Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி குறித்து திருப்பீடம்
சட்டத்தின் ஆளுமையை, எவ்விதம், எல்லா இடத்திலும் செயல்படுத்தமுடியும் என்பது குறித்து, குற்றங்கள் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி என்ற தலைப்பில் இடம்பெற்ற பன்னாட்டு கூட்டத்தில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதி, அருள்பணி Janusz Urbanczyk.
ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Urbanczyk அவர்கள், வியென்னாவில், மே 20 முதல், 24 முடிய நடைபெற்று வரும் குற்றவியல் தொடர்புடைய அவையின் 28வது கூட்டத்தில் திருப்பீடத்தின் நிலை குறித்து இவ்வாறு உரையாற்றினார்.
மனித சமுதாயத்தில் நீதி தழைக்க வேண்டுமெனில், குற்றங்கள் தடுப்பையும் குற்றவியல் நீதியையும் அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் ஆளுமை இடம்பெறவேண்டும் என்று கூறிய அருள்பணி Urbanczyk அவர்கள், சட்டத்தின் துணை கொண்டு வழங்கப்படும் தண்டனைகளின் இரு நோக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
குற்றம் புரிந்தவரை சமுதாயத்திற்குள் மீண்டும் ஒன்றிணைப்பதும், குற்றத்தால் பாதிக்கப்பட்ட சமூக உறவுகளுக்குள் ஒப்புரவை உருவாக்குவதும், தண்டனைகளின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றார், திருப்பீடப் பிரதிநிதி அருள்பணி Urbanczyk.
இன்றைய சமுதாயத்தின் உடலில் பெரும் காயமாக இருக்கும் மனித வியாபாரம் குறித்தும் தன் உரையில் எடுத்துரைத்த திருப்பீடப்பிரதிநிதி, மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக கடத்திச் செல்லப்படுவது அதிகரித்து வருகின்றது என்ற கவலையையும் வெளியிட்டார்.
மேலும், இன்றைய உலகில், மதநம்பிக்கைகளின் அடிப்படையில், மக்கள் பாகுபாட்டுடனும், சகிப்பற்ற தன்மைகளுடனும் நடத்தப்படுவது குறித்தும் எடுத்துரைத்து, அதற்கு எடுத்துக்காட்டுகளாக, நியூ சிலாந்து, புர்கினோ ஃபாசோ, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மதத்தாக்குதல்களை சுட்டிக்காட்டினார், அருள்பணி Urbanczyk.
மத நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் பாகுபாடுகள், மற்றும், சகிப்பற்ற தன்மைகள், ஐரோப்பிய அவையால் ஆய்வுசெய்யப்பட்டு, மதச் சுதந்திரம் உறுதிச் செய்யப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், அருள்பணி Urbanczyk அவர்கள் முன்வைத்தார்.
(வத்திக்கான் செய்தி - மே 24, 2019)
Add new comment