Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தென் சூடானில் அமைதி இயலக்கூடியதே எனச் சொல்வதில் தளர்வுறேன்
எண்ணற்ற மனிதர்களின் துன்பங்களை நான் தொடர்ந்து நினைக்கின்றேன், போரின் தீ அணையட்டும் எனச் செபிக்கின்றேன், அமைதி இயலக்கூடியதே எனச் சொல்வதில் ஒருபோதும் சோர்வடையமாட்டேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடான் நாட்டு, அரசு மற்றும் திருஅவைத் தலைவர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 11, இவ்வியாழன் மாலை ஐந்து மணியளவில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், இரண்டு நாள்கள் தியானத்தை நிறைவு செய்த இத்தலைவர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களைப் பிளவுபடுத்தும் செயல்களினின்று விலகி இருக்குமாறு வலியுறுத்தினார்.
தென் சூடானில் அமைதி இயலக்கூடியதே என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை, அந்நாட்டிற்குத் தான் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆவலை, மீண்டும் வெளிப்படுத்தினார்.
தென் சூடான் அரசு மற்றும் திருஅவைத் தலைவர்களிடம், இவ்வாறு தன் எண்ணங்களை வெளிப்படுத்திய பின்னர், எவரும் எதிர்பாராத விதமாக, அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir Mayardit, உதவி அரசுத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள Riek Machar Teny Dhurgon, மற்றும் Rebecca Nyandeng De Mabio ஆகிய மூவரின் முன்னர் முழந்தாளிட்டு, ஒவ்வொருவரின் கால்களையும் முத்தி செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நீங்கள் மூவரும், அமைதியில் நிலைத்திருங்கள் என, ஒரு சகோதரராக, எனது இதயத்திலிருந்து கேட்கின்றேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைய பிரச்சனைகள் உள்ளன, ஆயினும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வோம் என்று கேட்டுக்கொண்டார்.
நீங்கள் அமைதிக்குரிய நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறீர்கள், அது நல்லவிதமாக நிறைவுறட்டும் எனவும், இதில் போராட்டங்கள் எழும்பும், அது அலுவலகத்தில் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால், பொது மக்கள் முன்னிலையில் கரங்களைக் கோர்த்தவாறு ஒன்றிணைந்து நில்லுங்கள், இவ்வாறு செயல்படுவதன் வழியாக, நீங்கள், சாதாரண குடிமக்களுக்கு, நாட்டின் தந்தைகளாக மாறுவீர்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.
இங்கிலாந்து ஆங்கிலக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களின் பரிந்துரையின் பேரில், தென் சூடான் நாட்டு அரசு மற்றும் திருஅவைத் தலைவர்களுக்கு, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், இரண்டு நாள்கள் தியானம் நடைபெற்றது. பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், தியானச் சிந்தனைகளை வழங்கினார்.
தென் சூடான் சுதந்திரமடையக் காரணமான உள்நாட்டுப் போரில் குறைந்தது நான்கு இலட்சம் பேர் இறந்துள்ளனர், தற்போது ஏறக்குறைய எழுபது இலட்சம் பேர், கடும் பசியினால் துன்புறுகின்றனர் மற்றும் நாற்பது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, இத்தியானத்தில் கூறப்பட்டது. (வத்திக்கான் செய்தி)
Add new comment