Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுள் நம்மோடு | யேசு கருணா | Daily Reflection
கிறிஸ்து பிறப்பு பெருவிழா (பகல் திருப்பலி)
I. எசாயா 52:7-10 II. எபிரேயர் 1:1-6 III. யோவான் 1:1-18
ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என்றார். கிதியோன் அவரிடம், 'என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே?' (நீதித் தலைவர்கள் 6:12-13).
'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்ற சொல்லாடலைக் கேட்கும்போதெல்லாம் மேற்காணும் கிதியோனின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு. 'ஆண்டவர் எம்மோடு என்றால் ஏன் இவையெல்லாம் நேரிடுகின்றன?' என்னும் கிதியோனின் கேள்வி மிகவும் எதார்த்தமாகவும், அவருடைய இயலாமையையும் கையறு நிலையை வெளிப்படுத்துவதாகவும், அவருடைய விரக்தி மற்றும் மனச்சோர்வின் வெளிப்பாடாகவும் அமைகிறது.
'ஆண்டவர் உம்மோடு' என்பது முதல் ஏற்பாட்டில் நாம் காண்கின்ற பொதுவான வாழ்த்துரையாக இருக்கிறது. ரூத்து நூலில், பெத்லகேமிலிருந்து வயலுக்கு வருகின்ற போவாசு அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று வாழ்த்த, அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்று பதில்வாழ்த்து மொழிகின்றனர் (காண். ரூத்து 2:4). இரண்டாம் ஏற்பாட்டில், நாசரேத்தூரிலிருந்த கன்னியிடம் கடவுளால் அனுப்பப்படுகின்ற கபிரியேல் தூதர், 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார் (காண். லூக் 1:28).
'ஆண்டவர் உம்மோடு' என்னும் பொதுவான வாழ்த்துரை, 'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்று பெயராக மாறியது எப்படி? 'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்பது வெறும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியா? 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்பதன் பொருள் என்ன? 'கடவுள் நம்மோடு' இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? அப்படி ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் எவை? 'கடவுள் நம்மோடு' என்றால், அவர் மற்றவர்களோடு இல்லையா? பல சமய நம்பிக்கை உள்ள நம் நாட்டில், இத்தலைப்பை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? கோவித்-19 பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர், சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் நடுவே வாழும் நாம், 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற சோர்வுக்கு வரக் காரணம் என்ன?
'இம்மானுவேல்' என்னும் சொல் விவிலியத்தில், முதல் ஏற்பாட்டில் இரண்டு இடங்களிலும் (எசா 7:14ளூ 8:8), மற்றும் இரண்டாம் ஏற்பாட்டில் ஓரிடத்திலும் (மத் 1:23) வருகின்றது. எபிரேயத்தில் இதன் பொருள், 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்பதாகும். எழுபதின்மர் (கிரேக்கம்) பதிப்பிலும் 'இம்மானுவேல்' என்னும் சொல்லாட்சியே பயன்படுத்தப்படுகின்றது. 'ஏல்' ('கடவுள்') என்பது கடவுளுக்கான பொதுப்பெயர். 'யாவே' ('ஆண்டவர்') என்பது இஸ்ரயேல் மக்களின் கடவுளின் தனிப்பெயர். 'ஏல்' என்பது முதல் ஏற்பாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடவுளின் பெயர். முதல் ஏற்பாட்டில் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் இப்பெயர் காணப்படுகின்றது. இவரே படைப்பவராகவும், காப்பவராகவும், அனைத்தையும் ஆண்டு நடத்துபவராகவும் இருக்கின்றார்.
கிமு 735ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா, சிரியாவின் அரசன் ரெஸினுடன் இணைந்து அசீரியாவை எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின் படைகளைத் திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின் அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). அப்படிச் செய்வதற்கு அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், நாட்டின் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார். ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும், அசீரியாவுடன் கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல் என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு கூறு ஆகும். ஆண்டவரைச் சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, 'நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' (எசா 7:12) என்று போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் எசாயா: 'மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களா?' (எசா 7:13).
