ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபரை ராணுவம் கைது செய்தது


ராணுவத்தை உற்சாகப்படுத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள். Image from BBC Tamil.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவாத் இப்ன் ஊஃப் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலை நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.

அவாத் இப்ன் ஊஃப் மேலும் கூறுகையில், ராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், இதனை தொடர்ந்து தேர்தல்களைத் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

1989-லிருந்து ஆட்சி செய்து வரும் அதிபர் பஷீருக்கு எதிராக பல மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது.

''ஒமர் அல் பஷீரின் 'ராஜ்ஜியம்' முடிவுக்கு வந்தது. தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்'' என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

''மேலும், மோசமான மேலாண்மை, ஊழல், நீதியின்மை காரணமாக நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது'' என குறிப்பிட்டார்.

சூடான் அரசமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்லைகள் காலவரையின்றி மூடப்படுவதாகவும் தமது நாட்டின் வான் எல்லை 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச பிடி ஆணை வழங்கியிருக்கிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் சூடானின் மேற்கு டர்ஃபர் பிராந்தியத்தில் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

இருப்பினும், பஷீரின் கைதுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. (BBC Tamil)

Add new comment

3 + 5 =