நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்


An Image explaining food crisis. PC: sustyvibes.com

புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுவரும் வானிலை மாற்றமும், அதன் காரணமாக அதிகரித்துவரும் பனிப்படல உருகலும், அதனால் ஏற்படும் நீர்ப் பெருக்கு, கடல் மட்டத்தை உயர்த்துதலும், மற்றொரு பக்கத்தில் பருவநிலை மாற்றத்தால் காலம் தவறி மழை பொழிதலும், வெள்ளப் பெருக்கும் முன்னெப்போதும் காணாத அளவிற்கு ஏற்படுத்திவரும் சீரழிவு, மானுடத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கி வருகிறது.

வட, தென் துருவங்களான ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகுவது, இயல்பான அளவுகளைவிட அதிகரித்திருப்பது, அங்கு வாழும் அரியவகை உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென்றால், பருவம் தவறி மழை பொழிவதும், எதிர்பாராத காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றத்தால் உருவாகும் புயல், மழையால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு, விவசாயத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. 

கடந்த ஒரு நூற்றாண்டில், புவியின் மேல்பரப்பின் வெப்ப அளவு 0.74 டிகிரி ஃபாரன்ஹீட் (0.18 டிகி‌ரி சென்டிகிரேட்) அதிகரித்துள்ளதென வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு கூறுகிறது. இந்த வெப்பநிலை மாற்றமே, இந்த அளவிற்கான அழிவை ஏற்படுத்துகிறதென்றால், புவியின் வெப்பநிலை மேலும் அதிகரித்தால், அது இயற்கையை அழித்துவிடும் என்ற ஆபத்தை மானுடம் உணர்ந்து வருகிறது.

மழை பொழிதலை நன்கு முன்னறியாமல், சாகுபடியில் ஈடுபடும்பொழுது இயற்கையின் எதிர்பாராத மாற்றங்கள் விவசாயத்திற்குப் பேரழிவாக முடிகின்றன. இப்படி தொடர்ந்து நிகழுமானால், நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த உணவுத் தேவையை உள்நாட்டு உற்பத்தியின் வழியாக நிறைவு செய்வதே, உண்மையான உணவுத் தன்னிறைவு ஆகும். அதற்கு அடிப்படைத் தேவை, இயற்கை மீது நாம் காட்ட வேண்டிய அக்கறை. 

(வத்திக்கான் செய்தி)  

Add new comment

3 + 3 =