தலைநகர் மனிலாவுக்குப் புறநகரிலுள்ள, Pasay நகரின் சேரிகளில் 1994 ஆம் ஆண்டு பிறந்த டார்வின் அவர்கள், தனது 12 வது வயதில், "சிறார் பாலம் (Tulay ng Kabataan)" எனப்படும் ஒரு தன்னார்வலர் அமைப்பு வழியாக, தெருவில் வாழ்கின்ற சிறார்க்குச் சேவை செய்யத் தொடங்கினார்.
கத்தோலிக்க விசுவாசம் பற்றி நன்கு அறிந்த பின்னர், 2007 ஆம் ஆண்டில், திருமுழுக்கு, திருநற்கருணை, உறுதிபூசுதல் ஆகிய திருவருள்சாதனங்களைப் பெற்றார் டார்வின். உடல்நிலை மோசமாகிக்கொண்டுவந்த சூழலிலும், இச்சிறுவன், அந்த தன்னார்வலர் மையத்தில் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கினார். கிறிஸ்துவோடு ஆழமான உறவையும் இவர் வளர்த்துக்கொண்டார்.
(UCAN)
Add new comment