Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இலங்கையில் அமைதியின் சக்தி வலிமை பெறட்டும்
வன்முறை வன்முறையை பிறப்பிக்கக் கூடாது என்று, பல்வேறு சமயத் தலைவர்கள், இலங்கையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், யூத மற்றும் முஸ்லிம் மதங்களின் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு தீமைக்கு எதிராக, ஒன்றிணைந்து போராடவும், தீமை ஒழிக்கப்பட செபிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள வேதனை, கடுங்கோபம், கண்டனம் ஆகியவற்றை வெளியிட்டுள்ள சமயத் தலைவர்கள், இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதப் படுகொலைகளில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடு, உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்களை நிறுத்தி, துக்கத்தை அனுசரித்தவேளை, உலகின் கிறிஸ்தவ சபைகளும், பல்வேறு மதத்தவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து செபித்து, அமைதிக்கு விண்ணப்பித்துள்ளன.
கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், இத்தாக்குதல்கள், வெறுப்பும், பயங்கரவாதமும் நிறைந்த செயல்களாக உள்ளன என்று, இவற்றுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், உரையாடல் மற்றும் நன்மதிப்பு வழியாக, அமைதியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Kirill அவர்கள், இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களுக்கு எழுதியுள்ள அனுதாபச் செய்தியில், இத்தாக்குதல் குறித்த செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்ததெனவும், இரத்தம் சிந்திய இத்தீமைகளைப் புரிந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், தனது அனுதாபச் செய்தியையும், இத்தாக்குதல்களுக்கு எதிரான கண்டனத்தையும், பலியானவர்களுக்குச் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
வெறுப்பும் மரணமும் இறுதி வார்த்தைகள் அல்ல என, WCC உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்ற பொதுச் செயலர் Olav Fykse Tveit அவர்களும், இவ்வன்முறைச் செயல்கள், வாழ்வின் புனிதத்தை அச்சுறுத்துகின்றன மற்றும் தெய்வநிந்தனையாக உள்ளன என கூறியுள்ளார்.
(வத்திக்கான் செய்தி)
Add new comment