Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இலங்கை குண்டுவெடிப்புக்கு ஆசிய ஆயர்கள் கண்டனம்
இலங்கையில் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில், நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு, ஆசிய ஆயர்கள் சார்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார், கர்தினால் சார்லஸ் மாங் போ.
19 ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவற்று நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறைக்குப் பலியான அனைவருக்காகவும், இத்தாக்குதல்களில் காயமடைந்தோர் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்காகவும் தான் உருக்கமுடன் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், அச்சம் நிறைந்த இச்சூழலை தவிர்ப்பதற்கு முயற்சித்துவரும் அனைவருக்கும் வலிமைதருமாறு, நம்பிக்கை மற்றும் அமைதியின் இளவரசராம் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தை மன்றாடுவதாகவும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார். ஆசிய கத்தோலிக்கர், இலங்கை ஆயர்கள் மற்றும் விசுவாசிகளுக்காகச் செபிப்பதாகவும், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் உறுதியளித்துள்ளார்.
இந்திய ஆயர் பேரவைத் தலைவர்
மேலும், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் அளித்துள்ள கடும் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இலங்கையில் அமைதி நிலவ, இந்தியத் திருஅவை, உயிர்த்த இயேசுவிடம் செபிக்கின்றது எனவும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், தேவையில் இருப்போருக்கு உதவும் வத்திக்கான் பிறரன்பு அமைப்பு (Aid to the Church in Need) உட்பட, உலகின் கிறிஸ்தவ அமைப்புகளும், தலைவர்களும் தங்கள் செபங்களையும், துயரங்களையும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று, இலங்கையில் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது. வன்முறைக்குப் பலியானவர்களின் அடக்கச் சடங்குகளும் இந்நாளில் நடத்தப்பட்டன.
(வத்திக்கான் செய்தி)
Add new comment