Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்தியாவின் பேரிடர் கொள்கையும் செயலாக்கமும் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சுனாமிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் மட்டும் (2004-2014) இந்திய அளவில் 21 இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே 4 பேரிடர்கள் (தானே, நிஷா, நீலம், மகேசான்) ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சென்னை பெருவெள்ளம், வர்தா, ஓக்கி புயல் தற்போது கஜா என அடுத்தடுத்த பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டது. இயற்கைப் பேரிடரோடு, காலநிலை மாற்றச் சிக்கல், வரைமுறையற்ற மாநகர விரிவாக்கம், நகரங்களில் குவிகிற மக்கள் தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகள் பேரிடர் சேதங்களை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
அண்மைக்காலப் பேரிடர் நிகழ்வுகளின்போது மக்களே தங்களைத் தாங்களே காத்துக் கொள்கிற நிலைக்கு தள்ளப்படுவதைக் கண்டு வருகிறோம். பேரிடரால் பாதிப்படைந்த மக்களுக்கான மீட்பு உதவிகளை மக்களே மேற்கொண்டனர். சென்னை வெள்ளத்தின் போதும் தற்போதைய கஜா புயல் தாக்கத்தின் போதும் பெரும்பாலான உடனடி உதவிகள் சிவில் சமூகக் குழுக்களாலேயே வழங்கப்பட்டன. ஒகி புயலின்போது மீனவ இளைஞர்களே ஆழ்கடலுக்குள் படகு செலுத்தி கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
பேரிடருக்கு முந்தைய ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு மற்றும் உதவி, பேரிடருக்குப் பிந்தைய மீள் கட்டமைப்பு/மறுவாழ்வு ஆகிய முக்கிய மூன்று கட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதில் அரசு இயந்திரம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வருவதையே இது வெளிக்காட்டுகிறது. சுனாமி முதல் ஒகி வரையிலும் பேரிடர்களில் இருந்து தமிழக அரசும் மத்திய அரசும் எந்தப் படிப்பினையையும் பெறவில்லை என்பது அடுத்த பேரிடரை எதிர்கொள்ளும்போது தெளிவாகிறது. அரசு தனது, மீட்பு நிவாரணத் தோல்விகளை, மெத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பொய் வாக்குறுதிகளை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதில் ஆளும் கட்சியின் (முதல் கட்ட)பொய் அறிக்கையை நம்பி, அரசின் கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை பாராட்டி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கை வேறு விடுகிறார். அரசின் மெத்தனமான புயல் நிவாரணப் பணிகளை கண்டித்து நூற்றுக்கும் மேலான சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. வழக்கம்போல உதவித்தொகை கேட்டு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அமைச்சர்கள் டெல்லி சென்று வருகிறார்கள். ஆனால் காட்சியேதும் மாறவில்லை.
இப்போக்கானது பேரிடர் மேலாண்மை தொடர்பான மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கொள்கை, பொறியமைப்பு மற்றும் நடைமுறை செயலாக்கத் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.பேரிடர் மேலாண்மை சட்டத்தை, கொள்கையை கேலிக்குள்ளாக்கியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
(National Disaster Management Authority):
இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர் தாக்குதலின்போது சிவில் சமூகத்தின் உயிரையும் உடமைகளையும் காப்பதன் பொருட்டு, கடந்த 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின்கீழ் கடந்த 2006 ஆம் ஆண்டில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. நாட்டின் பிரதமர் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது பெரும்பாலும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழியேதான் அதன் கொள்கைத் திட்டத்தை நடைமுறையாக்கம் செய்கிறது. பேரிடர்களின் பண்பைப் பொறுத்து முழுமையாகவோ பகிர்ந்தளிக்கப்பட்டோ மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. பேரிடர் சார்ந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளுக்கும் கொள்கைத்திட்டத்தை உருவாக்கி வழிகாட்டுவது, செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிப்பது பேரிடர் ஆணையத்தின் முதன்மையான பணியாகும்.
