இளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதை நிறுத்திவிடாதீர்கள்-திருத்தந்தை


“Visconti” உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு. image from Vatican media.

சுதந்திரமில்லாதபோது கல்வியில்லை, வருங்காலமும் இல்லை. உறவுகளில் தொடர்பைக் குறைக்கும் போதைப்பொருள் போன்று கைத்தொலைபேசிகளை மாற்றாதீர்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித அலாய்சியஸ் யூபிலி ஆண்டை முன்னிட்டு, உரோம் நகரின் “Visconti” உயர்நிலைப் பள்ளியின் ஏறக்குறைய ஐந்தாயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, ஏப்ரல் 13, இச்சனிக்கிழமை முற்பகலில், வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புகழ்பெற்ற இந்த உரோமன் கல்வி நிறுவனத்தில், திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள் (Eugenio Pacelli), பொருளாதாரத்திற்கு நொபெல் விருது பெற்ற Franco Modigliani அவர்கள் போன்றோர் படித்துள்ளனர், புனித லொயோலா இஞ்ஞாசியாரின் விருப்பத்தின் பேரில் இந்த இடத்தில் இக்கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு, 1583 ஆம் ஆண்டில், திருத்தந்தை 13 ஆம் கிரகரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்று, “Visconti” பள்ளியின் வரலாற்றை விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தப் பள்ளி அமைந்துள்ள அதே கட்டடத்தில், புனித இஞ்ஞாசியார் நினைவு ஆலயமும், அந்த ஆலயத்தில்தான் புனித லூயிஸ் கொன்சாகாவின் கல்லறையும் உள்ளன, இவர் பிறந்த 450 ஆம் ஆண்டு யூபிலி விழா தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது, இந்தப் பள்ளியிலேயே புனித லூயிஸ் கொன்சாகா கல்வி கற்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இளையோரின் பாதுகாவலரான மாபெரும் புனிதரான லூயிஸ் கொன்சாகா அவர்களின் வாழ்விலிருந்து சில சிந்தனைகளை வழங்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியில், தனிமையில் இருப்பதற்கு, சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுவதற்கு, வசதியின்மைகளுக்கு அஞ்ச வேண்டாம் என Visconti மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

புனித லூயிஸ், தூய்மையான மற்றும் சுதந்திரமான இதயத்துடன் அன்புகூரும் திறனைத் தெரிந்திருந்தார் எனவும், அன்புகூரத் தெரிந்தவர்களே, இறைவனை அறிவார்கள் எனவும், சிறந்த வாழ்விற்கு, பணிவும், பிரமாணிக்கமும் அவசியம் எனவும் கூறியத் திருத்தந்தை, இளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதையும், அனைவருக்கும் நல்லதோர் உலகு அமைய விரும்புவதையும் நிறுத்தி விடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஒருவர் ஒருவரோடு உறவை மேம்படுத்தவதிலும், அகவாழ்வில் அக்கறை எடுப்பதிலும், வருங்காலத்தை திட்டமிடுவதிலும், நியாயமான மற்றும் அழகான உலகை அமைப்பதற்குரிய அர்ப்பணத்திலும், சாதாரண நிலையில் திருப்தி அடையாதீர்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.  

இயேசு சபையில் இணைவதற்காக, தனது குடும்பச் சொத்துக்களைத் துறந்த புனித லூயிஸ் கொன்சாகா அவர்கள், உரோம் நகரில் 1591 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொள்ளை நோயில் துன்புற்றவர்களுக்கு உதவியவேளையில், தனது 23வது வயதில் காலமானார். இந்த இளம் புனிதரின் யூபிலி ஆண்டு, 2018 ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி முதல், 2019 ஆம் ஆண்டு 9 ஆம் தேதி வரை சிறப்பிக்கப்படும் என, திருப்பீடம் கடந்த ஆண்டு அறிவித்தது.  

(வத்திக்கான் செய்தி)

Add new comment

4 + 7 =