Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மெக்சிகோ தொலைக்காட்சிக்கு திருத்தந்தையின் நேர்காணல்
மெக்சிகோ நாட்டிற்கு மீண்டும் ஒரு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது, புலம்பெயர்ந்தோர் விவகாரம், இளையோர், உரையாடல், ஒப்புரவு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் உட்பட, பல்வேறு தலைப்புகளில் ஒரு நீண்ட தொலைக்காட்சி நேர்காணலில், தனது எண்ணங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டு Televisa தொலைக்காட்சி அலைவரிசைக்கென, அந்நாட்டு ஊடகவியலாளர் Valentina Alazraki அவர்களுக்கு அளித்த நீண்ட நேர்காணல், மே 28, இச்செவ்வாய் பிற்பகலில் ஒளிபரப்பாகியது. அதன் சிறப்பு ஒளிபரப்பு, ஜூன் 2, வருகிற ஞாயிறன்று இடம்பெறும்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி ஆட்சியில் அமர்ந்த, மெக்சிகோ நாட்டு அரசுத்தலைவர் Andres Manuel Lopez Obrador அவர்கள், அந்நாட்டுக்கு வருகை தருமாறு, திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது பற்றிய கேள்வியுடன் இந்நேர்காணல் தொடங்கியது.
மெக்சிகோவிற்கு மீண்டும் செல்வதற்கு விருப்பமாக இருந்தாலும், இதுவரை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாத மற்ற நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்தார்.
மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்
சுவர்களை எழுப்பி, தங்கள் நிலப்பகுதிகளைப் பாதுகாக்கும் புதிய கலாச்சாரம் இக்காலத்தில் நிலவி வருகிறது, ஆனால் பெர்லின் சுவர், எவ்வளவு தலைவலிகளையும், துன்பங்களையும் அளித்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று கூறியத் திருத்தந்தை, விலங்குகள் செய்யாததை மனிதர் செய்கின்றனர், அதே குழிக்குள் இருமுறை விழுகின்ற விலங்கு மனிதர் மட்டுமே என்று கூறினார்.
கலந்துரையாடல், வளர்ச்சி, வரவேற்பு, கல்வி, ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு போன்ற மனிதநல நடவடிக்கைகளாக, நாட்டின் பாதுகாப்பு அமைகின்றவேளை, பாதுகாப்புக்கென சுவர்கள் ஏன் எழுப்பப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மெக்சிகோ எல்லையில் எழுப்பப்படும் சுவரை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, Ceuta மற்றும் Melilla இஸ்பெயின் நிலப்பகுதிகளிலிருந்து மொராக்கோவைப் பிரிக்கும் பயங்கரமான சுவர் உட்பட, உலகின் பல பகுதிகளிலுள்ள சுவர்கள் பற்றியும் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது, இயல்பான அவர்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும் எனவும், எல்லா நாடுகளின் எல்லைகளுக்கும் இடையே சுவர்களை எழுப்புவது இயலாத காரியம் எனவும் உரைத்த திருத்தந்தை, சுவர்களை யார் யார் எழுப்புகின்றார்களோ, அவர்கள், தாங்கள் எழுப்பும் சுவர்களுக்குள்ளே கைதிகளாக இறுதியில் இருப்பார்கள் எனவும் கூறினார்.
சுவர்களை அமைக்காமல், பாலங்களை அமைத்து, நிலப்பகுதியை முழுமையாகப் பாதுகாக்க முடியும் என்றும், அரசியல் பாலங்கள், கலாச்சாரப் பாலங்கள் பற்றி தான் குறிப்பிடுவதாகத் தெரிவித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு கொண்ட பாலங்களை அமைத்தால், அடுத்த இடத்தில் வாழ்பவருடன்கூட கைகுலுக்கலாம் எனவும், உரையாடல் என ஒன்று இருப்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.
(வத்திக்கான் செய்தி - மே 29, 2019)
Add new comment