Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
“பிரான்சிசின் பொருளாதாரம்” நிகழ்வு, 13வது இரக்கத்தின் உலக மாநாடு
“பிரான்சிசின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆகிய நாள்களில் இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறவிருக்கும் நிகழ்வு குறித்து, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அசிசி-நொசேரா பேராயர் Domenico Sorrentino, உரோம் புனித விண்ணேற்பு அன்னை பல்கலைக்கழகப் பொருளாதார அரசியல் துறை பேராசிரியர் Luigino Bruni போன்றோர் இக்கூட்டத்தில் தலைமையேற்று விளக்கினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ள இந்நிகழ்வில், இளம் பொருளாதார நிபுணர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே, இக்காலப் பொருளாதாரம் குறித்து ஆய்வுகள் இடம்பெறும் என்று, பேராயர் Sorrentino அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அமைதியின் குறியீடாக ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ள அசிசி நகரையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தெரிவு செய்துள்ளார் என்றும், இந்நிகழ்வு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் உணர்வின் அடிப்படையில் இடம்பெறும் என்றும், பேராயர் Sorrentino அவர்கள் கூறினார்.
மேலும், 13வது இரக்கத்தின் உலக மாநாடு 2022 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடைபெறும் என்று, இரக்கத்தின் இத்தாலிய தேசிய கூட்டமைப்புத் தலைவர் Roberto Trucchi அவர்கள் இச்செவ்வாயன்று அறிவித்தார்.
மக்காவோ நகரில், இச்செவ்வாயன்று, 12வது இரக்கத்தின் உலக மாநாடு நிறைவுபெறுவதை முன்னிட்டு, அடுத்த இரக்கத்தின் உலக மாநாடு நடைபெறும் இடத்தை Trucchi அவர்கள் வெளியிட்டார்.
(வத்திக்கான் செய்தி)
Add new comment