உணவு வீணாவதற்கு எதிரான நடவடிக்கைக்கு பாராட்டு - திருத்தந்தை


ஐரோப்பிய உணவு வங்கிகள் கூட்டமைப்பினர் சந்திப்பு (Vatican Media)

ஐரோப்பிய உணவு வங்கிகள், பசித்திருப்போருக்கு உணவு வழங்கி, உணவு வீணாக்கப்படுவதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றன என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் ஆண்டு கூட்டத்தை நடத்திய, ஐரோப்பிய உணவு வங்கிகள் கூட்டமைப்பின் (FEBA) ஏறத்தாழ இருநூறு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை, மே 18, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையிலுள்ள மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிப்பதற்கு, இந்த அமைப்பினர் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டினார்.  

இவ்வுலகில், மக்களையும், உணவையும் தூக்கி எறியும், வீணாக்கும் மனநிலை நிலவி வருவது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பசி என்ற பயங்கரமான துன்பத்திற்கெதிராய்ச் செயல்படுவது, உணவை வீணாக்குவதற்கு எதிராய்ச் செயல்படுவதாகும் என்று கூறினார்.

வீணாக்கும் மனநிலை

இந்நிகழ்வில், வீணாக்கும் மனநிலை பற்றிய சிந்தனைகளை அதிகமாக வழங்கிய திருத்தந்தை, இந்த மனநிலை, பொருள்கள் மற்றும், பொருளின்றி இருப்பவரைப் புறக்கணிப்பதை வெளிப்படுத்துகின்றது என்றும், இயேசு மக்கள் திரளுக்கு உணவளித்தபின், எதுவும் வீணாகாமல், மீதமிருந்த உணவைச் சேகரிக்குமாறு தம் சீடர்களிடம் கூறியதையும் (யோவா 6:12), உணவு வங்கிகள் நினைவுபடுத்துகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

உணவைத் தூக்கி எறிவது, மக்களைத் தூக்கி எறிவதாகும் எனவும், உணவு எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும், எவ்வளவு உணவு வீணாக்கப்படுகின்றது என்பதையும் கவனிக்காமல் இருப்பது, கேவலமாக உள்ளது எனவும் திருத்தந்தை கூறினார்.

FEBA கூட்டமைப்பின் பணி

FEBA கூட்டமைப்பின் உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் ஆற்றுகின்ற பணி, நம் சொந்த நலனைத் தேடுவதால் வருங்காலத்தைக் கட்டியெழுப்ப இயலாது, மாறாக புறக்கணிக்கப்பட்ட மக்களுடன் ஒவ்வொரு நேரமும் தோழமை கொள்ளும்போது, முன்னேற்றம் இடம்பெறுகின்றது என்பதை உணர்த்துகின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியில் உணவு வங்கி தொடங்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டையொட்டி, ஐரோப்பிய உணவு வங்கிகள் கூட்டமைப்பு, உரோம் நகரில் தனது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை  நடத்தியது. இந்த அரசு-சாரா பிறரன்பு கூட்டமைப்பு, பயன்படுத்தப்படாத உணவுப்பொருள்களைச் சேகரித்து, தேவையில் இருப்பவர்களுக்கு வழங்குவதன் வழியாக, உணவு வீணாக்கப்படுவதையும், உணவு பாதுகாப்பின்மையையும் குறைத்து வருகிறது.

வீணாக்கப்படும் உணவு

இதற்கிடையே, உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர், போதுமான உணவின்றி துன்புறும்வேளை, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 130 கோடி டன் உணவு வீணாக்கப்படுகின்றது (FAO). ஜப்பானில் குறைந்தது அறுபது இலட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. 

(வத்திக்கான் செய்தி - மே 19, 2019)

Add new comment

1 + 14 =