"அமைதிக்காக கல்வி புகட்டுதல்" – கிறிஸ்தவ இணை அறிக்கை


திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot. PC: Vatican news.

பல்வேறு வகையிலும் சிதறிவரும் இன்றைய உலகில் மோதல்களைத் தீர்க்கும் வழிகளை அறிவதும், உரையாடல்களை முழு மனதுடன் மேற்கொள்வதும் மிக முக்கியமான தேவைகளாக உள்ளன என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், உலக கிறிஸ்தவ சபைகள் அவையும் (WCC) ஜெனீவாவின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்தில், மே 21, இச்செவ்வாயன்று நிகழ்த்திய ஒரு கருத்தரங்கின் இறுதியில், இவ்விரு அமைப்பினரும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்ட வேளையில், ஆயர் Guixot அவர்கள் இவ்வாறு கூறினார்.

"ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன், அமைதிக்காக கல்வி புகட்டுதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும், பல்சமய உரையாடல்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக அமைந்துள்ள இவ்வறிக்கையில், மூன்றாம் பகுதியில் கூறப்பட்டுள்ள பத்து பரிந்துரைகள், கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும், ஏனைய சமய நிறுவனங்களிலும் உருவாக்கப்படவேண்டிய சந்திப்பு, மற்றும் உரையாடல் கலாச்சாரத்தை வலியுறுத்துகின்றன.

பல் சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலர், ஆயர் Guixot, உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதி, Aalya Al Shehhi ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். 

(வத்திக்கான் செய்தி - மே 24, 2019) 

 

Add new comment

8 + 3 =