Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இளம் கால்பந்து வீரர்களின் புன்னகைக்குத் தோள்கொடுங்கள், அது குழும விளையாட்டாகும் - திருத்தந்தை
கால்பந்து விளையாட்டு, தனித்து மகிழ்வு காணும் விளையாட்டல்ல, அது குழும விளையாட்டாகும், அவ்வாறு அது விளையாடப்படும்போது, தன்னிலைவாதப் போக்கைத் தூண்டிவிடுகின்ற ஒரு சமுதாயத்தில், அறிவுக்கும், மனதிற்கும் உண்மையிலேயே நன்மையைக் கொணரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த, இத்தாலிய கால்பந்தாட்ட குழுவினரிடம் கூறினார்.
"நாம் அன்புகூரும் கால்பந்து" என்ற தலைப்பில், "La Gazzetta dello Sport" எனப்படும், விளையாட்டு பற்றிய இத்தாலிய தினத்தாளும், இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்கின்ற, ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை, மே 24, இவ்வெள்ளி நண்பகலில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில், பல்வேறு இத்தாலிய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்கள் உட்பட, இளம் கால்பந்து விளையாட்டு வீரர்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும், வல்லுனர்கள் கலந்துகொள்கின்றனர்.
இளையோரைக் கவர்ந்திழுப்பதற்கு எளிமையான வழி, “வானில் ஒரு பந்தை வீசுவதாகும்” என்று புனித ஜான் போஸ்கோ அவர்கள் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சுழலும் பந்திற்குப் பின்னால், ஏறத்தாழ ஒரு குழந்தை, தனது கனவுகளோடும், ஏக்கங்களோடும் இருக்கின்றது என்றும் கூறினார்.
கால்பந்து குழும விளையாட்டு
தியாகம் மற்றும் அர்ப்பணத்துடன், குழுவாக, தன்னிடமுள்ள சிறப்புகளை வழங்குவதற்கு மாபெரும் வாய்ப்பாக, விளையாட்டு அமைந்துள்ளது என்றும், பந்தை வைத்து மற்றவருடன் விளையாடுவது, குழுவாக எவ்வாறு செயல்பட இயலும் என்பதைக் கற்றுத் தருகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பந்து, நட்புறவைப் பகிரவும், ஒருவர் ஒருவரை முகமுகமாய் எதிர்கொள்ளவும், தங்களின் திறமைகளைப் பரிசோதிப்பதற்கு, ஒருவர் ஒருவருக்குச் சவாலாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்.
இன்னல் நிறைந்த நேரங்களில், குறிப்பாக, விளையாட்டில் தோல்வியடையும்போது, அவமானமாகக் கருதாமல் இருப்பதற்கு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, விளையாட்டில் பயிற்சி அளிப்பவர்கள் சொல்வதும் செய்வதுமே, பயிற்சி பெறுபவர்களுக்குப் போதனைகளாக மாறுவதால், அவர்களின் கனவுகளுக்கு உயிரூட்டம் கொடுக்குமாறு கூறினார்.
கால்பந்து விளையாட்டில் மாபெரும் வீரர்களாக, ஏற்கனவே விளங்கும் வீரர்கள், இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தூண்டுதலாக இருக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புறநகர்ப் பகுதிகளில், பங்குத்தளங்களில், சிறிய விளையாட்டு அமைப்புகளில் தாங்கள் தொடங்கிய ஆரம்பகாலங்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருக்குமாறு, அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
கால்பந்து, உலகில் மிக அழகான விளையாட்டாக விளங்கும்வேளை, அதனைத் தொடர்ந்து காப்பாற்றுங்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சந்திப்பில் கலந்துகொண்ட எல்லாரையும் ஆசீர்வதித்து, அவர்களுக்காகச் செபிப்பதாகத் தெரிவித்து, தனக்காகச் செபிக்குமாறும் கூறினார்.
(வத்திக்கான் செய்தி - மே 25, 2019)
Add new comment