தொடர்ந்து எசாயா, 'ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்' (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். இந்த அடையாளத்துக்கான விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க மொழிபெயர்ப்பிலும், மத்தேயு நற்செய்தியிலும் (1:23), 'இளம்பெண்' என்னும் சொல்லுக்குப் பதிலாக, 'கன்னி' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில் 'இளம்பெண்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண நம்மால் இயலவில்லை. சில விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின் மனைவியைக் குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள் அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு மகன்களும் அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர் – 'செயார்யாசிப்' ('எஞ்சியோர் திரும்பி வருவர்') (எசா 7:3), 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது') (எசா 8:3). 'இம்மானுவேல்' என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது இவர்களின் கருத்து. இன்னும் சிலர், 'இம்மானுவேல்' என்னும் சொல் ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால், இந்த இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு ஏற்கெனவே ஒன்பது வயது ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப் பொருத்தவரையில், 'இம்மானுவேல்' என்னும் சொல், 'செயார்யாசிப்' என்னும் சொல்லைப் போல பெரிய கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது. ஆகையால்தான், 'இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்' (எசா 8:8) என்று மீண்டும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.
ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அளித்த 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் நம்பிக்கை தருகின்ற வாக்குறுதியா? அல்லது அழிவை முன்னுரைக்கும் அச்சுறுத்தலா? என்னும் கேள்வியும் எழுகிறது. முதலில் இதை மீட்பு மற்றும் ஆசீரின் அடையாளமாகத்தான் எசாயா முன்னுரைக்கின்றார் (எசா 7:4, 7). அப்படி என்றால், ஆகாசின் நம்பிக்கையின்மை அடையாளத்தின் தன்மையை மாற்றிவிட்டதா? 'எப்ராயிமின் தலைநகர் சமாரியா. சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்கமாட்டீர்கள்' (எசா 7:9). 'அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன் உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலைநிலமாக்கப்படும்' (எசா 7:16) என்னும் வாக்கியத்தில் வரும் 'இரு நாடுகள்' என்பது 'சிரியா மற்றும் எப்ராயிமை' குறிக்கிறதா? அல்லது 'யூதா மற்றும் அசீரியாவை' குறிக்கிறதா? என்பதும் தெளிவாக இல்லை. 'யூதா மற்றும் அசீரியாவைக் குறிக்கிறது' என்றால், 'இம்மானுவேல்' அடையாளம் அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும், 'அவன் வெண்ணையையும் தேனையும் உண்பான்' (எசா 7:15) என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'பாலும் தேனும்' பாலைவனத்து உணவே அன்றி, செழிப்பான விவசாய நிலத்தின் உணவு அல்ல. அப்படி எனில், இம்மானுவேல் பிறக்கும்போது அனைத்தும் அழிக்கப்பட்டு நிலம் பாழாக்கப்படுமா? எசாயாவின் இந்தப் பாடம் புரிந்துகொள்வதற்குக் கடினமாகவே இருக்கிறது. பெரும்பாலான அறிஞர்கள், 'இது வாக்குறுதியின் அடையாளம்' என்றே 'இம்மானுவேல்' அடையாளத்தைக் கருதுகின்றனர். 'இம்மானுவேல்' என்னும் பெயரில் இளம்பெண்ணின் நம்பிக்கை அடங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னர் தன் நாடு விடுவிக்கப்படும் என்று அவள் நம்புகிறாள். ஆனால், அந்த நம்பிக்கை ஆகாசுக்கு இல்லை. ஆக, சிரியாவும் எப்ராயிமும், தொடர்ந்து வருகின்ற அசீரியப் படையெடுப்பும் அழிந்துவிடும். எஞ்சியோர் வழியாக யூதாவுக்கு மீட்பு வரும் (காண். எசா 11:11). 'இம்மானுவேல்' என்னும் பெயரைத் தொடர்ந்து வரும், 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது) என்னும் பெயரும் நம்பிக்கை தருகின்ற பெயராக இருக்கிறது. எசா 7:15, 17 என்னும் வாக்கியங்கள் எதிர்மறையான பொருளைத் தந்தாலும், ஒட்டுமொத்த பாடப் பகுதி நேர்முகமான பொருளையே தருகின்றது.
