Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
படுகொலைகள் இடத்தில் சிலுவைகள் அகற்றப்பட்டதற்கு கண்டனம்
பெலாருஷ்யா நாட்டில், முன்னாள் கம்யூனிச சகாப்தத்தில் கிறிஸ்தவர்கள் படுகொலைசெய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சிலுவைகள், பெரிய இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டிருப்பதற்கு, அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தலைவர்கள், தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
பெரும்பாலும், 1937 ஆம் ஆண்டுக்கும், 1941 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டு, குவியல் குவியலாக, பெரிய குழிகளில் போடப்பட்டனர். Minsk நகரின் புறநகரிலுள்ள Kuropaty வனப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சிலுவைகளில், 15 அடி உயரமுள்ள ஏறக்குறைய எழுபது சிலுவைகளை, பெரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்றி, அவை பெரிய வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் குறைந்தது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சிலுவைகள் அகற்றப்பட்டிருப்பது குறித்து, தனது ஆழ்ந்த கவலையையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளார், பெலாருஷ்ய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Tadeusz Kondrusiewicz.
இந்த தவக்காலத்தில், அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவர்கள், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமான கிறிஸ்துவின் சிலுவை பற்றி, நேரிடையாக மிகுந்த கவனம் செலுத்தும் நாள்களில் இந்நடவடிக்கை இடம்பெற்றிருப்பது, கவலை தருகின்றது என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
நாட்டின், புனித மற்றும் செபத்தின் நினைவிடம் எனவும், நாட்டின் பல கொல்கொத்தாக்களில் ஒன்று எனவும் கருதப்படும், Kuropaty வனப் பகுதியில் சிலுவைகள் அகற்றப்படும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
(CNS)
Add new comment