Notre-Dame பேராலயத்தின் மீள்கட்டமைப்பிற்கு நிதியுதவிகள்


Notre-Dame பேராலயம் - தீ விபத்துக்கு முன்னும், பின்னும்... from cbsnew.com

Notre-Dame பேராலயத்தின் 223 அடி உயரம் கொண்ட இரு கோபுரங்களும், 1210க்கும், 1250 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டன. இப்பேராலயத்தில், 1431 ஆம் ஆண்டில் அரசர் 6ம் ஹென்றி அவர்கள் முடிசூட்டப்பட்டார். 1909 ஆம் ஆண்டில் திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், இப்பேராலயத்தில், புகழ்மிக்க மறைசாட்சி புனித ஜோன் ஆப் ஆர்க் அவர்களை புனிதர் என அறிவித்தார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில், ப்ரெஞ்ச் மக்களுடன் இன்று செபத்தில் ஒன்றித்திருப்போம், இந்தக் கடும் சேதம் என்ற துயரம், இந்தப் பேராலயம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையாக மாறட்டும் என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

திருப்பீட செய்தி தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் வெளியிட்ட டுவிட்டரில், Notre-Dame பேராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அதிர்ச்சியடைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ப்ரெஞ்ச் மற்றும் பாரிஸ் மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து செபிக்கின்றார் என்ற வார்த்தைகளை எழுதியுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் உலகக் கிறிஸ்தவத்தின் அடையாளமாக அமைந்துள்ள Notre Dame பேராலயத்தில் பற்றியெறிந்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட எல்லாருக்கும் திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் செபங்களையும், ஜிசோத்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கட்டியெழுப்பப்படும்

இந்த தீ விபத்தால் பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ள, ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Emmanuel Macron அவர்கள், 'இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு' என்று வர்ணித்துள்ளார். அதேவேளை, இப்பேராலயம், மீண்டும் கட்டியெழுப்பப்படும் என உறுதியளித்துள்ளார்.

850 வருட பழமையான இந்தப் பேராலயத்தின் மீள்கட்டமைப்புக்கென, உலகெங்கிலுமிருந்து ஏற்கனவே இலட்சக்கணக்கான யூரோக்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளன. இரண்டு ப்ரெஞ்ச் தொழில் நிறுவனங்கள், ஏறக்குறைய, மூன்று இலட்சம் யூரோக்களை வழங்குவதாக, இச்செவ்வாய் காலையில் அறிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Donald Tusk அவர்கள், அங்கத்தினர் நாடுகளுக்கு உதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

3 + 7 =