'திரைக் கலாச்சாரம்' அதனால் சமுதாய தாக்குதலுக்குண்டானதா எப்படி ஏன் மேலும் தெரிய


young spending time in-front of screens.

'திரைக் கலாச்சாரம்' அதனால்  சமுதாய தாக்குதலுக்குண்டானதா? எப்படி? ஏன்? 

செல்லிடப்பேசி, கணணி, வீடியோ விளையாட்டுக்கள், தொலைகாட்சி, சினிமா என்று, இன்றைய சமுதாயம் உருவாக்கியுள்ள 'திரைக் கலாச்சாரம்' நம் அனைவரையும், குறிப்பாக, இளையோரை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை, இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றோர் அனைவரும் உணர்ந்தனர் என்று, அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள், ஒரு கருத்தரங்கில் கூறினார்.

ஜூன் 2, வருகிற ஞாயிறன்று, 53 வது சமூகத்தொடர்பு உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அயர்லாந்தின் Maynooth நகரில், "டிஜிட்டல் உலகில் நம்பிக்கையாளர்கள்: மறைபரப்புப்பணிக்கு வாய்ப்புக்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பேராயர் மார்ட்டின் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

சமூக ஊடகங்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும் நம் வாழ்வின், குறிப்பாக, இளையோர் வாழ்வின், நிரந்தரமான, இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளன என்பதை மறுக்க இயலாதச் சூழலில், 'திரையோடும்' 'திரையைவிட்டு விலகியும்' நாம் செலவிடும் நேரங்களைக் குறித்து தெளிவான புரிதல் அவசியமாகிறது என்று, பேராயர் மார்ட்டின் அவர்கள் எடுத்துரைத்தார்.

1963 ஆம் ஆண்டு, இரண்டாம் வத்திக்கான் சங்கம், 'வியப்புமிக்கவற்றின் நடுவே' என்ற பொருள்படும் 'Inter Mirifica' என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கை, ஊடகத்தின் தாக்கத்தைக் குறித்து திருஅவையின் கருத்துக்களை தெளிவாக்கியது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் மார்ட்டின் அவர்கள், அந்த அறிக்கையின் ஒரு சில முக்கிய எண்ணங்களையும் மேற்கோள்களாகக் கூறினார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 53 வது சமூகத்தொடர்பு உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியிலிருந்தும் ஒரு சில மேற்கோள்களை எடுத்துரைத்த பேராயர் மார்ட்டின் அவர்கள், டிஜிட்டல் உலகில் தன் தனிப்பட்ட வாழ்வை வழிநடத்தும் பத்து விதிமுறைகளுடன், தன் உரையை நிறைவு செய்தார்.

இவ்வாண்டு ஜூன் 2 ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் சமூகத்தொடர்பு உலக நாளுக்கென திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தி, திருத்தூதர் பவுலின் கூற்றான, "நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்" (எபேசியர் 4:25) என்பதை, தலைப்பாகவும், 'சமூக வலைத்தள குழுமங்களிலிருந்து மனித குடும்பத்திற்கு' என்பதை உப தலைப்பாகவும் கொண்டுள்ளது.

இரண்டாம் வத்திக்கான் சங்கம், திருஅவையின் அனைத்து ஆயர்களுக்கும் பரிந்துரைத்த ஒரே உலக நாள், சமூகத்தொடர்பு உலக நாள் என்பதும், இந்த உலக நாள், கடந்த 53 ஆண்டுகளாக தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறு சிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன. 

(வத்திக்கான் செய்தி - மே 31, 2019)

Add new comment

4 + 15 =