'இம்மானுவேல்' என்னும் சொல்லுக்கும் மெசியா இறைவாக்குக்கும் உள்ள தொடர்பை இங்கே காண்போம். இம்மானுவேல் என்னும் அடையாளத்தைப் பற்றிய புரிதலில், அழுத்தம், 'இளம்பெண்ணுக்கு' தரப்பட வேண்டுமா? அல்லது 'பெயருக்கு' தரப்பட வேண்டுமா? வழக்கமாக, கன்னிப் பிறப்புக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டு பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால், இங்கே பயன்படுத்தப்படுகின்ற 'அல்மா' என்ற எபிரேயச் சொல் 'இளம்பெண்' என்னும் பொருளையே தருகிறது. ஏனெனில், 'கன்னித்தன்மை,' 'பெத்துலா' என்னும் பதத்தால் வழங்கப்படுகிறது. சிலர், 'இளம்பெண்' என்பது 'எருசலேம்' அல்லது 'சீயோன்' நகரைக் குறிக்கிறது என்றும், 'மகன்' என்பது 'எதிர்கால தலைமுறையினர்' அல்லது 'எஞ்சியிருப்போரைக்' குறிக்கிறது என்றும் பொருள்கொள்வர். ஆனால், 'இளம்பெண்' என்ற சொல் அக்காலத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான், 'இம்மானுவேல்' என்பது 'மெசியாவை' குறிக்கிறது என்று சொல்லப்படுகின்றது. நாட்டைக் காப்பாற்றக் கூடிய மீட்பர் ஒருவர் தோன்றுவார் என்று ஒட்டுமொத்த யூதாவும் எதிர்நோக்கியது (காண். 2 சாமு 7:12). அப்படிப்பட்ட ஒருநபரை எதிர்நோக்குகின்ற எசாயா அவருடைய பண்புநலன்களும் பணிகளும் எப்படி இருக்கும் என்பதை முன்மொழிகின்றார்: 'ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ, 'வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும்' (எசா 9:6). அவரில் இறைத்தன்மை முழுமையாகக் குடிகொள்ளும். அவர் 'ஈசாயின் தண்டிலிருந்து' புறப்படுவார். யூதாவில் பொற்காலம் மலரச் செய்வார். தாவீதின் அரியணையைச் சுற்றிலும் பகைவர்கள் நிற்க, அரியணையில் அமர்ந்துள்ள ஆகாசு நம்பிக்கை குன்றியவனாக இருக்கிறார். ஆகவே, உடனடியாக வரவிருக்கின்ற மீட்பரை எசாயா முன்னுரைக்கின்றார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழவிருக்கின்ற 'கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை' எசாயா மனத்தில் வைத்து இறைவாக்குரைத்திருந்தால், 'இம்மானுவேல்' என்ற சொல்லுக்கு உடனடிப் பொருள் எதுவும் இருக்க முடியாது. அது ஆகாசுக்கான அடையாளமாகவும் இருக்க முடியாது. மெசியாவுக்கான காத்திருத்தல் என்பது பேறுகால வேதனை போல அன்று இருந்தது (காண். மீக் 5:3). பாபிலோனியாவிலும் எகிப்திலும் மீட்பர் பிறப்பார் என்ற எதிர்பார்ப்பும் அன்று இருந்தது. இந்தப் பின்புலத்தில் எசாயா, வரவிருக்கின்ற மெசியா பற்றி இறைவாக்குரைக்கிறார்.
மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் பல முதல் ஏற்பாட்டு மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் மேற்கோள்களை எழுபதின்மர் பதிப்பிலிருந்து (கிரேக்கம்) கையாளுகின்றார். குறிப்பாக, இயேசு பிறப்பு நிகழ்வில் பல முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாக முன்மொழிகின்றார். எடுத்துக்காட்டாக, 'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மெசியா பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலே ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' (மத் 2:5-6ளூ மீக் 5:2). முதல் இறைவாக்காக மத்தேயு முன்மொழிவது, ''இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்'' (மத் 1:22-23). இங்கே மத்தேயு, 'இம்மானுவேல்' என்ற சொல்லின் பொருளையும் முன்மொழிகின்றார். மத்தேயு நற்செய்தியார், 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் 'இயேசு' என்னும் 'ஆபிரகாமின் மகனை, தாவீதின் மகனை' குறிப்பதாகப் பதிவு செய்கின்றார்.
யோவான் நற்செய்தியாளர், இதே கருத்துருவை, 'வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்று பதிவிடுகின்றார்.
