Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இராணுவ மரியாதை பெறும் கர்தினால் Sfeir, லெபனானின் மக்களாட்சிக்காக உழைத்தவர்
லெபனான் நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு, மிகத் துணிச்சலுடன் செயல்பட்டவர், அந்நாட்டின் வரலாற்றில் மாபெரும் மனிதராக நினைவுகூரப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கர்தினால் Sfeir அவர்கள் மரணமடைந்ததையொட்டி, தற்போதைய மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Beshara Rai அவர்களுக்கு, மே 14, இச்செவ்வாயன்று, தந்திச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்களின் மறைவால் வருந்தும், அவரின் குடும்பத்தினர் மற்றும் விசுவாசிகளுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
கர்தினால் Sfeir துணிச்சலானவர்
கர்தினால் Sfeir அவர்கள், அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையை, பல ஆண்டுகள் மிகவும் நேர்மையுடனும், மனஉறுதியுடனும் வழிநடத்தி வந்தவர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்கள், சுதந்திரமும், துணிச்சலும் நிறைந்த மனிதர் என்றும், அமைதி மற்றும் ஒப்புரவு இடம்பெற, முக்கிய கருவியாகச் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு முதல், 2011 ஆம் ஆண்டு வரை, அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், 1975 ஆம் ஆண்டு முதல், 1990 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற லெபனான் உள்நாட்டுப் போரின்போது, மாரனைட் கத்தோலிக்கரைச் சிறப்பாக வழிநடத்தியவர்.
லெபனானில் துக்க நாள்கள்
மே 15, இப்புதனன்றும், கர்தினாலின் அடக்க நாளான மே 16, இவ்வியாழனன்றும், லெபனானில் அரசு விடுமுறை எனவும், அந்நாள்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும், அந்த இரு நாள்களும், தேசிய துக்க தினங்களாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 12, இஞ்ஞாயிறு அதிகாலை லெபனான் நேரம் 3.30 மணிக்கு இறைபதம் சேர்ந்த கர்தினால் Nasrallah Sfeir அவர்கள், இன்னும் 3 நாட்களில் தன் 99வது வயதை நிறைவு செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வத்திக்கான் செய்தி - 15 மே 2019)
Add new comment