தொழிலாளர்களை மையப்படுத்தி டுவிட்டர் செய்தி - திருத்தந்தை


தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள புனித யோசெப்பும், சிறுவன் இயேசுவும்

மே மாதம் முதல் நாள், தொழிலாளர் நாளாகவும், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளாகவும் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலாளர்களை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நாசரேத்தின் பணிவான தொழிலாளரான புனித யோசேப்பு, நம்மை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துவராக, நன்மை செய்வோரின் தியாகத்திற்கு ஆதரவு வழங்குவாராக, தங்கள் வேலையை இழந்தோர், மற்றும், வேலை தேடுவோருக்கு பரிந்துரை செய்வாராக" என்ற வேண்டுதல், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியானது.

'மே தினம்' என்று உலகெங்கும் சிறப்பிக்கப்படும் தொழிலாளர் நாளை, இறையடியாரான திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள், 1955 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளாக, கத்தோலிக்கத் திருஅவைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

திருஅவையின் பாதுகாவலராகவும், திருக்குடும்பத்தின் பாதுகாவலாராகவும் கருதப்படும் புனித யோசேப்பின் பெயரால், மார்ச் 19, மரியாவின் கணவர் யோசேப்பு என்றும், மே 1 ஆம் தேதி, தொழிலாளரான புனித யோசேப்பு என்றும் இரு திருநாள்கள் கொண்டாடப்படுகின்றன.

(வத்திக்கான் செய்தி - 02, மே 2019) 

Add new comment

14 + 2 =