Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒற்றை பெண் பற்ற வைத்த நெருப்பு, பருவநிலை மாற்றம், பரவும் போராட்டம்
ஒற்றை பெண் பற்ற வைத்த நெருப்பு, பருவநிலை மாற்றம், பரவும் போராட்டம்
மே 24 ஆம் தேதி 110 நாடுகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக குழந்தைகள் வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த சிறுவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் உடனடியாக உறுதியாக நடவடிக்கை எடுக்க கோரிய சிறுவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும் வரை வெள்ளிக்கிழமை தோறும் இந்த போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.
ஒற்றை பெண்
சுவீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே செப்டம்பர் 2018 ஆம் ஆண்டிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறார் க்ரெடா. ஸ்வீடன் அரசாங்கம் பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வகுப்புகளை புறக்கணிப்பேன் என்று அப்போது பிபிசியிடம் பேசிய 15 வயதே ஆன க்ரெடா தெரிவித்திருந்தார். இந்த ஒற்றை பெண்ணின் போராட்டம் பல நாடுகளுக்கு பரவியது.
கடந்த வெள்ளிக்கிழமை மே 24 ஆம் தேதி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து சிறுவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடினார்கள். சர்வதேச அளவில் இது போல ஒரு போராட்டம் மார்ச் 15ம் தேதி நடந்தது. அதில் 125 நாடுகளை சேர்ந்த 1.6 மில்லியன் மாணவர்கள் பங்கேற்றனர். மே 24 போராட்டம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில்தான் தொடங்கியது.
பருவநிலையினால் ஏற்படும் அழிவுகளால் தான் கவலை கொள்வதாகவும், அதனால் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கிறார் மெல்போர்னை சேர்ந்த 13 வயது நினா. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அவர், "ஒவ்வொரு முறை அங்கு காட்டுத்தீ ஏற்படும் போதும் ஏதோவொரு விலங்கு அழிவின் விளிம்பிற்கு செல்கிறது" என்கிறார்.
ஆஸ்திரேலியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு சமீபத்திய கோடையில் அதிக வெப்பநிலை பதிவானது. அங்கு ஏற்படும் வறட்சி, வெள்ளம், அனல் காற்று ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் இந்தியா, ஆஃப்கன், தாய்லாந்து மற்றும் ஜப்பானை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டார்கள். இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச அளவில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.
இந்த மே24 போராட்டத்தின் போது, ஜெர்மன் சுழலியல் செயற்பாட்டாளர் லூயிசா ஜெர்மன் நாளிதழில் ஒரு கடிதம் எழுதி இருந்தார், அதில் கடந்த தலைமுறைக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்.
அவர், "இது மனிதகுலத்தின் கடமை. ஒரு பெரிய யுத்தத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க முடியும். அதன் மூலம் மாற்றத்தை கொண்டுவர முடியும். இது எங்களின் அழைப்பு செப்டம்பர் 20 நடக்கும் போராட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் "என்று குறிப்பிட்டு இருந்தார்.
(BBC Tamil) மே 30, 2019.
Add new comment