திருஅவையின் போதனையிலும், கடவுள் நம்மோடு என்ற செய்தி தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய 'அனைவரும் உடன்பிறந்தோர்' (2020) என்னும் சுற்றுமடல் இச்செய்தியை உள்வாங்கி, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் அனுபவம், நாம் ஒருவர் மற்றவருடன் உடனிருக்குமாறு நம்மைத் தூண்ட வேண்டும் என்று கற்பிக்கிறது.
'கடவுள் நம்மோடு' என்பது மூன்று நிலைகளில் பிறழ்வுக்குள்ளாக்கப்படுகிறது. அப்பிறழ்வுகள் எவை எனவும், அவற்றை எப்படிக் களைவது எனவும் அறிதல் முதன்மையான வாழ்வியல் சவால்.
(அ) கடவுள் நம்மோடு இல்லை என்னும் பிறழ்வு
முதல் ஏற்பாட்டில் சில கதைமாந்தர்களை விட்டு கடவுள் நீங்குகின்றார். சோரேக்குப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த தெபோரா சிம்சோனின் தலையை மழித்தபோது, சிம்சோன் நாசீர் விதிகளை மீறியதால் ஆண்டவராகிய கடவுள் அவரை விட்டு நீங்குகின்றார்: 'ஆண்டவர் அவரிடமிருந்து அகன்று விட்டார் என்பதை அவர் அறியவில்லை' (காண். நீத 16:20). சவுல் ஆண்டவராகிய கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்கிறது' (காண். 1 சாமு 16:14). பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் எருசலேம் நகரையும் ஆலயத்தையும் தீக்கிரையாக்கி, யூதா நாட்டினரை நாடுகடத்தியபோது ஆண்டவராகிய கடவுளின் மாட்சி எருசலேம் நகரை விட்டு நீங்குகிறது (காண். எசே 11:23). ஆக, தனிநபர்களும் ஒட்டுமொத்த குழுவும், 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற உணர்வைப் பெறுகிறது. 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது இங்கே ஒரு வாழ்வியல் அனுபவமாக அவர்களுக்கு இருக்கிறது. சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் நம்பிக்கை இழக்கிறோம். நம் அன்புக்குரியவரின் இறப்பு, எதிர்பாராமல் நிகழும் இழப்பு, குணப்படுத்த இயலாத நோய், மீள முடியாத தீய பழக்கம் ஆகியவை, 'கடவுள் என்னோடு இல்லை' என்ற ஒருவித விரக்தி உணர்வை நம்மில் ஏற்படுத்துகிறது. கோவித்-19 பெருந்தொற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது, கடவுள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நாம் உணர்கிறோம். சிலர் தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தவறான செயல்களுக்காகக் கடவுள் தங்களைத் தண்டிக்கிறார் என்று நினைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, அறியாமல் செய்த கருச்சிதைவினால், தங்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் கடவுள் செய்துவிட்டார் என்றும், நாம் ஆன்மிகத்தில் நன்றாக இல்லாததால், கடவுள் நமக்குத் தீமைகளை அனுப்புகிறார் என்றும் சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம். கடவுள் நம் தீச்செயலின் பொருட்டு தன் உடனிருப்பை நம்மிடமிருந்து விலக்கிக்கொள்வதில்லை. ஆக, 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற அவநம்பிக்கையை நம் உள்ளத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
(ஆ) கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்னும் பிறழ்வு
அறிவொளி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே, அறிவு அரியணையில் ஏற்றப்பட்டு, நம்பிக்கை வெளியே விரட்டப்பட்டு வருகிறது. புலன்களால் உணர முடியாத எதுவும் இருத்தல் கொண்டிருப்பதில்லை எனக் கற்பிக்கின்ற அறிவுமைய வாதம் கடவுளையும் புலன்களுக்குள் அடக்கிவிட நினைக்கிறது. ஆக, அறிவொளி இயக்கம் கடவுள் நம்பிக்கையை சுமையாகப் பார்க்கிறது. மேலும், சமயச் சடங்குகள் அனைத்தும் மூட நம்பிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, சமயத்தின் பெயரால் நடந்தேறும் வன்முறை, போர், அறநெறிப் பிறழ்வுகள் ஆகியவற்றைக் காண்கின்ற