Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இம்மானுவேல் Alzheimer நோயாளிகள் கிராமத்தில் திருத்தந்தை
வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும், உரோம் நகரின் இம்மானுவேல் கிராமத்திற்கு (Villaggio Emanuele), ஏப்ரல் 12, இவ்வெள்ளி மாலையில் சென்று, அந்நோயாளிகளையும், அவர்களைப் பராமரிப்பவர்களையும் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் இந்த இரக்கச் செயல் பற்றி அறிவித்த திருப்பீட செய்தித் தொடர்பகம், உரோம் நகரின் புறநகரிலுள்ள அந்த கிராமத்திற்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றதன் வழியாக, சமுதாயத்தில் அடிக்கடி மறக்கப்படும், Alzheimer நோயாளிகள் அனுபவிக்கும் தனிமை மற்றும் ஒதுக்கப்படும் நிலை குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தினார் என்று கூறியது.
மனிதரின் ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நோயாளிகளின் தேவைகள் மற்றும் அவர்களின் மாண்பு மதிக்கப்படுவது பற்றியும், அந்நோயாளிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றவர்கள் பற்றியும், விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது என, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் திருஅவை கடைப்பிடித்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் மேற்கொண்ட வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களை, திருத்தந்தை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.
இம்மானுவேல் கிராமம்
Alzheimer நோயாளிகள் பராமரிக்கப்படும் இந்த இடத்தை உருவாக்கிய பேராசிரியர் இம்மானுவேல் F.M. இம்மானுவேல் (Emmanuele F.M. Emanuele) அவர்கள் பெயரால் அது அழைக்கப்படுகிறது.
கிராமம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் வாழ்கின்ற நோயாளிகள், தங்களின் அன்றாடத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்வதற்கு உதவியாக, இந்த இடம் 14 வீடுகளாக, ஒவ்வொன்றிலும், ஆறு பேர் தங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு பல்பொருள் அங்காடியும், ஒரு காப்பி கடையும், ஓர் உணவகமும், அழகு சாதனக் கடையும் உள்ளன.
இங்கு வாழ்கின்ற நோயாளிகள், பல்பொருள் அங்காடியிலும், சமையல் அரையிலும், உதவி செய்யலாம். இங்கு, மருத்துவர்கள், உடல் உறுப்புகளுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சையளிப்பவர்கள், பல்வேறு நலவாழ்வு பணியாளர்கள் உள்ளனர். இந்நோயாளிகளுக்கு கிடைக்கும் உதவிகள் எல்லாமே இலவசம்.
(வத்திக்கான் செய்தி)
Add new comment