ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், இறைமக்களுக்கு நெருக்கமாக... திருத்தந்தை


Pope Francis with Italian Bishop's conference. PC: Vatican News

திருஅவையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், இறைமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது, ஆயர்களுக்குள் ஒத்துழைப்பு, திருமணத்தை செல்லாததாக்குதல் முறையில் சீர்திருத்தம், ஆயர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவு போன்ற தலைப்புகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

மே 20, இத்திங்கள் மாலையில், உரோம் நகரில், இத்தாலிய ஆயர்கள் பேரவையின் (CEI) 73வது பொது அமர்வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அப்பேரவையின் தலைப்பான, ‘புதிய மறைப்பணியில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதற்கு அவசியமான கூறுகள்’ பற்றியே தனது சிந்தனைகளை வழங்கினார்.

உரோம் ஆயர் மற்றும் இத்தாலிய தலத்திருஅவையின் தலைவர் என்ற என்ற முறையில், இத்தாலிய ஆயர்களிடம், தனது கருத்துகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்குள் நிலவ வேண்டிய ஒத்துழைப்பு மற்றும், ஆயர் பேரவையின் விதிமுறையில் பங்கு கொள்தல் பற்றி தெரிவித்தார்.

இத்தாலிய திருஅவையில் மாமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றி யாராவது சிந்தித்தால், முதலில், அதன் வேர்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, திருஅவையில் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி, 2017 ஆம் ஆண்டில், பன்னாட்டு இறையியல் குழு கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

திருஅவையின் வாழ்விலும், மறைப்பணியிலும், இறைமக்கள் எல்லாரும் ஈடுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் பேரவை இயங்கும்முறை குறித்தும் விளக்கினார். இத்தாலிய ஆயர்களின் 73வது பொது அமர்வு, மே 23, வியாழனன்று நிறைவடையும்.

(வத்திக்கான் செய்தி - மே 23, 2019)  

 

Add new comment

1 + 0 =