மாநில தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
(State Disaster Management Authority):
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநில முதலமைச்சர் தலைமையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில வருவாய்த் துறை அமைச்சர், மாநில அரசு தலைமைச் செயலாளர், நிதி, உள்துறை மற்றும் வருவாய்த் துறை செயலாளர்களை (பதவி வழி) உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கூடவே சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையத்தின் இயக்குநர், சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் கட்டடப் பொறியியல் துறையின் தலைவரும் இவ்வாணையத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாநிலப் பேரிடர் அபாயத் தணிக்கை முகமை:
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக தமிழ்நாடு மாநிலப் பேரிடர் அபாயத் தணிக்கை முகமை செயல்படுகிறது. இந்த ஆணையம் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களை தலைவராகக்கொண்ட ஆட்சிக் குழுவால் வழி நடத்தப்படுகிறது. இம்முகமையின் முக்கிய செயல்பாடுகளில் சில வருமாறு
- பேரிடர் நிகழ்வின் போதும், பின்னரும் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்.
- பேரிடர் மேலாண்மை தொடர்பான புள்ளி விவரங்கள், பயிற்சி அளிக்கப்பட்ட மீட்புப்படை அமைப்பினர், வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது.
- எவ்வகையான பேரிடர்களையும் எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறைகள், கோட்பாடுகள், திட்ட வழிமுறைகள் மேலாண்மை குறித்த செயல்திட்டம் வகுத்தல்.
- மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு ஆகிய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையோ நிதி உதவியையோ அல்லது கடனாகவோ தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் முகமைகள், செஞ்சிலுவை சங்கம், நன்கொடையாளர்கள், மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
- இம்முகமை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற உரிய நிதியுதவியைப் பெற ஏற்பாடுகள் செய்தல். நில உடைமைகள், கட்டிட உடைமைகள், தளவாடங்கள், கட்டிட சேதாரங்கள் போன்றவற்றை விற்பதனால் ஏற்படும் நிதியை மேலாண்மை செய்யவும், நிர்வகிக்கவும், மறுமூலதனம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
மாவட்ட ஆட்சியர்களின் தலைமையிலான மாவட்ட பேரிடர்மேலாண்மை ஆணையத்தின் மூலமாக பெரும்பாலும் இவை செயலாக்கம் பெறுகின்றன.
தமிழ்நாடு மாநிலப் பேரிடர் அபாயத் தணிக்கை முகமையே பேரிடர் சார்ந்த அரசின் செயல்பாடுகளின் இதயப் பகுதியாக உள்ளது. அதாவது பேரிடர் அபாயக் குறைப்பு, மீட்பு, மீள்கட்டமைப்பு ஆகிய மூன்று கட்டங்களிலும் இம்முகமையே பிரதானமாகச் செயல்படுகிறது. இதன் ஒவ்வொரு கட்டச் செயல்பாடுகளையும் உதாரணங்களுடன் காண்போம்.
பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிற தகவல்களைக்கொண்டு புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறித்த பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை மேற்கொள்கிறது. புயல் எச்சரிக்கை குறித்து வானிலை மையம், பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து மாநிலப் பேரிடர் ஆணையமானது அனைத்து மாவட்ட வாரியத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் ஒடீசா கடலோர மாவட்டங்களை ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இந்திய வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை காரணமாக சுமார் ஏழு லட்சம் மக்கள் தேசியப் பேரிடர்மீட்பு குழுவால் (ழிஞிஸிதி) கரையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதனால் உயிர்ச்சேதம் நூறாகக் குறைக்கப்பட்டது. இது போலவே கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னையை வர்தா புயல் தாக்கியபோதும் சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். உயிர்ச்சேதம் சுமார் 16 ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது கஜா புயலின்போதும் சுமார் 2.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் 47ஆகக் குறைக்கப்பட்டது. அதேநேரம் கடைசி நேரம் வரையிலும் புயல் கரையை கடக்கிற இடம், புயலின் திசைப்போக்கு குறித்து தெளிவான எச்சரிக்கை விடுக்கப்படாததால் மன்னார்குடி, கொடைக்கானல், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
கடந்த 2017 ஓகி புயலின்போது இந்த கட்டமைப்பின் தோல்வியால் பலநூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி பலியாகினர். நவம்பர் 30 இல் பெரும் புயல் தாக்கப் போகிறது என முறையாக மூன்று கட்ட எச்சரிக்கை முன்கூட்டியே வழங்கப்படவில்லை. ஆனால் நவம்பர் 29 ஆம் தேதி காலை முதலே தமிழ்நாடு வெதர் மேன் எனும் பிரதீப் ஜான், புயல் அபாயம் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகளை முகநூலில் பதிவிட்டுவந்தார். ஆனால் வானிலை மையம் மௌனம் காத்தது.
