Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection | Christmas Homily
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - I. எசா: 9:2-4,6-7; II. திபா: 96:1-2.2-3.11-12.13; III. தீத்து: 2:11-14; IV. லூக்: 2:1-14
இந்த உலகத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மனுக்குலத்தின் சின்னச் சின்ன ஆசைகளின் இறுதி வெளிப்பாடுதான் இந்த கிறிஸ்து பிறப்பாகும். ஆண்டவர் இயேசு இருளை அகற்றி ஒளியேற்றும் இளம் ஞாயிறாக பிறந்துள்ளார். இயேசுவின் பிறப்பு அடிமை வாழ்வு வாழ்ந்த மக்களுக்கு விடுதலையை வழங்குவதாக இருக்கின்றது. இருளில் உள்ளவர்கள் ஒளியைக் காணவும் அமைதியின் வழித்தடங்களை உருவாக்கவும் பரிவுள்ளத்தாலும், பாசத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து மண்ணகம் வந்த புதிய விடியலாக இயேசு இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நமக்குச் சுட்டிக்காட்டும் வாழ்வியல் பாடத்தை மறந்து விடுகிறோம். அவற்றைச் சிந்தித்துப் பார்க்க இன்றைய நாளில் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா "இம்மானுவேல்" பற்றி இறைவாக்கு உரைத்தார். "இம்மானுவேல்" என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள். இஸ்ரயேல் மக்கள் அதிகமாக அடிமைத்தனங்களை அனுபவித்துள்ளனர். போரில் தோல்வியுற்று அதன் விளைவாக பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அடிமைகளாக அசிரியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இத்தகைய சூழலில் அவர்கள் கண்ணீரோடும் கவலையோடும் இருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகத் தான் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. "காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது" என்ற இன்றைய இறைவார்த்தை அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. அதேபோல ஒரு ஆண் மகவு கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்" என்ற இறைவசனம் ஆண்டவரின் அளப்பரிய அன்பைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. துன்பத்தில் உழன்று கொண்டிருந்த இஸ்ரேல் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இறைவாக்கினர் எசாயாவின் மூலம் இம்மகிழ்ச்சியான செய்தி இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் பணியில் திருமுகங்களில் மூன்றாவதாக வருகின்ற தீத்துவிற்கு எழுதப்பட்ட திருமுகத்தை நாம் வாசிக்கிறோம். தீத்து ஒரு பிற இனத்து கிறித்தவர். ஆனால் இவர் பவுலின் பயணத்திலும் பணியிலும் உடனிருந்தவர். இந்த பகுதியானது ஒரு கிறிஸ்தவர் எப்படி வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் அன்பு, அமைதி, நல்லொழுக்கம் கொண்டு வாழ இத்திருமுகம் அழைப்பு விடுக்கின்றது. உலகத்திலுள்ள மனிதர் அனைவரையும் மீட்பதற்காகக் கடவுள் தனது அருளை தன்னுடைய மகன் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த மகன் வழியாக அனைவரும் மீட்புப் பெற வேண்டுமென கடவுள் திருவுளம் கொண்டார் என்ற நற்செய்தியை அறிவிக்கும் விதமாக இன்றைய இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அகுஸ்துஸ் சீசர் எல்லா மக்களும் அவர் அவர்களின் சொந்த ஊர்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கட்டளை பிறப்பித்தான். எனவே பேறுகால நேரத்திலும் அன்னை மரியாவை கூட்டிக்கொண்டு சூசையப்பர் சென்றார். போகும் வழியில் பேறுகால வேதனை வரவே அவர்கள் இடம் தேடினர். இவர்களைப் போலவே எண்ணற்ற மக்கள் பெயர்களை பதிவு செய்யச் சென்றதால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு மாட்டுத் தொழுவம் தான் அவர்களுக்கு கிடைத்தது. எனவே இந்த உலகை மீட்க நம்மைத் தேடி வந்த மீட்பர் மாட்டுத்தொழுவத்தில் பிறக்கத் திருவுளம் கொண்டார். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால் எளிமையின் இடத்தில்தான் இயேசு பிறப்பார் என்ற சிந்தனையையே. மேலும் இந்தப் பிறப்பின் நற்செய்தி முதன்முதலாக இயேசு பிறந்த காலத்தில் இழிவானவர்களாக கருதப்பட்ட இடையர்களுக்குத் தான் முதன் முதலாக வானதூதரால் அறிவிக்கப்பட்டது.
