Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மறைசாட்சியரும் மறைவாய் துயருறும் இளையோருக்கு - திருத்தந்தை
ஏப்ரல் 25, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் பிரான்ஸ் நாட்டின் Aire மற்றும் Dax என்ற மறைமாவட்டத்திலிருந்து, உரோம் நகருக்கு வருகை தந்த திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்தினார். அதில் குறிப்பாக, தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாக வாழ்வதால், மற்றவர்களிடமிருந்து நேரடியான, மற்றும், மறைமுகமான துன்பங்களை சந்திக்கும் இளையோர், இத்திருப்பயணத்தில் கலந்துகொண்டிருப்பதை தான் சிறப்பாக வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.
உரோம் நகரில் மறைச்சாட்சிகளாக மரித்த அப்போஸ்தலர் பேதுரு மற்றும் பவுல் முதற்கொண்டு எண்ணிலடங்கா மரிச்சாட்சிகளை காண வந்திருக்கும் Aire மற்றும் Dax மறைமாவட்டத்தின் பிரதிநிதிகள், இன்றைய உலகிலும், தங்கள் மத நம்பிக்கைக்காக வன்முறைகளைச் சந்திப்போரை எண்ணி பெருமைப்படவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
Aire மற்றும் Dax மறைமாவட்டத்தின் தலத்திருஅவையில் பணியாற்றும் ஆன்மீக வழிகாட்டிகள், மத நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் வாழ்வோர், திருஅவையின் அருளடையாளங்கள், குழும வாழ்வு ஆகிய உதவிகளுடன் இளையோர் தங்கள் மத நம்பிக்கையை வளர்க்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
Aire மற்றும் Dax மறைமாவட்டம் அமைந்துள்ள லாண்டஸ் (Landes) பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஊசி இலை (Pine) மரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மரம், நிலத்தில் வேரூன்றியிருப்பதுபோல், இளையோரும் தங்கள் வாழ்வை, கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றியிருக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
லாண்டஸ் பகுதியின் மற்றொரு முக்கிய அடையாளமாக விளங்கும் புனித வின்சென்ட் தே பவுல் போல, இளையோரும் பிறரன்பில் வளர்ந்து, பாலங்களைக் கட்டுவோராக வாழவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
(வத்திக்கான் செய்தி)
Add new comment