பேரிடர்கால மீட்பு அமைப்பு:
பேரிடர் சூழ்நிலைகளில் பலதுறைகளை ஒருங்கிணைத்து உடனடியான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களின் உயிரையும் உடமைகளையும் காப்பது பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரண அமைப்பின் கடமையாகும். மாநிலத் தலைமைப் பொறுப்பாளராக மாநில தலைமைச் செயலாளரும், இன்சிடன்ட் கமாண்டராக, இதன் தலைமை உறுப்பாக செயல்படுவார்கள். இந்த அமைப்பானது அரசுத் துறை அல்லாது தனியார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பேரிடர்கால மீட்புப் பணிகளை வழி நடத்தும்.
இந்த அமைப்பின் செயலற்ற தன்மையானது தமிழகத்தின் கடந்த மூன்று முக்கிய பேரிடர்களின்போதும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. சென்னை வெள்ளம், ஓகி புயல் மற்றும் தற்போதைய கஜா புயல் வரையிலும் “பேரிடர் கால மீட்பு அமைப்பு” மண்ணுக்குள் தலையை அழுந்திக் கொண்டது.
மாறாக, பேரிடர் கால மீட்பு அமைப்பிற்கு தனிப் படை உருவாக்கம், பிரத்யேகப் பயிற்சி, உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்து கட்டமைப்பையும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டுள்ளதாக அதன் இணையத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாநிலப் பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணைக் கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல் துறை ஆய்வாளர்களும் மற்றும் 70 காவல் துறையினர் ஒப்பந்தப் பணி அடிப்படையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள். தேசீயப் பேரிடர் மீட்புப் படையினரின் ஆலோசனையின் மூலம் நேர்த்தியான பேரிடர் மேலாண்மை மீட்புப் பயிற்சி மாநிலப் பேரிடர் மீட்புப்படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனவும் இப்படையினை மேம்படுத்துவதற்காக சிறப்புக் காவல் படையிலிருந்து கடலோர மாவட்டங்களுக்கு 70 காவலர்கள் வீதம் மொத்தம் 2500 காவலர்கள் தேசீய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மூலம் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் போன்ற பயிற்சிகளையும் பெற்றுள்ளதாகவும் பேரிடரின் போது பாதுகாப்பில் நுட்பமாகக் கையாள மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் செஞ்சிலுவை அமைப்பினரின் உதவியுடனும் சிறப்புப் பயிற்சிகளான தேடல், உடனடி மருத்துவம் மற்றும் முதலுதவி போன்ற பயிற்சிகள் முதல் பொறுப்பாளருக்கு மாவட்டவாரியாக அளிக்கப்படுவதாகவும் தமிழகப் பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் அதிகாரப் பூர்வமாக பதியப்பட்டுள்ளது. அதோடு. பேரிடர் கால மீட்புப் படையினருக்குத் தேவையான தரம் வாய்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும், தேசீயப் பேரிடர் மீட்புப் படையினர் மூலம் திறன் வளர்வித்தலுக்கு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இவை போக ஆப்த மித்ரா- சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டத்தின்கீழ் “நாடு முழுவதும் வெள்ளத்தினால் மிகக் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகும் 30 மாவட்டங்களைத் தேர்வு செய்து, மாவட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள் வீதம், மொத்தம் 6,000 தன்னார்வலர்களுக்கு மத்திய நிதியிலிருந்து பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்கிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது” என ஆணையம் தெரிவித்துள்ளது. பேரிடரால் இன்னும் பல ஆயிரம் மக்கள் மாண்டு வருகிற நிலையில் இத்திட்டம் “ஒப்புதல்” நிலையில் இருப்பதுதான் கொடுமை!