இயேசுவின் பிறப்பு நமக்கு எளிமையின் மேன்மையை சுட்டிக்காட்டுகின்றது. அப்படிப்பட்ட எளிமை தான் நமக்கு நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த உலகைப் படைத்த கடவுள் தான் திருவுளம் கொண்டிருந்தால் அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் சாதாரண மாட்டுத்தொழுவத்தில் பிறக்கத் திருவுளம் கொண்டார். உண்மையான எளிமையான மனநிலையில்தான் கடவுள் குடிகொள்வார் இந்த ஆழமான சிந்தனையை வழங்குவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி. இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவில் எத்தகைய மனநிலையோடு நாம் இவ்விழாவை கொண்டாட முன் வருகின்றோம். இன்றைய எதார்த்த சூழலில் எளிமையாக இருக்கவேண்டிய குடிலை மிகுந்த பொருட்செலவில் பல இடங்களில் எழுப்புகிறோம். ஆனால் நம்மோடு வாழக்கூடிய ஒருவேளை உணவு கூட இல்லாத மனிதரை கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதை நிச்சயமாக கடவுள் விரும்புவதில்லை. குடில் எழுப்புவதில் உள்ள ஆடம்பரத்தை விட்டுவிட்டு எளிமையாகக் குடில் அமைத்து மனித நேயத்தில் பாலன் இயேசுவைக் காண முயற்சி செய்யும்பொழுது நிச்சயமாக பாலன் இயேசு அகமகிழ்வார். இதைத்தான் இன்றைய நாளிலே நாம் சிறப்பான விதத்தில் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசுவின் பிறப்புப் பெருவிழா கடவுளின் அளவில்லா கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது. தொடக்கத்தில் கடவுள் மனிதனை "தமது சாயலிலும் உருவிலும் படைத்தார்" (தொநூ: 1: 27) என வாசிக்கிறோம். இது மனித இனத்திற்குக் கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த அங்கீகாரமாகும். அதற்கு மேலாக மனிதன் மீது கடவுள் அன்பு செலுத்திய பொழுதும் மனிதர்கள் மீண்டும் மீண்டுமாக பாவம் செய்து கடவுள் விட்டு பிரிந்து சென்றனர். எனவே கடவுள் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை பாவக் கழுவாயாக இந்த உலகத்திற்கு அனுப்பினார். "வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்" (யோ: 1:14) என்ற வார்த்தை இயேசுவின் பிறப்பின் வழியாக உண்மையாகப்பட்டது. பாலன் இயேசு நம்மை அன்பு செய்வதற்காக இந்த உலகத்தில் வந்திருக்கிறார். இவ்வுலகம் சார்ந்த மக்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் உதறிச் சென்றாலும் நம்மை மீட்க வந்த பாலன் இயேசு நம்மைக் கைவிட்டு விடமாட்டார். நாம் எப்படிப்பட்ட பாவங்களைச் செய்தாலும் அவரிடம் திரும்பி வரும்பொழுது நிச்சயமாக நம்முடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து புது வாழ்வை வழங்குவார். இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் நம்முடைய தீய வாழ்வை விட்டுவிட்டு தூய வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் பாலன் இயேசுவினுடைய அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும்.நாம் சுவைத்த அந்த அன்பை எல்லா மக்களுக்கும் எல்லா படைப்புகளுக்கும் கொடுக்க முடியும்.
