Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
முதல்திருப்பலியின் 500 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு திருத்தந்தையின் காணொளி
500 ஆண்டுகளுக்கு முன், அர்ஜென்டீனா நாட்டின் பத்தகோனியா ரியோ கஷெவோஸ் (Patagonia Rio Gallegos) பகுதியில் முதல் திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர், தான் ஒரு வரலாற்றின் விதைகளை விதைக்கிறோம் என்பதை அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா மக்களுக்கு, ஒரு காணொளிச் செய்தி வழியே கூறியுள்ளார்.
அர்ஜென்டீனாவில் முதல் திருப்பலியின் 500 ஆம் ஆண்டு
அர்ஜென்டீனா நாட்டில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் திருநற்கருணை ஆண்டிற்கென மக்கள் தங்களையே தயாரிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், திருத்தந்தை ஒரு குறுகிய காணொளிச் செய்தியை, அனுப்பினார்.
500 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட அந்த விசுவாச விதையின் வழித்தோன்றல்களான அர்ஜென்டீனா மக்கள், திருநற்கருணையை, தங்கள் வாழ்வாக மாற்ற இந்தச் சிறப்பு ஆண்டில் முயலவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இருவகை மன நிலையுடன் கொண்டாட்டம்
இந்த நற்கருணை ஆண்டைக் கொண்டாட இருவகையான மன நிலையை மக்கள் கொண்டிருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை, வசதிகளும், வாய்ப்புக்களும் இன்றி தவிக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவுதலை முதல் பரிந்துரையாக வழங்கியுள்ளார்.
மேலும், அடக்கச்சடங்கை நினைவுறுத்தும் சோகமான இதயத்தைக் கொண்டிராமல், இறைவனில் முழு நம்பிக்கை கொண்ட, உயிர் துடிப்புள்ள மகிழ்வான இதயத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அர்ஜென்டீனா மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளார்.
1520 ஆம் ஆண்டு, ஏப்ரல் 1, குருத்தோலை ஞாயிறன்று, ஸ்பானிய அருள்பணியாளர் Pedro de Valderrama அவர்கள் முதல் திருப்பலியை நிறைவேற்றியதையடுத்து, அந்த மறைமாவட்டத்தில் திருநற்கருணை ஆண்டு சிறப்பிக்கப்படுகிறது.
அண்மையில், அர்ஜென்டீனா ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அத் லிமினா சந்திப்பை மேற்கொண்ட வேளையில் திருத்தந்தை இந்தக் காணொளிச் செய்தியை அவர்கள் வழியே அனுப்பி வைத்தார்.
(வத்திக்கான் செய்தி - மே 23, 2019)
Add new comment