இத்திட்டத்தை செயல்படுத்திட முதல் தவணையாக ரூ.22.70 இலட்சம் தமிழக அரசால் அரசாணை (2டி) எண். 288 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (பே. மே 1 (2)) நாள்: 11.09.2017 மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
கடந்த மூன்று ஆண்டுகளின் மூன்று முக்கியப் பேரிடர்களின்போது பேரிடர் கால மீட்புப் பணிகளில் தமிழக மீட்புப் படை குறித்த தகவல்கள் எதுவுமே நடைமுறையில் செயலாக்கம் பெறவில்லை. தமிழக அரசு கூறுகிற பயிற்சி பெற்ற மீட்புப் படையானது, பேரிடர் காலத்தில் எங்கு சென்றது? உபகரணம் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? இதை கண்காணிக்க வேண்டிய மாநிலப் பேரிடர் ஆணையத்தின் தலைவர் எங்கு சென்றார்? மாநிலப் பேரிடர் ஆணையத்திற்கு வழிகாட்டுகிற தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ன செய்கிறது? அதன் தலைவர் பிரதமர் என்ன செய்கிறார்? பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்ன செய்கிறது?
ஒரு ரயில் விபத்து ஏற்பட்டால், ரயில்வே துறை அமைச்சரைப் பொறுப்பாக்கி, அவரை ராஜினாமா செய்யக்கோரி சிவில் சமூகமும் எதிர்க்கட்சியும் கோரிக்கை வைக்கின்றன. அதேநேரம் பேரிடர் ஆயத்தம், மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பில் பொறுப்பும் கண்காணிப்பும் இல்லாத, பேரிடர் மேலாண்மை ஆணையமானது, கொள்கையில் மட்டுமே உறுதி கொடுத்து, நடைமுறையில் மக்களை கைகழுவி விடுகிறது!
பேரிடருக்கு பிந்தைய மறு கட்டமைப்பு, மறுவாழ்வு:
பேரிடருக்குப் பிந்தைய மீள் கட்டமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை தெளிவில்லாமல் உள்ளது. மறு கட்டமைப்பு திட்டமென வெறும் கண்துடைப்பு திட்டங்களை அறிவிப்பதோடு மத்திய மாநில அரசு மக்களை கைகழுவிவிட்டுச் செல்கிறது. இத்திட்டச் செயல்பாடு குறித்து கண்காணிப்பும் இல்லை, திட்ட இலக்குமில்லை. நிதிப் பங்கீடு குறித்து தெளிவான கொள்கையும் இல்லை.
2011 தானே புயல் தாக்கத்தின்போது சுமார் ஒரு லட்சம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாக பேரிடர் மேலாண்மை ஆய்வறிக்கை கூறியது. அதையடுத்து தானே வீடு என்ற ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவித்தார். கடலூரை குடிசையில்லா மாவட்டமாக மாற்றுவோம் என உறுதி கூறி வீட்டிற்கு தலா 1 லட்சம் செலவில் (சுமார் 200 சதுரடி) ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தருகிற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புயல் தாக்கி இதுவரை எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை பாதி வீடுகள்தான் கட்டி முடிக்கப்படுள்ளன. கட்டிய வீடுகளும் இடப் பற்றாக்குறையால் வசிக்க இயலாதவையாக உள்ளன!
தற்போது கஜா புயல் பாதிப்பால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அம்மாவின் ஆட்சியைத் தொடர்வதாகச் சொல்கிற இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!
மறுவாழ்வுத் திட்டங்களில் மலிந்துள்ள ஊழல்:
பேரிடர் மீள்கட்டமைப்பு, மறுவாழ்வுத் திட்ட செயலாக்கத்தில் முறையான கண்காணிப்பு அற்ற போக்கால் பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் நடைபெறுகின்றன.
தானே தாக்குதலுக்கு உள்ளான விழுப்புரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலமுடைய விவசாயிகளுக்கு உதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இவை முறையாக வழங்கப்படவில்லை எனவும், “தானே” உதவித்திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சென்னை உச்ச நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து பதிலளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீசும் அனுப்பியது.
இதைப்போலவே சுனாமி மீள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பெரும் ஊழலும் நிதிக் கையாடலும் நடைபெற்றன. சுனாமிக்குப் பின்பு மிக அதிக அளவில் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் சுனாமி பாதிக்கபட்ட பகுதிகளுக்குப் படையெடுத்தன. பல கோடி ரூபாய் அளவில் மீள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிய இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் போதிய கண்காணிப்பு இன்றி அமைந்தன. கடந்த 2009 ஆம் ஆண்டில் சுனாமி நிதியில் ரூ 7.5 கோடி கையாடல் செய்ததாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு பேரிடருக்குப் பிந்தைய உதவி அறிவிப்பும் செயல்பாடும் அப்போதைய நிலைக்கு ஏற்றவாறு எடுக்கப்படுகிறதே தவிர தெளிவான கொள்கை ஏதும் முறையாக வகுத்து வழங்கப்படவில்லை. சென்னை பெருவெள்ளத்தின்போது, பாதிப்படைந்த மக்களுக்கு ரூ 5,000 வழங்கப்பட்டது. அதிலும் முறைகேடுகள். இது போலவே ஓகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு முதலில் பத்து லட்சம் அறிவித்துப் பின்பு இருபது லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. டீசல் மானியம் அறிவிக்கப்பட்டது. காணாமல் போனோருக்கு வழங்கப்படவேண்டிய உதவி குறித்து கொள்கை முடிவில்லை!