சிலர், கடவுள் இல்லாமல் இருந்தால் இத்தகைய சண்டைகள் தவிர்க்கப்படலாம் என்றும், கடவுள் இருப்பது நமக்கு ஒரு பெரிய நேர விரயம் என்றும் கருதுகின்றனர். சிலர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஆலயம், அருள்பணி நிலை போன்ற அமைப்புகள் தேவையற்றவை எனக் கருதுகின்றனர். மூன்றாவதாக, கடவுள் நம்மோடு இல்லை என்றால் நாம் விரும்பியதை நம்மால் செய்ய இயலும் என்று சொல்கின்ற சிலர், கடவுள் இருப்பதால்தான் அறநெறிக் கோட்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லி, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என முன்மொழிகின்றனர். யோபும் கூட தன் துன்பத்தின் ஒரு கட்டத்தில், 'என்னுடைய நாள்கள் சிலமட்டுமே. என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்' (யோபு 10:20) என்கிறார். தன் மகிழ்ச்சியைத் தடைசெய்கின்ற நபராக கடவுளைக் காண்கின்றார் யோபு. அறிவுவாதத்தின் கூற்று உண்மை போல இருந்தாலும், வெறும் புலனறிவு மட்டுமே மனித அறிவு அல்ல. புலன்களால் உணர முடியாத பல எண்ணங்கள் நம் மூளையில் இருக்கின்றன. இறையனுபவம் என்பது புலனறிவுக்கு அப்பாற்பட்டது. கடவுள் பெயரால் நாம் பல நேரங்களில் பிளவுபட்டிருந்தாலும், சமயம் மானுடருக்கு அளிக்கப்பட்ட மயக்கமருந்து என்றாலும், சமயத்தின் வழியாக நிறைய மேம்பாடு மனித இனத்தில் நடந்துள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, நீதி போன்ற கோட்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆக, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்ற கூற்று ஆபத்தானது.
(இ) கடவுள் எங்களோடு மட்டும் என்னும் பிறழ்வு
'கடவுள் நம்மோடு' என்ற சொல்லாட்சி, 'கடவுள் எங்களோடு' அல்லது 'கடவுள் எங்களோடு மட்டும்' என்று மாறும்போது சமய அடிப்படைவாதம் தோன்றுகிறது. மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதோடு, தங்களைச் சாராத மற்றவர்களை அழிக்கவும் இது தூண்டுகிறது. கடவுள் யாருடைய தனிப்பட்ட உரிமைப் பொருளும் அல்ல. பல நேரங்களில் கடவுளைக் காப்பாற்றுவதிலும், கடவுள்சார் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிப்பதிலும் நாம் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் செலவழிக்கின்றோம். 'எங்கள் கடவுளே உண்மைக் கடவுள்' என்ற மனநிலையே காலனியாதிக்கத்திற்கும் கட்டாய சமயமாற்றத்திற்கும் வழிவகுத்தது. உண்மைக் கடவுள் யார் என உறுதி செய்ய நடந்தேறிய போர்களை வரலாறு அறியும். கடவுள் எங்களோடு மட்டும் என்ற மனநிலையில்தான் தூய்மை-தீட்டு, மேல்-கீழ், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்னும் பாகுபாடுகள் வருகின்றன. ஆக, 'கடவுள் நம்மோடு' என்பது ஒட்டுமொத்த மானுட அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட குழுவின் அடிப்படைவாத நிகழ்வாக மாறக் கூடாது.
'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்னும் சொல்லாடலின் விவிலியப் பின்புலம், இறையியல் புரிதல், மற்றும் வாழ்வியல் சவால்கள் ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவின்போது நாம் சிந்திக்கும் ஒரு கருப்பொருளாக இது சுருங்கி விடாமல், நம் அன்றாட அனுபவமாக மாறி, நம் உள்ளத்தில் இருக்கின்ற அவநம்பிக்கை அகற்றி, ஒருவர் மற்றவரைக் கொண்டாடவும், நீதியுடன் நடத்தவும் இது நம்மைத் தூண்ட வேண்டும்.
'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு, 'கடவுள் நமக்காக' என்று விண்ணேறிச் சென்றார். கடவுள் நம்மோடு இருக்கிறார் எனில், நாம் அவரோடும், அவர் வழியாக ஒருவர் மற்றவரோடும் இணைந்து நின்றால் எத்துணை நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
Add new comment