காட்டுத்தீயை அணைக்க சென்ற போது விபத்து - ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி


Mexican military helicopter crashes. PC:Bdnews24.COM.

காட்டுத்தீயை அணைக்க சென்ற போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் லோபஸ் ஒப்ரடோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள குவரடேரோ மாகாணத்தில் ஜல்பன் டி லா சியரா நகரில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயை அணைப்பதற்காக 2,500 லிட்டர் தண்ணீருடன் கடற்படைக்கு சொந்தமான எம்ஐ -17 ஹெலிகாப்டர் மாகாண தலைநகர் சாண்டியாகோ டி குவரடேரோவில் இருந்து புறப்பட்டு சென்றது. இதில், 5 கடற்படை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரி ஒருவரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் ஜல்பன் டி லா சியரா நகருக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிகாரிகள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் லோபஸ் ஒப்ரடோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

(Thinaboomi - மே 28, 2019)

 

Add new comment

1 + 4 =