நிதிப் பங்கீட்டில் மத்திய மாநில அரசுகளின் மோதல்:
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெரிய ஓட்டைகளில் ஒன்று பேரிடர் மீள்கட்டமைப்பிற்கான நிதிப் பங்கீடு ஆகும். அண்மையில் கேரள வெள்ளத்திற்கு உதவியதாக மத்திய அரசின் விமானப் படை பில் அனுப்பியது வைரலாகியது. போலவே ஒவ்வொரு பேரிடரின்போதும் மாநில அரசு ஆயிரம் கோடிகளில் இழப்பீடு கேட்க, மத்திய அரசோ சில நூறு கோடிகளை தேசிய பேரிடர் நிதியாக வழங்குகிறது.
தற்போது கஜா புயலால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். மீள் கட்டமைப்பு சார்ந்த அடையாள அரசியல் வெட்கமற்ற வகையில் முன்னெடுக்கப்படுகிறதே தவிர தெளிவான கொள்கை முடிவேதும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாநிலங்களோ மத்திய அரசிடம் யாசகம் கேட்பதுபோல கையேந்தி நிற்கிறது. பிரச்சினை நீதிமன்றம்வரை செல்கிறது. மாநிலப் பேரிடர் உதவி நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் உதவிக்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு நேரடியாக மத்திய அரசைக் குற்றஞ்சாட்டியது. மத்திய அரசோ, புயல் சேதம் குறித்து போதுமான விளக்கங்களைத் தரத் தவறியதால்தாள் உதவி வழங்க கால தாமதம் ஆகிறது என மாநில அரசுமீது குற்றம் சாட்டியது.
தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டமும் நடைமுறையும் இங்கே நகைப்புக் குரியதாகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் வெற்றுக் காகிதமாகிவிடுகிறது.
பேரிடர் ஆயுத்தக் கட்டமைப்பு:
பேரிடரின் அபாயங்களைக் குறைப்பதற்கும் தணிப்பதற்கும் பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்தக் கட்டமைப்பு, இடர் ஆளுமையின் முக்கிய அம்சமாகும். தமிழகத்தின் நீர்த்தேவையைப் பெரும்பாலும் வடகிழக்குப் பருவமழையே பூர்த்தி செய்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகிற காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் நவம்பர் டிசம்பரில் நமக்கு நல்ல மழை கிடைகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் சில நேரங்களில் புயல் சின்னங்களாக மாறி, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் கரையைக் கடக்கின்றன. தமிழக வரலாற்றில் இக்காலங்களில் பல புயல்கள் உருவாகி கரையைக் கடந்துள்ளன. இக்காலங்களில் கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் ஏற்படுகிற கரையோர பாதிப்பு, உயர் காற்று பாதிப்பு மற்றும் புயல் சலனப் பாதிப்பு குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் தெளிவான வரைபடத்தைத் தயாரித்துள்ளது. அதில் “நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் உயர்காற்று பாதிப்பு மண்டலங்களாக வரையறுத்து உயர்காற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.”
- உயர் ஆபத்து மண்டலம் – 76-117 கி.மீ / மணி
- உயர் சேத ஆபத்து மண்டலப் பகுதி -63-74 கி.மீ / மணி
- மிதமான சேத ஆபத்துப்பகுதி -31.39 கி.மீ / மணி.இதைபோலவே “தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தெற்குப் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சியைச் சந்தித்துள்ளது. தஞ்சாவூர், கடலூர் மற்றும் சென்னையின் வடக்குப் பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சி ஏற்படும் பகுதிகளாக உள்ளன” எனவும் குறிப்பிட்டுள்ளது.
