பாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01


ஜாம்பியாவில் பாப்பிறை மறைப்பணி கழகக் கூட்டம் . PC: Vatican News

பாப்பிறை மறைப்பணிக்கும், உலகிலுள்ள இளம் திருஅவைகளுக்கும், செபம் மற்றும் பிறரன்பால் ஆதரவளித்து வருகின்ற, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் பொதுப் பேரவை, மே 27, வருகிற திங்களன்று உரோம் நகரில் ஆரம்பிக்கின்றது.

வருகிற ஜூன் முதல் தேதி வரை நடைபெறும் இந்த பொதுப் பேரவையில், உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தேசிய இயக்குனர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவர் மற்றும் பொதுச் செயலர்கள் கலந்துகொள்கின்றனர்.

திருப்பீட நற்செய்தி அறிவிப்பு பேராயச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமான, பேராயர் Giampietro Dal Toso அவர்கள் அறிக்கை வாசிப்பது மற்றும் தேசிய இயக்குனர்களை வரவேற்பதுடன் பொதுப் பேரவை ஆரம்பமாகும்.

‘வாழ்வு, ஒரு மறைப்பணியாக’ என்ற தலைப்பில் முதல் அமர்வு இடம்பெறும். மேலும், திருப்பீட நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்களும், முதல் நாளில் அறிக்கை வாசிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம், சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல்களும் இப்பொதுப் பேரவையில் இடம்பெறும் என பீதேஸ் செய்தி கூறுகிறது.

(Fides - மே 26, 2019)

Add new comment

12 + 3 =