Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒரு மரத்தின் பணமதிப்பு 2 லட்சம் டாலரா !!!!. இந்திய மரங்கள்பற்றி
தலைநகர் தில்லியில் 17000 முழு வளர்ச்சியடைந்த மரங்கள், வீடுகள் உருவாக வெட்டப்பட இருக்கின்றன. அரசுதரப்பு வாதம் என்னவெனில் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் பத்து மரக்கன்றுகள் நடப்படும் என்பதே. ஆனால், அவை வளர 20 வருடங்கள் ஆகுமே? அதுவரை அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமே? – நடக்குமா நம் நாட்டில்? வீடு கட்ட இருக்கும் National Building Construction Corporation (NBCC) நிறுவனத்திற்கு அது தவறான வாதமெனத் தெரிந்தும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் வாயடைத்துப் போயுள்ளனர். குறிப்பாக தலைநகர் தில்லியில் காற்றின் மாசுபாடு மிக அதிகமாக உள்ள நிலையில் மரங்களின் பயன்பாட்டை அதிகாரிகள் அறியாமல் இருப்பது நியாயம்தானா?
சென்னை – சேலம் 8 வழிச்சாலை:
National Highway Authority of India (NHAI) சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எழுத்து வடிவில் கொடுத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி 6400 மரங்கள் மட்டும் வெட்டப்படும் என்று உள்ள நிலையில், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கணக்கின்படி மூன்று முதல் நான்கு லட்சம் மரங்கள் அழிக்கப்படும் எனக் கூறும்போது உண்மையை எப்படித் தெரிந்துகொள்வது? இக்கணக்குப்படி மலைகளில் உள்ள மரங்கள் அழிவதை அரசு முறையாகக் கணக்கில் கொள்ளவில்லை என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. மேலும் சாலையிடும் பணிக்கு கட்டுமானப் பணியின்போது தேவையான தண்ணீரின் அளவு 11 இலட்சத்து 20 ஆயிரம் கிலோ லிட்டர், 1 இலட்சத்து 63 ஆயிரம் Bitumen (சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது).
இனி மரங்களின் பயன் குறித்துப் பார்ப்போம் – 1979 டி.எம்.தாஸ், கல்கத்தா பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் முடிவுகள்.
50 வருடம் வாழும் ஒரு மரத்தின் பணமதிப்பு 2 லட்சம் டாலர். (1979 பண மதிப்பு நிலவரப்படியே)
1. மரம் மூலம் வெளியாகும் ஆக்சிஜனின் அளவு.
2. அதன் பலன்கள் – அதன் மூலமான பண மதிப்பு.
3. மரக்கிளைகளின் பயன்பாடு (பயோ மாஸ் உட்பட)
4. மரத்தின் ஒரு கிராம் வளர்ச்சியின்போது 2.66 கிராம் ஆக்சிஜன் வெளியாகி நாம் நிம்மதியாக சுவாசிக்க உதவுகிறது.
Dr.Nancy Beckham, Australia அவர்களின் “Trees finding their true value” என்ற ஆய்வுக் கட்டுரையில் ஓசையின்றி நாள்தோறும் மரங்களின் பலவருடச் செயல்பாடுகளின் உண்மை நிலவரம் வியக்கத்தக்க நிலையில் உள்ளது. அவை,
1. மண்ணின் பலத்தை அதிகப்படுத்தி அதைப் பாதுகாத்து மண் அரிப்பைத் தடுத்தல்.
2. சத்துப்பொருட்களின் மறுசுழற்சி.
3. காற்றை குளுமைப்படுத்துவது.
4. காற்றின் வேகத்தை மாற்றியமைத்துக் கட்டுப்படுத்துவது.
5. மழை பெய்வதற்கான காரணியாக செயல்படுவது.
6. மாசுகளை உள்வாங்கி அவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவது.
7. மரப் பொருட்களின் மூலம் கிடைக்கும் எரிபொருள் சிக்கனம்.
8. கழிவுநீர் வடிகட்டியாக செயல்படுவது.
9. மரங்களின் இருப்பின்மூலம் ஒரு இடத்தின் பண மதிப்பைக் கூட்டுவது.
10. சுற்றுலாத் தலமாக உருவாகி அதன்மூலம் கிடைக்கும் பண வருவாய்.
11. மக்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பது.
12. மன அழுத்தத்தைக் குறைத்து சுகாதாரத்தை மேம்படுத்துவது. (மிக சமீபத்தில் Environmental Research என்னும் ஆய்வுக் கட்டுரையில். Caiomhe Twohig Bennett – Norwich Medical School, Andy Jones இருவரும் 20 நாடுகளிலுள்ள 29 இலட்சம் மக்களிடத்தில் செய்த மிகப் பெரும் ஆய்வில் மரங்கள் இருக்கும் பசுமைச் சூழலில் வாழும் மக்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய்கள், முன்கூட்டிய இறப்பு, குறைப் பிரசவம், மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் [காட்டுக் குளியல் (Forest Bathing)] மிகக் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.)
13. உணவு, மருந்தாகப் பயன்படுதல்.
14. பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்.
போன்றவை கிடைக்கப்பெறுவதாக ஆய்வில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
ஓர் அமெரிக்க ஆய்வில் (The Dept of Environmental Conservation of New York State, USA) பின் வருவன தெரியவந்துள்ளது.
1. மரங்கள் செழிப்பாக இருந்தால் மனித சுகாதாரம் நிச்சயம் மேம்படும்.
2. 100 மரங்கள் வருடத்திற்கு 53 டன் கரியமில வாயுவை நீக்குகிறது; 430 பவுண்டு காற்றின் மாசை நீக்குகிறது, 1 இலட்சத்து 40 ஆயிரம் கேலன் (ஒரு கேலன் என்பது 3.8 லிட்) மழைநீரைச் சேமிக்கிறது.
3. மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் மக்கள் அதிக மன நிறைவுடன் இருப்பதாகவும், சமூகப் பிரச்சினைகள் அங்கு குறைந்து காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
4. சரியான இடங்களில் மரங்களை நட்டு காற்றின் குளிர்ச்சியை உறுதிப் படுத்துவதன் மூலம் குளிர்விப்பான்களின் தேவை (Air Conditioners) 56% குறைந்து பெருமளவில் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது.
Delhi Green எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2013 இல் செய்த ஆய்வில் நன்கு வளர்ந்த ஒரு மரம் மூலம் ஒரு வருடத்திற்கு அது ஆக்சிஜன் வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் பணமதிப்பு ரூ. 24 இலட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
புத்தரும், அசோக சக்கரவர்த்தியும், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலும் பிறந்த இந்நாட்டில் மரங்களின் பயன்பாடு தெரியவில்லை எனக்கூறுவது வரலாற்றுப் பிழையே. (Poovulagu)
Add new comment