10 மரக்கன்றுகளை நட்டால்தான் தேர்வில் வெற்றி


Philippines children planting trees. PC OISCA. org

“1990க்கும், 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகின் நிலப்பரப்பில், காடுகளின் அளவு, 31.6 விழுக்காட்டிலிருந்து, 30.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்த இழப்பு, முக்கியமாக, வளரும் நாடுகளில், அதிலும், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதி, இலத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இடம்பெற்றுள்ளது. காடுகள் அழிவு, புவி வெப்பமயமாதலுக்கு இரண்டாவது முக்கிய காரணம் (FAO)”. புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் மழையின்மை, தொடரும் வறட்சி... என அனைத்துக்கும், 'மரம் வளர்க்க வேண்டும்’ என்பதுதான் தீர்வாகச் சொல்லப்படுகின்றது.

எனவே, அனைத்து நாடுகளின் தன்னார்வ அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள், அரசுத் துறைகள் என அனைத்துமே மரம் வளர்ப்பைத் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், தொடக்க, உயர் நிலைக் கல்வி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக, குறைந்தது பத்து மரங்களையாவது நடுதல் வேண்டும் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

மே 15, இப்புதனன்று, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை, `Graduation Legacy for the Environment Act' என்ற இந்தச் சட்டத்துக்கான ஒப்புதலை அளித்திருக்கிறது. அந்நாட்டு அரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இது சட்டமாக அமல்படுத்தப்படும். அந்த சட்ட வரைவில், இந்த மரங்கள் வனப்பகுதியிலோ, சதுப்பு நிலம் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நகர்ப்புறங்கள், இராணுவம் அல்லது தனிநபருக்குச் சொந்தமான இடங்கள், கைவிடப்பட்ட சுரங்கத் தொழிற்சாலைப் பகுதிகள் அல்லது பொருத்தமான இடங்களிலோ நடப்பட வேண்டும். கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கான ஆணையம் ஆகியவை இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல், மரக்கன்றுகளை வளர்ப்பதற்கும் நடுவதற்கும் தேவையான உதவிகளை சுற்றுச்சூழல் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அரசு சார்ந்த துறைகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்ட வரைவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான MAGDALO கட்சியின் பிரதிநிதியான Gary Alejano அவர்கள், ``ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப்பள்ளியில், 12 கோடி, உயர்நிலைப் பள்ளியில், ஏறத்தாழ ஐம்பது இலட்சம், கல்லூரிகளில் ஐம்பதாயிரம் என, மாணவர்கள் படிப்பை முடிக்கின்றனர்.

இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால், ஆண்டுதோறும் 17.5 கோடி புதிய மரங்கள் நடப்படும். ஒரு தலைமுறையில் 52,500 கோடி மரங்கள் நமக்குக் கிடைக்கும். இதில், பத்து விழுக்காட்டு மரங்கள் மட்டுமே நீடித்திருக்கும் என்று கணக்கிட்டாலும் 5,250 கோடி மரங்களை நாம் பெறலாம்'' என்று பேசினார். 

(வத்திக்கான் செய்தி - மே 17, 2019)

Add new comment

4 + 12 =