ஆப்ரிக்க மறைபோதக சபையினரை சந்தித்த திருத்தந்தை


SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையின் பொதுப் பேரவையில் கலந்து கொண்டோருடன் திருத்தந்தை (ANSA)

ஆப்ரிக்காவில், நலிவடைந்த கிறிஸ்தவ சமுதாயம் அல்லது கிறிஸ்தவர்களே இல்லாத தொலைதூர கிராமப் பகுதிகளில், சிறப்பாக நற்செய்திப்பணியாற்றிவரும் ஆப்ரிக்க மறைபோதக சபைக்கு, தனது நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும், ஏறத்தாழ எண்பது பிரதிநிதிகளை, மே 17, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையின் ஆரம்பகாலப் பண்புகளுக்கு விசுவாசமாக இருந்து, குழுவில், உண்மையான உடன்பிறந்த உணர்வு கொண்ட வாழ்வை வாழ்வதன் வழியாக, உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சிறார், போர்கள், நோய் மற்றும் மனித வர்த்தகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, ஏனைய மதத்தவர் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஆற்றிவரும் சேவைகளைத் தொடருமாறு இச்சபையினரை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் பக்கம் பலரைக் கொணரும் பணிகளில், ஏற்கனவே நல்ல பலன்களைக் கொணர்ந்துவரும் ஆப்ரிக்க மறைபோதக சபை, இப்பணிகளில், புதிய பாதைகளை மேற்கொள்வதற்கு அஞ்சாமல், தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுத்து, முன்னோக்கிச் செல்லுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இச்சபையினரை, அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரில் தலைமை இல்லத்தைக் கொண்டிருக்கும், ஆப்ரிக்க மறைபோதக சபை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்காவில், 17 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றது. 

(வத்திக்கான் செய்தி - மே 18, 2019)

Add new comment

6 + 14 =