Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பணத்தை வழிபடும் போக்கை அகற்ற உழைத்தல் - திருத்தந்தை
வாழ்வையும் மரணத்தையும்விட, இலாப ஈட்டலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய உலகில், மனித மாண்பை ஊக்குவிப்பதையும், பணத்தை வழிபடுவதிலிருந்து மக்களை விடுவிப்பதையும், அரசு பதவியிலிருப்போர் தங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்
பாப்பிறை அறிவியல் கழகத்தால் வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த உலக நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் இத்திங்கள் மாலை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதும், சுத்தமான எரிபொருட்கள் மீதான முதலீடுகள் குறைந்து வருவதும், வருங்காலம் குறித்த கவலையைத் தருவதாக உள்ளன என்றார்.
நன்னெறிக் கொள்கைகளுக்கும், நிதிக் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாட்டு குழப்பநிலைகளைக் களைவது குறித்து ஆராய்ந்துவரும் இந்த நிதி அமைச்சர்களின் கூட்டம், ஏற்கனவே உலகத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 'நீடித்த வளர்ச்சித் திட்டங்கள்', மற்றும், ‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்’, என்ற இரு ஒப்பந்தங்களின் செயல்பாட்டை தங்கள் நாடுகளில் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காற்று, சூரியன் மற்றும் தண்ணீரிலிருந்து பெறப்படும் ஆற்றல், சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்காதது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளபோதிலும், மாசுகேட்டை உருவாக்கும் பழைய முறைகளையே தொடர்ந்து உலகம் பின்பற்றிவருவது, சிலரின் சுயநலப்போக்குகளின் வெளிப்பாடாக உள்ளது என, தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.
வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பவைகளைக்கூட, அவைகள் தரும் தற்காலிக இலாபம் கருதி ஏற்றுக்கொள்ளும் மனித குலம், இன்றைய உலகில் வெப்பக் காற்று வீசுதல், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, கடல்மட்ட உயர்வு, நோய்கள் பரவுதல் என்ற பருவநிலை மாற்ற விளைவுகள் குறித்து சிந்தித்து ,அதற்கேற்றாற்போல் முடிவுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எது அத்தியாவசியமோ அதை மட்டும் கையிலெடுக்கவும், உலகைச் சேதமாக்கும் திட்டங்களைக் கைவிடவும், பூமிக்கடியில் இருந்து கிட்டும் எரிசக்திகளைச் சார்ந்து வாழாதிருக்கவும், சுத்தமான, அதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மனித மாண்பை ஊக்குவிக்கவும், பணமே பெரிதென எண்ணும் மனநிலையிலிருந்து மக்களை விடுவிக்கவும், நிதி மந்திரிகள் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பாராமுகம் எனும் மனப்போக்கை மாற்றுதல், பணத்தை வழிபடும் போக்கை அகற்றுதல், சுத்தமான எரிசக்தி பயன்பாடு, மனித மாண்பு மதிக்கப்படுதல் போன்றவை, இன்றைய உலகின் முக்கியத் தேவைகள் எனவும், உலக நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
(வத்திக்கான் செய்தி - மே 29, 2019)
Add new comment