Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயண விவரம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீடச் செய்தி தொடர்பகம்.
மே 5 ஆம் தேதி காலை உரோம் நேரம் 7 மணிக்கு Fiumicino விமானத்தளத்திலிருந்து தன் பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2 மணி நேரப் பயணத்திற்குப்பின் உள்ளூர் நேரம் 10 மணிக்கு சோஃபியா நகர் விமானதளத்தை அடைவார்.
அன்று காலையில் அரசு அதிகாரிகளை சந்தித்தபின், பிற்பகலில் புனிதர்கள் சிறில் மற்றும் மெத்தோடியுஸ் அவர்களின் புனிதப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பேராலயம் சென்று செபித்து, அன்று மாலையே விசுவாசிகளுக்கான திருப்பலியை Knyaz Alexandar சதுக்கத்தில் நிறைவேற்றுவார்.
திருத்தந்தையின் மே 6 ஆம் தேதி திங்கள் தின நிகழ்வுகள், புலம்பெயர்ந்த மக்கள் வாழும் ஒரு முகாமைச் சந்திக்கச் செல்வதிலிருந்து துவங்குகிறது. பின், Rakovsky செல்லும் திருத்தந்தை, அங்கு புது நன்மை வழங்கும் திருப்பலியை நிறைவேற்றியபின், மதிய உணவை பல்கேரிய நாட்டு ஆயர்களுடன் அருந்தி, அதன் பின் முதலில் கத்தோலிக்க சமுதாயத்தை சந்தித்து உரை வழங்குவார். அதே நாளில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதிக்கான கருத்துப் பரிமாற்றங்களிலும் பங்குபெறுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளான மே 7 ஆம் தேதி, செவ்வாயன்று சோஃபியா நகரிலிருந்து விடைபெற்று, வட மாசிடோனியா செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின், புனித அன்னை தெரேசா நினைவிடத்திற்கு, துறவு சபைகளின் அதிபர்களுடன் செல்வதுடன், அங்கு ஏழையர் சமுதாயத்தை சந்தித்து உரையாடுவார்.
மே 7 ஆம் தேதி, உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு மாசிடோனியா சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகலில் பிற கிறிஸ்தவ சபைகள், பிற மதத்தலைவர்கள், இளையோர் சமுதாயம் ஆகியோரை சந்தித்து உரையாடும் திருத்தந்தை, பின்னர் அருள்பணியாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் துறவறத்தாரை சந்தித்து உரையாடுவார்.
அன்று மாலையே வட மாசிடோனியாவிலிருந்து புறப்படும் திருத்தந்தை, உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு உரோம் நகர் வந்தடைவார், என திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.
(வத்திக்கான் செய்தி)
Add new comment