Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு
நியூ சிலாந்து நாட்டின் Maori பழங்குடி இன அரசர் Tuheitia Potatau Te Wherowhero VII அவர்கள் மே 25, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று Maori இன அரசராக முடிசூட்டப்பட்ட 7 ஆம் Wherowhero அவர்கள், மும்பை புனித ஸ்தேவான் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.
ஓசியானிவிலுள்ள Polynesia தீவுகளின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த Māori பழங்குடி இனத்தவர், 1250க்கும், 1300 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நியூ சிலாந்தில் குடியேறியவர்கள். பல நூற்றாண்டுகளாக, தனித்துவிடப்பட்ட இம்மக்கள், தங்களுக்கேயுரிய கலை, கலாச்சாரம் மற்றும் மொழியைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், தோட்டக்கலையில் வல்லுனர்கள். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள், நியூ சிலாந்தில் குடியேறத் தொடங்கியவுடன், இம்மக்களின் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் இடம்பெற்றன. 2013 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தற்போது நியூ சிலாந்தில், ஏறத்தாழ ஆறு இலட்சம் Māori பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர்.
அமேசான் பழங்குடி இனத் தலைவர்
இன்னும் அமேசான் பகுதி பழங்குடி இனத் தலைவர் Raoni அவர்கள், மே 27, வருகிற திங்களன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார் என்று, செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட இடைக்கால செய்தித் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இச்சந்திப்பு, அமேசான் மக்கள், சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் திருத்தந்தை கொண்டிருக்கும் அர்ப்பணத்தைக் காட்டுகின்றது என்று கூறினார்.
வருகிற அக்டோபர் 6-27 வரை வத்திக்கானில் நடைபெறும், அமேசான் பற்றிய சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புகளில் ஒன்றாக, இச்சந்திப்பு உள்ளது என்றும், ஜிசோத்தி அவர்கள் அறிவித்தார்.
(வத்திக்கான் செய்தி - மே 26, 2019)
Add new comment