கஜா புயல் தாக்கிய நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலிலும் வரைபடத்திலும் காட்டியுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடரை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முன்தயாரிப்பு ஆயத்தப் பணிகளையும் இம்மாவட்டங்களில் மேற்கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை.
பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உலக வங்கி நிதியில் இம்மாவட்டங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குறிப்பாக கிழக்குக் கடலோர நகரங்களான நாகை, வேளாங்கண்ணி, கடலூரில் மின்சார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கடலோர பேரிடர் அபாயத் தணிப்புத் திட்டத்திற்கு மட்டுமே (சிஷீணீstணீறீ பீவீsணீstமீக்ஷீ க்ஷீவீsளீ க்ஷீமீபீuநீtவீஷீஸீ றிக்ஷீஷீழீமீநீt) ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மின் கம்பிகளை புதைவட வழியில் மாற்றுவது அதில் ஒன்றாகும். ஐந்தாண்டுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம் அமலாக்கப்பட்டிருந்தால் நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பெரியளவிலான மின்சேதங்களை தவிர்த்திருக்கலாம். புதைவிட மின் திட்டத்தோடு, வீடு கட்டுவது, ஆபத்து கால உதவி முகாம்கள் கட்டுவது, தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கத்திற்காக சுமார் 236 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி வழங்கியது. இந்த நிதியை மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் சேதங்களைக் குறைத்திருக்கலாம்.
சுனாமிக்குப் பிந்தைய உடனடி மறு கட்டமைப்புத் திட்டங்களுக்கு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை எனக் கூறி உலக வங்கி வழங்கவிருந்த சுமார் 235 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை கடந்த 2011ஆம் ஆண்டில் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது!
இதைப்போலவே, தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கான ஏற்பாடுகள் மோசமாக உள்ளதாக இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கடந்த 2013இல் அறிக்கை அளித்தார். குறிப்பாக கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் “அவசரகால நடவடிக்கை மையங்கள் தயார் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை விமர்சித்திருந்தது. இவை ஒழுங்காக செயல்பட்டிருந்தால், 2011இல் ‘தானே புயல்’ தாக்கியபோதும், 2017இல் ஒகி தாக்கியபோதும் கடலோரக் கிராமங்கள் காக்கப்பட்டிருக்கும். முதல்வர் தலைமையிலான மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நான்காண்டுக்கு ஒருமுறைகூட கூடவில்லை என கடந்த ஜூலை மாதத்தில்கூட தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழு கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(Poovulagu)
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் போதாமைகளின் சில வருமாறு:
- பேரிடர் மேலாண்மைக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி உள்ளது.
- தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்புகள், பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
- கண்காணிப்பும், பொறுப்புக் கூறலும் முற்றிலுமாக இல்லை.
- பேரிடர் நிதி பங்கீடு குறித்த தெளிவில்லாத கொள்கைள், மாநில அரசுகளின் தலையில் மொத்த நிதிச் சுமையையும் மைய அரசு சுமத்துவதற்கும் மத்திய அமைச்சகம் நழுவிச் செல்வதற்கும் வழிசெய்கிறது.
- பல்வேறு துறைசார் அதிகாரிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்புக் குறைபாடுகள் உள்ளன.
- பேரிடருக்குப் பிந்தைய மீளகட்டமைப்பு நிதி ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படாமை.சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பாக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, பேரிடர் மேலாண்மைக்கான கொள்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிட்டது. (அதுவும் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே வேறு வழியில்லாமல் வெளியிட்டுள்ளது). பேரிடர் மேலாண்மைக் கொள்கையை அறிவிக்கவே பதிமூன்று ஆண்டுகள், நான்காண்டுகளாக மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தையே நடத்தாத மாநில முதல்வர், செயல்படாத உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், மறுவாழ்வுத் திட்டங்களின் நிதி மோசடிகள், பின்தங்கியுள்ள பேரிடர் தயாரிப்பு நிலைகள் என பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒட்டுமொத்தமாக மகா மோசமான மந்தமான செயல்பாடுகளை தனது கடந்தகால வரலாறாக கொண்டுள்ளது. இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிப் பிழைத்த மக்கள்கூட, ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மை எனும் செயற்கைப் பேரிடரில் சிக்கிச் சாகிறார்கள்.
Poovulagu. அருண் நெடுஞ்செழியன்.
Add new comment