சந்திப்பை மேற்கொள்ள அழைக்கும் ருமேனியப் பயணம்


ருமேனியாவில் Sumuleu Ciuc திருத்தலத்திற்குத் திருப்பயணம். PC: Vatican News.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 30வது திருத்தூதுப் பயணத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி நிகழும் உரையாடல், ஐரோப்பிய கண்டத்தை உருவாக்கிய அடிப்படை விழுமியங்கள் ஆகியவை, அடிப்படை அம்சங்களாக விளங்கும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்கள் கூறினார்.

மே 31, இவ்வெள்ளி முதல் ஜூன் 2, வருகிற ஞாயிறு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருமேனியா நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, கர்தினால் பரோலின் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், இத்திருத்தூதுப் பயணத்திற்கென, "நாம் இணைந்து நடைபயில்வோம்" என்ற சொற்களுடன் உருவாக்கப்பட்டுள்ள விருதுவாக்கு, மரியன்னையை நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

தன் உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க அன்னை மரியா மேற்கொண்ட பயணத்தை நினைவுகூரும் திருநாளான மே 31 ஆம் தேதி, இத்திருத்தூதுப் பயணம் துவங்குகிறது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாமும் சந்திப்பை மேற்கொள்வதற்கு இத்திருத்தூதுப் பயணம் சிறப்பாக அழைக்கிறது என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

1999ம் ஆண்டு, மே மாதம், புனிதத் திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் அவர்கள் ருமேனியா நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட வேளையில், ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் உறவுகளைப் புதுப்பித்ததன் 20 ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணம், அவ்வுறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதாக அமையும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

அன்னிய நாட்டவரின் ஆக்கிரமிப்பு, கடவுளை மறுக்கும் நிலை ஆகிய துன்பங்களை, அண்மையக் காலங்களில் சந்தித்த ருமேனிய மக்களுக்கு, நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கும் வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் அமையும் என்று தான் நம்புவதாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்  அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் கூறினார். 

(வத்திக்கான் செய்தி - மே 30, 2019)

Add new comment

11 + 4 =