Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்புக் கலாச்சாரத்தின் இதயம் குடும்பம்
மனிதராக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கும் முதல் கல்வி நிலையம் மற்றும், அன்புக் கலாச்சாரத்தின் இதயமாக அமைந்திருப்பது குடும்பம் என்று, திருப்பீட உயர் அதிகாரி பேராயர் இவான் யூர்கோவிச், ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில், இச்செவ்வாயன்று கூறினார்.
மே 15, இப்புதனன்று, கடைப்பிடிக்கப்படும், ஐ.நா.வின் குடும்பங்கள் உலக நாளை முன்னிட்டு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், ஜெனீவாவில் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் ஏனைய பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்கோவிச் அவர்கள் இவ்வாறு கூறினார்.
“அமைதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கு பல்சமய ஒத்துழைப்பு: குடும்பங்களின் ஆக்கமான வளர்ச்சிக்கு சூழலை உருவாக்குதல்” என்ற தலைப்பில், மே 14, இச்செவ்வாயன்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, பேராயர் யூர்கோவிச் அவர்கள், குடும்பம், சமுதாயத்தின் இயல்பான மற்றும் அடிப்படையான அமைப்பு என்பதை ஏற்று, அதற்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
சிறார் உரிமைகள் பற்றிய உலகளாவிய ஒப்பந்தம், ஐ.நா.பொது அவையால் கொண்டுவரப்பட்டதன் முப்பதாம் ஆண்டு (நவ. 20,1989) நிறைவு, குடும்பங்கள் உலக நாள், முதன் முதலில் (1994) சிறப்பிக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள், 2019 ஆம் ஆண்டில் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டினார், பேராயர் யூர்கோவிச்.
இவ்விரு நிகழ்வுகளும், குடும்பங்களின் நலன் குறித்த விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்த, பயனுள்ள வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும், பேராயர் யூர்கோவிச் அவர்கள் கூறினார்.
(வத்திக்கான் செய்தி - 15 மே, 2019)
Add new comment