ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தென்னிந்திய கிராமமா!?!


Yemen Pondicherry U.T. PC: thebetterindia.com

யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது. பிரான்ஸ் அரசின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதியாக ஏனாம் இருந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு 1954ல் அந்தப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மாகே, காரைக்கால், ஏனாம், புதுவை ஆகிய பகுதிகள் புதுவை யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. இதில் சில குடிமக்கள் இன்னும் பிரான்ஸ் தேசத்து குடிமக்கள் என்ற உரிமையையும் வைத்துள்ளனர். அந்தக் குடிமக்களில் சுமார் 5,500 பிரெஞ்ச் வாக்காளர்கள் உள்ளனர்.

வங்காள விரிகுடா கரையோரத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் யானம் பகுதி அமைந்துள்ளது. அங்கு 32,000 பேர் வாழ்கின்றனர். அதில் இந்தச் சிறிய கிராமத்தில் உள்ள 80 வாக்காளர்கள், மே 23 முதல் 26 வரை நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

ஏனாம் பகுதி 1723 முதல் 1954 வரையில் பிரான்ஸ் அரசாட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்போதும்கூட அதை பிரெஞ்ச் யானம் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவுடன் யானம் இணைந்துவிட்ட போதிலும், பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்கள் இந்தியா மற்றும் பிரான்ஸ் குடிமக்கள் அந்தஸ்தைத் தேர்வு செய்து கொள்ளும் விருப்ப உரிமை வழங்கப்பட்டது. பலர் இந்திய குடியுரிமை பெற்றுக் கொண்ட போதிலும், சிலர் பிரெஞ்ச் குடியுரிமையை வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கும் தானாகவே பிரெஞ்ச் குடியுரிமை கிடைத்தது. சில குடும்பத்தினர் பிரான்சில் குடியேறிவிட்டனர்.

பிரெஞ்ச் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் வகையிலான நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்ட, பிரெஞ்ச் கட்டுமான கலைநயத்தைக் காட்டும் கட்டடங்கள் ஏனாமின் தெருக்களில் இன்னமும் பிரெஞ்ச் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.

பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை உள்ளது என்று, யானமில் பிரான்ஸ் குடிமக்களுக்கான ஆலோசகராக உள்ள சதனலா பாபு பி.பி.சி.யிடம் தெரிவித்தார். பிரெஞ்ச் குடிமக்கள் தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரெஞ்ச் அரசால் இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

``என்னுடைய தாயார் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக எனக்கு அந்தக் குடியுரிமை கிடைத்தது. 1979ல் இருந்து ஐரோப்பிய தேர்தல்களில் நாங்கள் பங்கேற்று வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

(BBC Tamil - மே 28, 2019)

Add new comment

5 + 0 =