Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை
இலங்கையில் அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதற்கு, காரித்தாஸ் அமைப்பு, இருபால் துறவு சபைகள், மற்றும், ஏனைய பிறரன்பு அமைப்புக்கள் வழியே, கத்தோலிக்கத் திருஅவை, பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று தலத்திருஅவை சார்பில், அருள்பணி எட்மண்ட் திலகரத்ன அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.
இலங்கை ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழு, ஒப்புரவை வளர்க்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, அருள்பணி திலகரத்ன அவர்கள் எடுத்துரைத்தார்.
இலங்கையில், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் 10 ஆம் ஆண்டு நினைவு, மே 18, கடந்த சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், உள்நாட்டுப் போரினால் தங்கள் உயிர்களை இழந்தோர், குறிப்பாக தமிழர் நினைவுகூரப்பட்டனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.
1983 ஆம் ஆண்டு துவங்கி, 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களில், 40,000த்திற்கும் அதிகமானோர், இறுதி சில மாதங்களில் உயிர் துறந்தனர் என்றும், இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழ், மற்றும் சிங்கள மொழி பேசுவோருக்கிடையே நிலவி வந்த பகைமை உணர்வு ஓரளவு தணிந்து வந்த வேளையில், உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்கள், மதங்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டியுள்ளது, பெரும் வருத்தமளிக்கிறது என்று, லியோ பெர்னாண்டோ என்ற பொது நிலையினர் கூறினார்.
இதற்கிடையே, ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோருக்கென, மே 21, இச்செவ்வாயன்று, கொழும்பு, புனித அந்தோனியார் ஆலயம் உட்பட, பல்வேறு ஆலயங்களில் முப்பதாம் நாள் நினைவு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
(வத்திக்கான் செய்தி - மே 23, 2019)
Add new comment