இயேசுவின் பிறப்பு பெருவிழா சமூகத்தில் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கொடுப்பதாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புச் செய்தி வானதூதரால் இடையர்களுக்கு "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்று அறிவிக்கப்பட்டது. இது எதைச் சுட்டிகாட்டுகிறது என்றால் கடவுளின் நற்செய்தியானது எளிமையான வாழ்வோடும் எளிய உள்ளத்தோடும் வாழ்பவர்களுக்கு மட்டுமே முதன்முதலாக அறிவிக்கப்படும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. இயேசு பிறந்த காலகட்டத்தில் இடையர்கள் என்பவர்கள் மிகவும் புறந்தள்ளப்பட்டவர்களாக இருந்தனர். ஏழைகளுக்காக நற்செய்தியை எழுதிய லூக்கா இடையர்களை மையப்படுத்துவதன் நோக்கம் இயேசுவின் பிறப்பு ஏழைகளையும் சமூகத்தில் அடையாளம் காணப்படாதவர்களையும் உயர்த்தும் உன்னதமான ஒன்றாகும். எனவே இந்த ஆண்டு நாம் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுகிறோம். நம்மிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையில் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வேண்டுவோம். அவ்வாறு நாம் எல்லோரையும் சமமாக ஏற்றுக் கொள்ளும்பொழுது நிச்சயமாக ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் மகிழ்ச்சி நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.
இயேசுவின் பிறப்புப் பெருவிழா குடும்ப ஒற்றுமையை சுட்டிக்காட்டுகிறது. அன்னை மரியாள் பேறுகால துன்பத்தில் இருந்த பொழுது கணவரான சூசையப்பர் மிகுந்த அன்போடு அன்னை மரியாவை கவனித்துக்கொண்டார். தன்னுடைய சுய விருப்பத்தையெல்லாம் துறந்து அன்னை மரியா வழியாக மீட்பு இந்த உலகத்திற்கு வர தன்னையே முழுவதுமாக கையளித்தார். நல்ல ஒரு கணவராக தன் மனைவி அன்னை மரியாவின் துன்பத்தில் உடனிருந்தார். அதேபோல அன்னை மரியாவும் ஒரு நல்ல மனைவியாக தன் கணவர் சூசையப்பருக்கு கீழ்ப்படிந்து ஒத்துழைப்பு கொடுத்தார். இத்தகைய மனநிலையை இன்றைய சமூகத்தில் வாழும் எல்லா குடும்ப தம்பதியினருக்கு இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்திற்கு வருவதற்கு காரணம் கணவன் மனைவியை புரிந்து கொள்ளாததும் மனைவி கணவனை புரிந்து கொள்ளாததும் ஆகும். இத்தகைய நிலை மாறி ஒருவரை ஒருவர் புரிந்து ஏற்றுக் கொள்ளும் பொழுது நிச்சயமாக கடவுளின் அருளை நாம் பெற முடியும். குடும்பமாக இணைந்து கடவுளை நோக்கி ஜெபிக்கின்ற பொழுது கடவுளின் அருளை நிறைவாகப் பெறமுடியும். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் கணவரும் மனைவியும் சூசையப்பர் மற்றும் அன்னை மரியாவை போல வாழ முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு மகிழ்ச்சியின் விழாவாக இருக்கின்றது. "ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்." (உரோ: 8:3) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மையெல்லாம் மீட்பதற்காகவே கடவுள் தன் மகனை அனுப்பி உள்ளார். அந்த இயேசுவை நாம் முழுமையாக உணர்ந்து நம்முடைய இருள் நிறைந்த பாவ வாழ்வை விட்டுவிட்டு ஒளி நிறைந்த தூய வாழ்வை வாழ முயற்சி செய்யும்பொழுது நிச்சயமாக கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் மன்னிப்பையும் முழுமையாகப் பெற்று நிறைவான மகிழ்ச்சியைப் பெற முடியும். எனவே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் நிறைவான மகிழ்ச்சியைப் பெற்று வளமோடு வாழ தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் ஆண்டவர் இயேசுவை எங்களுக்கு மீட்பராக உலகத்திற்கு அனுப்பிய மேலான அருளுக்காக நன்றி செலுத்துகிறோம். பிறந்துள்ள பாலன் இயேசு எங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியையும் அமைதியையும் தர தொடர்ந்து செபிக்கிறோம். ஆமென்.
Comments
மகிழ்ச்சி திருநாள்,
மகிழ்ச்சி திருநாள், கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்த்துக்களும் ஜெபங்களும்
Add new comment