உலக தொலைத்தொடர்பு, தகவல் கழக நாள் மே 17


Signis world communication day image.

5ஜி ஒலிக்கற்றைகள் போன்று தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இணையதளங்கள், சமுதாய மற்றும் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிட்ட அளவில் பலன்களை அளிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 17, இவ்வெள்ளியன்று, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் கழக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள், நவீன தொழில்நுட்பங்கள், ஐ.நா.வின் நீடித்த நிலையான இலக்குகளை எட்டுவதற்கும் உதவுகின்றன என்று கூறியுள்ளார்.

இணையத்தளங்களும், ஏனைய தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களும், சமுதாயங்களுக்கும், பொருளாதாரங்களுக்கும் கொணரும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற, தகவல்தொழில்நுட்பம் குறித்த உலக உச்சி மாநாடு, மே 17 ஆம் தேதியை, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் கழக நாளாக அறிவிக்க வேண்டுமன்று, ஐ.நா. பொது அவையை கேட்டுக்கொண்டது.

உலக தொலைத்தொடர்பு கழகம் (Int. Telecommunication Union ITU), 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பாரிசில் உருவானது. இது, மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாக விளங்குகிறது.

(UN - மே 18, 2019)

 

Add new comment

4 + 0 =